Thursday, March 17, 2011

காதல் வந்தால்..


உலகத்தில எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க, நான் ஏன் அவளை லவ் பண்ணனும்?

இந்த கேள்வியை நான் நூறு தடவைக்கு மேல கேட்டுப் பார்த்திட்டேன். பதிலே தெரியலை.

அப்பதான் எனக்குள்ளிருந்த காதல் என்கிட்ட பேசுச்சு. (அதுதான் இந்த பதிவு!)

என்னப்பா ஆச்சு உனக்கு?

காதல் வந்தாலே ஒரே பிரச்சினைதான்!

காதல்ங்கிறது சந்தோஷமான விஷயம்தானே?

காதல் சந்தோஷம்தான். ஆனால் அது கொடுக்குற வலி இருக்குதே.. முள்ளை தேன்ல தடவி விழுங்கிற மாதிரி.

சரி. உனக்கு இப்ப என்ன வேணும்?

அவளை மறக்கனும். நாளைக்கி தூங்கி எந்திருக்கிற போது, அவ ஞாபகமே வரக்கூடாது.

ஓ.. அவளை எத்தனை வருஷமா காதலிக்கிற?

வருஷமா? இன்னியோட அவளை காதலிக்க ஆரம்பிச்சு அஞ்சு நாளாகுது!

அஞ்சு நாள்தானா?

இப்பவே அஞ்சு ஜென்மம் எடுத்த மாதிரி இருக்குது!

ஒக்கே. ரொம்ப அழகா இருப்பாளா?

நல்ல அழகா இருப்பாள். மனசுக்கு பிடிச்ச அழகு.
நமக்கு பிடிச்சவங்க எப்பொழுதுமே அழகா இருப்பாங்கல்ல. அதை விட அழகு.
அவ சிரிக்கும் போது அழகெல்லாம் தெரிச்சு விழும். சுத்தி இருக்கிற இடமெல்லாம் அழகாயிடும்.
அவ கண்ணை பார்க்கும் போது, நான் அழகா ஃபீல் பண்ணுவேன்.
ஜீன்ஸ் சட்டை போட்ட தேவதை மாதிரி இருப்பா!!


காதலிக்கிற பொண்ணுக்கு அழகு மட்டும் போதுமா? நல்ல குணமான்னு பார்க்க வேணாமா?

எல்லோர்கிட்டயும் நமக்கு பிடிச்ச குணமும் இருக்கும் பிடிக்காத குணமும் இருக்கும். பிடிச்சவங்ககிட்ட அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்.  அவளை இப்பவே ரொம்ப பிடிச்சிருக்கு. அப்புறம் என்ன? அவ சிரிக்கும் போது, அழகு மட்டுமல்ல; அன்பும் தெரியுது. பேசும் போது ஒரு ஆதரவு ஃபீல் பண்ணமுடியுது.

அப்ப என்னதான் உனக்கு பிரச்சினை? 

ஒரே ஒரு தடவைதான் பார்த்திருக்கிறேன். ஒரு நிமிஷம்கூட முழுசா இன்னும் பேசல!
அவளை மறுபடியும் எப்ப பார்க்கப் போறேன்னு தெரியலை.
பிறகு பேசி.. பழகி.. எப்ப அவகிட்ட லவ்வை சொல்ல முடியும்னு தெரியலையே!

இவ்வளவு பிரச்சினை இருக்கா?.. அதனால் என்ன கொஞ்சம் டைம் ஆகும் அவ்வளவுதானே!

டைம் கூட பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் அந்த பொண்ணுகூட வேறொரு பையன் சுத்துறானே. அவங்க லவ் பன்றாங்களான்னு சரியா தெரியலை. அதையும் மீறி லவ்வை சொல்லனும்.

நீதான் நல்ல பையன் ஆச்சே. உனக்கு வேற பொண்ணா கிடைக்காது?

என் மனசு அந்த பொண்ணுகிட்டல்ல இருக்குது!

ராமா! ராமா! சரி. உனக்கு இப்ப என்ன வேணும்.

அவளை மறக்கனும். அவ்வளவுதான்.

என்னோட சக்திதான் உலகத்திலியே பெரிசு. கவலைப்படாதே! நான் பார்த்துக்கிறேன்.

என்னது! காதலுக்கு நிறைய சக்தி இருக்கா! ப்ளீஸ் அப்ப அவளையும் என்னை லவ் பண்ண வையேன். நீ கூட சொன்னீல நான் நல்லவன்னு!

கடைசியா காதல் சொல்லிச்சு..
கடவுளே! உலக்கத்தில எத்தனையோ உயிரினங்கள் இருக்கு, நான் ஏன் இந்த மனுசுங்க கூட இருக்கனும்?


Tuesday, March 8, 2011

கோபல்ல கிராமம்


“என் மக்களே,எங்கேயோ ஒரு தேசத்தில் பிறந்து,எங்கேயோ ஒரு தேசத்தில் வந்து வாழ வேண்டியிருக்கிறதே என்று நினைச்சி மனம் கலங்க வேண்டாம்.எல்லாம் பூமித் தாயினுடைய ஒரே இடம்தான்.
அவளுடைய கையிலுள்ள ஒரு விரலிலிருந்து
நீங்க இன்னொரு விரலுக்கு வந்திருக்றீக; அவ்வளவுதான்.நீங்க ஒண்ணுக்கும் பயப்பட வேண்டியதில்லை.உங்களோடேயே சதா நா உங்களுக்குத் துணை இருப்பேன்.” 
ஒரு பாட்டு பாடுவதைப் போல பாட்டி, அம்மன் அருள் வாக்காய் சொன்னாள்.

இது கி.ரா (எ) கி.ராஜநாராயணன் எழுதிய ‘கோபல்ல கிராமம்’ புத்தகத்தில் படித்தது.



தெலுங்கு தேசத்திலிருந்து குடிபெயர்ந்த ஒரு கிராமத்து மக்களின் கதை. அவர்கள் காட்டை அழித்து அந்த கிராமத்தை உருவாக்குவதை அழகாக விவரிக்கிறார்.

கிராமத்திலிருந்த மனிதர்களின் சுவராஸ்யங்களையும் குறிப்பிடுகிறார். மனிதர்கள்தான் எத்தனை சுவராஸ்யமானவர்கள். (பழகி மட்டுமல்ல இந்த புத்தகத்தை படித்தும் தெரிந்து கொள்ளலாம்)

மக்களின் கூட்டு உழைப்பில் வயல்வெளிகள் உருவாகின்றன. குடும்பத்திற்கு தகுந்தாற் போல் பங்கிட்டுகொள்கிறார்கள்.

கொள்ளையர்கள் கிராமத்தை சூறையாட வரும்போது, மக்களின் வீரம் வெளிப்படுகிறது. அவர்களை விரட்டியடிக்கிறது.

ஒரு குற்றவாளி உருவாகும்போது, கிராமம் அவனை தண்டிக்கிறது. 'கழுவில் ஏற்றுதல்' என்ற தண்டனையின் கொடூரத்தில், அவன் மீது இரக்கம்தான் வருகிறது.


இந்த புத்தகம் - கதை மட்டுமல்ல. ஒரு கலாச்சாரத்தின் பதிவு.