Thursday, August 11, 2011

கண்ணாடி உலகம்


படிப்பதற்கு முன்:
சின்ன வயசில மீன் வாசம் கூட பிடிக்காது. ஆனால் இப்பொழுது மீன் எனக்கு பிடித்த உணவு. எப்படி பிடிக்காத ஒன்று பிடிச்சு போனதோ, அதே மாதிரி பிடித்த ஒன்று பிடிக்காம போயிடிச்சு!

*****

ஒன்றரை அடி நீளம், அரை அடி அகலம், ஒரு அடி ஆழம் இருந்தது அந்த மீன் தொட்டி. அதில கலர் கலரா மீன்கள். அதுங்க குறுக்கும் நெடுக்குமா நீந்திட்டு இருந்துச்சுங்க. சில மீன்கள் வெறுமனே இருந்துச்சுங்க, வேடிக்கை பார்க்கிற மாதிரி.

ஒரு சலூன் கடையில பார்த்தது. ஒரே ஒரு மீன், ஆனால் அது கிட்டத்தட்ட கால் அடி இருந்துச்சு. நாலு எட்டு நீந்தினா, அந்த பக்கம் கண்ணாடிச் சுவர் முட்டும். அது எப்பவும் சும்மாவே இருக்கும். எதோ தியானம் செய்யிற மாதிரி.

கண்ணாடித் தொட்டில மீன்களை பார்க்கிறது சந்தோஷமா இருக்கும்.  ஆனால் இப்பல்லாம் அப்படி பார்க்கிறது பிடிக்கலை (பக்கத்தில் தம்பியோட  கிண்டல்: தட்டுல பார்த்தா பிடிக்குமா?).

Finding Nemo படம் பார்த்திருக்கீங்களா? குட்டி மீனை கடலில் இருந்து பிடிச்சிட்டு போயிடுவாங்க. ஒரு கண்ணாடித் தொட்டியில் போட்டுடுவாங்க. அதை தேடி, அப்பா மீன் கடல் முழுவதும் அலையும். குட்டி மீன் அங்கிருந்து தப்பிச்சு, மீண்டும் அப்பாவோட சேர்வதுதான் கதை. (நல்ல படம், பாருங்க!)

அவ்வளவு பெரிய கடலில் வளர்ந்த மீன்களுக்கு, கண்ணாடித் தொட்டி எவ்வளவு சிறியது?

குளம், குட்டை, கிணத்துல வளர்கிற மீன்கள் கூட, ஒரு சுதந்திரமான உலகத்தில் நீந்த முடியுது. மீன்களால எவ்வளவு தூரம் நீந்த முடியும்! அவைகளை சிறிய கண்ணாடி உலகத்தில அடைச்சு வைக்கிறது சரிதானா?

கூண்டுல இருக்கிற பறவைகளுக்கு பரிதாபப்படும் மனங்கள் கூட மீன்களை கண்டு கொள்வதில்லை.

நம்ம சந்தோஷத்துக்காக மீன்களை அடைச்சு வைக்கிறதை விட, உணவுக்காக மீன்களை சாப்பிடலாம்.

*****

சில நண்பர்கள் சொல்லி இருக்காங்க, மீன்கள் நீந்துவதை பார்க்கும் போது மனசுக்கு ஒரு அமைதி கிடைக்குது.

எனக்கு மட்டும் மனசஞ்சலம் தான் ஏற்படுகிறது. மீன்களோட முட்டைக் கண்களை பார்க்கும் போது, அதுங்க என்கிட்ட கேட்கிற மாதிரி தோன்றுகிற கேள்விகள் பயங்கரமானவை!

கண்ணாடித் தொட்டியில் வளர்கிற மீன்களுக்கும், எனக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு காலத்தில வீட்டுக்கும் பள்ளிக்கும் நீந்தினேன். அப்புறம் காலேஜீக்கு. இப்ப ஆபிஸுக்கும் வீட்டுக்கும் நீந்திட்டிருக்கேன். மீன்கள் கண்ணாடி சுவர்களுக்குள்ள நீந்துற மாதிரி. குறைந்தபட்சம், அந்த மீன்கள் நமக்கு சந்தோஷத்தையாவது கொடுக்கிறது. நாம?


அந்த மீன் தொட்டி, மீன்களுக்கு சிறிய கண்ணாடி உலகம்.
நமக்கு இந்த உலகம், ஒரு பெரிய கண்ணாடி தொட்டி!