Sunday, January 1, 2012

வாழ்தல் இனிதென..



ஒவ்வொரு செயலும் செய்யும் போதும் இரண்டு விதமான முடிவுகளை மட்டுமே எதிர் நோக்கி உலகம் காத்திருக்கிறது.

வெற்றி தோல்விகளை எதிர்பார்த்தே, எல்லோரும் உற்றுநோக்குகிறார்கள். (வெற்றியாளர்களைப் பற்றியோ வெற்றி பெருவதைப் பற்றியோ இங்கு விவாதிக்கப் போவதில்லை. தைரியமாய் படியுங்கள். )

சாதாரன மக்களாகிய நாம், தோல்விகளை கண்டு பயந்து செய்யாமல் விட்டுப் போகும் செயல்கள்தான் எத்தனை?

ஆசைகளைக் கூட அளந்து பார்த்து கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு கணம் மட்டும் வந்து தூக்கிப்போட்ட பேராசைகளை எண்ணிப் பாருங்கள். பேராசைக் கனவுகளை அளந்து பார்க்கலாமா!

*****

பேராசை - பெரிய ஆசை.
இருபத்தெட்டு வயதில் மிருதங்கம் கற்றுக்கொள்ளும் ஆசை அல்லது ஓவியம் வரைய ஆசை. ஆசைப்படுபவருக்கோ இசையை கேட்கும் பழக்கமில்லை; உற்றுப்பார்க்கும் பழக்கமும் அல்லாதவர்.

நிச்சயமாய் இந்த பெரிய ஆசைகளை தூக்கிப் போட்டுவிடுவார். அவருக்குத் தெரியும் இது வெற்றிபெறக் கூடியதல்ல.

வெறும் கால விரயம் என்று கருதுபவர்களுக்கு மட்டும் இந்தக் கருத்து.

*****

எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய கதை (கடலோரக் குருவிகள் புத்தகத்தில் வரும்):

கடலோரமாய் ஒரு மரத்தில் இரு குருவிகள் வாழந்தன. காற்றடித்ததில் அதன் முட்டைகள் கடலுக்குள் விழுந்தன.

குருவிகளுக்கோ வருத்தம். கடலுக்குள் விழுந்த முட்டைகளை எடுப்பது எப்படி! கடைசியில் கடல் நீரை இறைத்து வெளியே ஊற்றுவதென முடிவெடுத்தன.

அவற்றின் சிறிய அலகுகளால் நீரை கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே எடுத்துச் சென்று ஊற்றின. நாட்கள் ஓடின. மனம் தளராமல் நீரை வெளியேற்றின.

பார்த்துக் கொண்டிருந்த கடவுள் கடல் நீரை வற்றச் செய்து, முட்டைகளை குருவிகளை எளிதாக எடுக்கும்படி செய்தார்.

முட்டைகள் கிடைத்தது எப்படி? குருவிகளின் முயற்சியா! கடவுளின் கருனையா!
*****

நாத்திகர்களுக்கும் திருவள்ளுவர் எழுதியிருக்கிறார்.

தெய்வத்தானா காதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.

*****

வெற்றி பெறுவது மட்டும் வாழ்க்கை இல்லை.
தூக்கிப் போடும் முன் ஒருமுறை ஆசையை முயற்சித்துப் பார்க்கலாம். வெற்றியை நோக்கி அல்ல! தோல்வியை நோக்கியே..

தோல்வியுறும் என்று தெரிந்த பின், கவலை எதற்கு? சந்தோஷமாய் முயற்சி செய்யலாமே!

எந்த செயலும் செய்து பார்ப்பது படிப்பினையே! வெறும் கால விரயம் இல்லை.

யாருக்கு வேண்டும் வெற்றி. எல்லோருக்கும் வேண்டியது திருப்தியும் சந்தோஷமும்தான்.

செய்து பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று வருந்தாமல், இன்று கூட சந்தோஷமாய் செய்து பார்க்கலாம்!

நம் ஆசைப்படுவதற்காக செய்யும் சின்ன சின்ன செயல்கள்தான் வாழ்க்கையை சந்தோஷமாய் நிரப்புகின்றன.

கணியன் பூங்குன்றனார் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை,
வாழ்தல் இனிதென மகிழ்ந்து பாருங்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

No comments: