Tuesday, January 10, 2012

புத்தகக் கண்காட்சி



பொங்கல் என்றதும் எனக்கு ஞாபகத்துக்கு வரும் இரண்டு முக்கிய விஷயங்களில் ஒன்று: புத்தகக் கண்காட்சி.

போன வருடம் வாங்கிய புத்தகங்களில் இன்னும் சில படிக்காமலே இருக்கிறது. (கண்ணில்படும் புத்தகத்தையெல்லாம் வாங்குவதாலும், நூலகத்தில் பிடித்த புத்தகங்கள் கிடைப்பதாலும் எல்லாவற்றையும் எப்போதும் படிக்கமுடிவதில்லை!)
இன்னும் படிக்கவேண்டியவை:
சுந்தர ராமசாமியின் அழைப்பு
சுந்தர ராமசாமியின் தொலைவிலிருக்கும் கவிதைகள்
தியாகராஜர் கீர்த்தனைகள்
குருஜி வாசுதேவ் அவர்களின் சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்
சுஜாதாவின் சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்
தகழி சிவசங்கரப் பிள்ளையின் செம்மீன்
ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம்

அதனால் இந்த வருடம் இரண்டு புத்தகங்கள் மட்டும்தான் வாங்குவது என்று முடிவெடுத்தேன்.

*****

வழக்கம்போல் நானும், நண்பர் சுப்பிரமணியனும் (சுபம்) சென்றோம். நண்பர் கலைவாணி அவர்கள்  கணவருடனும் தேஜீவோடும் வந்திருந்தார். இந்தமுறை மாலதியும் உண்ணியும் கலந்துகொண்டார்கள். வெகுநாளாய் புத்தக கண்காட்சியை எதிர்பார்த்திருந்த சக்திவேல் எங்களுக்கு முன்னதாகவே வந்திருந்தான் (பெங்களூரிலிருந்து இதற்காகவே!).

சனிக்கிழமை அன்று நல்ல கூட்டம். ஞாயிறு அன்று அதை விட இரண்டு மடங்கு கூட்டம் ( என் தம்பி கமலக்கண்ணன், நண்பர்கள் மணி, முருகானந்தன் & கண்ணனுடன் மறுபடியும் சென்றிருந்தேன்).

*****

பத்து வரிசைகளில் புத்தக பதிவாளர்களின் ஸ்டால்கள் இருந்தன. கிட்டத்தட்ட இரண்டு வரிசைகளில் முழுக்க சி.டி, டி.வி.டி விற்கும் ஸ்டால்களும் இங்கிலீஸ் புத்தக ஸ்டால்களும் இருந்தன.

பொன்னியின் செல்வன் விதவிதமாய் ஒவ்வோரு ஸ்டால்களிலும் பார்க்க முடிந்தது. காவல்கோட்டம் புத்தகமும் நிறைய ஸ்டால்களில் கிடைக்கிறது
திருக்குறள், பாரதியார் கவிதைகள் & பாரதிதாசன் கவிதைகள் போன்ற புத்தகங்களும் பல பதிப்புகளில் கிடைக்கிறது.
சிறுவர்களை கவரும் விதத்தில் பல வண்ணங்களோடு புத்தகங்கள் கிடைக்கின்றன. (வீட்டில் சின்ன பசங்க இருந்தால், கண்டிப்பா கூட்டிட்டு போங்க).

*****

எஸ். ராமகிருஷ்ணன்


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்தது அளப்பரிய சந்தோஷம். அவர் ரசிகர்களுடன் உரையாடியதை அருகிலிருந்து கேட்கமுடிந்தது.

எழுதுவது போல் அவர் பேச்சும் இயல்பாய் இருந்தது. ஒரு வாக்கியத்தின் அர்த்தத்தையும் அழகையும் ரசிப்பதற்குள் அடுத்த வாக்கியத்திற்கு சென்றுவிடுகிறார்!

அவரோடு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவர் எழுத்துக்கள் ஆழமானவை என்றோ தெளிவானவை என்றோ சொல்வதில் என்ன இருக்கிறது. அவர் சொன்னதையே நான் புரிந்துகொண்டேனா என்பதே புரியவில்லை. முதன்முறையாய் வெற்று வார்த்தைகளை பேசாமல் அமைதியாய் நின்றிருந்தேன்.

அவரோடு புகைப்படம் எடுக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு,
மற்ற எழுத்தாளர்களை (கி.ரா, லா.ச.ரா & நகுலன்) அறிமுகப் படித்தியதற்கு நன்றி கூறினேன். நகுலன் கவிதைகளை தேடிக் கிடைக்கவில்லை என்றதும், காவ்யா பதிப்பகத்தில் கிடைக்கும் என்று கூறினார்.
எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ரசிகன் என்பது பெருமை!

*****

மனுஷ்ய புத்திரன் அவர்களை சந்தித்து, அதீதத்தின் ருசி நன்றாக இருந்தது என்றும், குறிப்பாக மழை பற்றிய கவிதை  மிகவும் பிடித்தது என்றும்,

யாவரின் மீதும்
பெய்யும் மழை
யாருமே இல்லாதது போல
பெய்கிறது!

கவிதையையும் அவரிடமே சொன்னேன்.

*****

பாதை இசை நண்பர்களை அவர்களின் ஸ்டாலில் சந்தித்தேன். அவர்களின் இரண்டு புக்கிசைகளும் ரணம்சுகம் & நியான் நகரம் நன்றாக இருந்ததை தெரிவித்தேன்.
குறிப்பாக பாரதி பாடலின் இசை வடிவம் பிடித்துப் போனதை கூறி, சமீர் அவர்களோடு கைக்குலுக்க முடிந்தது.

*****

வாங்கிய புத்தகங்கள்:
எஸ். ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் - விஜயா பதிப்பகம்
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் - கவிதா பதிப்பகம்
நகுலனின் நாய்கள் - காவ்யா பதிப்பகம்
நகுலன் கவிதைகள் - காவ்யா பதிப்பகம்
மனுஷ்யபுத்திரனின் நீராலானது - உயிர்மை பதிப்பகம்
எஸ். ராமகிருஷ்ணனின் சித்திரங்களின் விசித்திரங்கள்- உயிர்மை பதிப்பகம்
ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - மீனாட்சி பதிப்பகம்
பாலகுமாரனின் பிருந்தாவனம் - விசா பதிப்பகம்
பாலகுமாரனின் முதிர்   கன்னி - விசா பதிப்பகம்
சாருநிவேதிதாவின் தேகம் -உயிர்மை பதிப்பகம்
ஜே. கிருஷ்ணமூர்த்தியின் On Relationship - கிருஷ்ணமூர்த்தி ஃபௌன்டேசன்
(ஒவ்வொரு வருடமும் சுபம் ஒரு புத்தகம் வாங்கித்தருவார். இந்த முறை உபபாண்டவம் வாங்கித்தந்தார்.)

*****

புத்தகங்களைப் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, காண்பதற்காகவது கண்காட்சியில் கலந்து கொள்ளுங்கள்!

4 comments:

ரசிகன் said...

பொங்கல் என்றதும் ஞாபகத்துக்கு வரும் இரண்டாவது விஷயம் என்ன? :-) எதையும் சொல்ல ஆரம்பிச்சா complete பண்ணனும்ல..

ரசிகன் said...

இன்னும் படிக்கவேண்டியவை: குறுந்தொகை ?

//அதனால் இந்த வருடம் இரண்டு புத்தகங்கள் மட்டும்தான் வாங்குவது என்று முடிவெடுத்தேன்//
ஒரு தடவ முடிவெடுத்தா அந்த முடிவ நீங்க மதிக்க‌வே மாட்டீங்க போல :-)

ரசிகன் said...

ரசித்தது - ரசிக்க வைத்தது.. Gud idea :)

Dinesh said...

//இரண்டாவது விஷயம்
No.. Public

//குறுந்தொகை
Done :)