Saturday, May 31, 2008

கடவுள்

ஒரு காபி கடையில் விவாதம் ஒன்று ஆரம்பித்தது. அதிலிருந்து ஒரு பகுதி.

முதலில் ஒரு குருடன் பேச ஆரம்பித்தான்:

“சூரியன் ஒளி திரவம் அல்ல; அப்படியிருந்தால் அதை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றில் கொட்டிவிடலாம். அது நெருப்பும் அல்ல; நெருப்பாயிருந்தால் தண்ணீரால் அணைத்துவிடலாம். அது வாயு அல்ல; ஏனெனில் அது கண்ணிற்குத் தெரிகிறது. அது திடப்பொருளும் அல்ல; ஏனெனில் அதை நகர்த்தவும் முடிவதில்லை.”


“ஆகையால் சூரியன் திடம், திரவம், வாயு, நெருப்பும் அல்ல. ஆகையால் சூரியன் என்று எதுவும் இல்லை.”

அதற்கு குருடனோடு வந்த வேலைக்காரன் பதிலளித்தான்:

“எனக்கு சூரியனைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் ஒளியை பற்றித் தெரியும். சிறு விளக்கிலிருந்து வரும் ஒளி கூட இருட்டில் வழி நடத்துகிறது. அதனால் ஒளி தரும் எல்லாமே சூரியன்தான்.”

பக்கத்திலிருந்த கால் இல்லாத முடவன் ஒருவன் அதைக் கேட்டுச் சிரித்து,

“உனக்கு எதுவும் தெரியாது போலிருக்கிறது. சூரியன் ஒரு நெருப்பு பந்து. ஒவ்வொரு நாளும் அது காலையில் கடலிலிருந்து கிள்ம்பி மாலையில் அந்த மலையில் மறைகிறது”, என்றான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த மீனவன் ஒருவன்,

“உங்கள் ஊரைவிட்டு, வெளியே எதையும் பார்த்ததில்லை என்று தோன்றுகிறது. சூரியன் ஒரு நெருப்பு பந்துதான். ஆனால் அது காலையில் கிழக்கு பக்கமுள்ள கடலிலிருந்து கிளம்பி மேற்கு பக்கமுள்ள கடலில் மறைகிறது”, என்றான்.

வயதான கிழவன் ஒருவன், அனுபவம் இல்லாதவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்றான். மேலும் அவன் சொன்னான்:
“சூரியன் ஒரு தேவதை. அவர் பொன் மலையான மேருவைத் தன் ரதத்தில் சுற்றி வருகிறார்.”


எகிப்து கப்பல் அதிகாரி ஒருவன் அங்கே இருந்தான். அவன் சொன்னான்:

“நீ சொல்லுவதும் தப்பு. சூரியன் கிழக்கே ஜப்பானுக்கும் அப்பால் உதயமாகிறது. அது மேற்கே இங்கிலாந்துக்கும் அப்பால் மறைகிறது. சூரியன் உலகம் முழுவதும் பிரகாசிக்கிறது. மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அந்த விஞ்ஞானியை கேளுங்கள்.”

அதுவரை அமைதியாக இருந்தவர் பேச ஆரம்பித்தார்:

“நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை குழப்புகிறீர்கள். சூரியன் பூமியைச் சுற்றிப் போவதில்லை. தினமும் பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது. அதுவும் தவிர இன்னும் சில கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. "

"சூரியன் ஒரு மலைக்காகவே,
ஒரு ஊருக்காகவே மட்டும் பிரகாசிப்பதில்லை.
நமது பூமிக்காக மட்டுமில்லை,
அனைத்து கிரகங்களுக்கும் பிரகாசிக்கிறது.
உங்கள் காலடியில் இருக்கும் தரையை மட்டும் பார்க்காமல்
தலை நிமிர்ந்து வானத்தையும் பாருங்கள்.
புரிந்துகொள்ள முடியும்.”


இவ்வாறு சூரியனைப் பற்றிய விவாதம் முடிந்தது.
------------------------------- **** -----------------------------------
சூரியன் விஷயம் போலத்தான் கடவுள் விஷயமும்.

ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு பிரத்யோகமான கடவுளை கொள்ள விரும்புகிறார்கள். அல்லது தன் தேசத்திற்கு விசேமான கடவுளை நிர்ணயம் செய்கிறார்கள். ஒவ்வொரு மதமும் தன்னுடைய கோவில்களில் தமக்கென்று ஒரு கடவுளை பிரதிஷ்டை செய்து கொள்கிறது. ஆனால் கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர். அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்.


இப்பகுதி “டால்ஸ்டாய் கதைகள்” தொகுப்பிலிருந்து,
“காபிக்கடை சம்வாதம்” என்ற கதையிலிருந்து படிக்கப்பட்டது.