Sunday, November 28, 2010

பூஜ்யம்


கடவுள் ஒரு பூஜ்யம்

பூஜ்யம் - "இல்லை" என்ற ஒரு எண்ணிக்கையை குறிக்கத் தேவைப்பட்ட ஒரு குறியீடு.

கணிதத்தில் மிகவும் தேவையான ஒன்று. இது இல்லாமல் கணிதத்தில் பலவற்றை விளக்கியிருக்க முடியாது. இதுவே மையமாகத் திகழ்கிறது.
பூஜ்யத்திற்கு நேர் எதிர் என்ற மதிப்புகள் கிடையாது (Neither positive nor negative).

ஒரு எண்ணை முன்னிருத்தி பூஜ்யத்தை பின் தள்ளினால், மதிப்பு குறைவு (01).
அதுவே பூஜ்யத்தை முன்னிருத்தினால், நல்ல மதிப்பு (10).




கடவுள் ஒரு பூஜ்யம்!

கடவுள் - இல்லாத ஒன்று என குறிக்கப்படலாம். ஆனால் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்று. இது இல்லாமல் இங்கு பலவற்றை விளக்கவே முடியாது. இதுவே மையமாகத் திகழ்கிறது.

கடவுளின் செயல்களில் நல்லவை கெட்டவை என்று எதுவுமில்லை.

நம்மை முன்னிருத்தி கடவுளை பின் தள்ளினால், மதிப்பு குறைவு.
அதுவே கடவுளை முன்னிருத்தினால், நல்ல மதிப்பு.

சரி போதும் இந்த புதிய ஒப்பீடல்!



கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்ற கேள்விக்கெல்லாம் அப்பாற்பட்டு, கடவுள் தேவைப்படுகிறார்.

எல்லா நம்பிக்கைகளும் கைவிடும் போதும்,
விடையில்லாத கேள்விகளுக்கெல்லாம் கடவுள் தேவைப்படுகிறார்.

நாத்திகர்கள் திறமைசாலிகள். தன்னம்பிக்கை அதிகம் உடையவர்கள். அவர்களுக்கு கடவுள் தேவை இல்லாமல் இருக்கலாம்.

எங்களின் வாழ்க்கை பாதைக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது.
வழுக்கி விழும்போது எழுந்து நடக்க ஒரு தோள் தேவைப்படுகிறது.தேவைப்படுபவர்களுக்கு கடவுள் எல்லாமுமாய் இருக்கிறார்.
பூஜ்யம் என்ற குறியீடு முழுமை என்பதையும் குறிக்கிறது.



கணிதம்
எனக்கு கடவுளை விட மதத்தின் மீது நம்பிக்கை அதிகம்.

கடவுள் பூஜ்யம் என்றால், மதம் என்பது கணிதம்.
கடவுள் வெளிச்சமாய் இருக்க, மதம்தான் வாழ்க்கை பாதையாய் இருக்கிறது.
மதம் - மனிதனின் கலாச்சாரம். பண்பாடு.

எல்லோருக்கும் புரியும்படியாய் பல மதங்களாய் எழுதப்பட்டிருக்கிறது.
அனைத்து மதங்களும் சகமனிதனை நேசிக்கத்தான் சொல்கிறது.
தன் மதம் தெளிவாய் புரியும்போது, பிற மதங்களில் குறைகள் தெரியாது.

இந்த உலகிற்கு தேவையானது
ஒரே மதம் ஒரே கடவுள் அல்ல!
எல்லா மதங்களுக்கும் பொதுவான, அன்புதான்.