Saturday, September 24, 2011

அதீதத்தின் ருசி



அதீதத்தின் ருசி - மனுஷ்ய புத்திரன் அவர்களின் கவிதை தொகுப்பு.



ஒவ்வொரு கவிதையும் ஒருவகையான உணர்வுகளை வெளிப்படுத்தும். கவிஞனின் உணர்வுகளை அப்படியே உணரப்படுவதில்லை என்பதும், படிப்பவரின் மன நிலையைப் பொறுத்து உணரப்படுகிறது என்பது என் எண்ணம்.

ஆனால் இந்த கவிதை தொகுப்பை படிக்கும் போது ஒரு தனிமைக்குள் செலுத்தப்படுவது போல் இருந்தது. ஒரு சில கவிதைகள் மனதுக்குள் வெற்றிடத்தை உருவாக்குகிறது. வெற்றிடம் வலி போன்ற ஒரு உணர்வையும், நிரப்ப வேண்டும் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது.

*****

பிடித்த சில கவிதை வரிகள்:

"சிநேகிதிகளின் கணவர்கள்" என்ற கவிதையில்..

நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று

அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று
ஒரு சிநேகிதியை
'சிஸ்டர்' என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று

"சரியாக வராத புகைப்படங்கள்" என்ற கவிதையில்..

க்ரூப் போட்டாக்களில்
இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதுதான்
வாழ்வின் மிகப்பெரிய நெருக்கடி

மழை என்றொரு தனிமை" என்ற கவிதையில்..(ரொம்ப ரொம்ப பிடிச்சது)

யாவரின் மீதும் 
பெய்யும் மழை 
யாருமே இல்லாதது போல 
பெய்கிறது! 

"என்னைப் போகவிடு" என்ற கவிதையில்..

வெறுமனே காத்துக் கொண்டிருப்பதை விட
இந்த பூமியில் நடப்பதற்கு
வேறு பாதைகளே இல்லையா?
என்னைப் போகவிடு
.............................................
.............................................
வெறுமனே காத்துக் கொண்டிருப்பதை விட
இந்த பூமியில் நடப்பதற்கு
இன்றெனக்கு
வேறு பாதைகளே
இல்லாத போதும்
என்னைப் போகவிடு

*****

நல்ல கவிதை தொகுப்பு. "அதீதத்தின் ருசி"யை ரசித்துப் பாருங்கள்.


Monday, September 19, 2011

நூலகம்


பத்தாவது படிக்கும் போதுதான் முதல் முறையாக 'கட்' அடித்தேன். அது கூட மதிய உணவு வேளையில் பள்ளியை விட்டு வெளியே போனேன். போன இடம் எங்க ஊர் பொது நூலகம்.



அங்கு உறுப்பினரான பின், வாரம் ஒரு முறையாவது செல்லாமல் இருந்ததில்லை. விடுமுறை நாட்களில், வெள்ளிக் கிழமை எடுத்த புத்தகங்களை, படித்து முடித்து ஞாயிற்று கிழமையே திருப்பிக் கொடுத்தது பலமுறை.



நூலகத்திலேயே புத்தகம் படிப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. புத்தகங்கள் எடுத்து வீட்டில் படிப்பதுதான் விருப்பம்.


என்னுடைய ஒவ்வொரு தேடலும் அந்த நூலகத்திலிருந்தே ஆரம்பித்தது. நான் தொலைந்து போகும் போதெல்லாம், எனக்கு புகலிடம் 

கொடுத்து, என்னை திருப்பிக் கொடுத்ததும் அந்த நூலகம்தான். 'நான்’ என்று விளக்கம் கொடுக்கும் வார்த்தைகள் எல்லாம், அங்கிருந்துதான் எடுக்கப்பட்டது. 






எங்க ஊரில் எனக்கு பிடித்த இடமானது, அந்த நூலகம்.


*****

சென்னையில் கடல் எவ்வளவு பிரம்மாண்டமாய் உணர்ந்தேனோ, அது போல்தான் கன்னிமரா நூலகமும் தோற்றம் அளிக்கிறது.

அந்தக் கடலில் பிடித்த புத்தகங்களை தேடுவது எளிதல்ல. அவைகளைக் கண்டுபிடிப்பதற்கு கம்ப்யூட்டரில் தேடும் வசதிகள் உள்ளன. அதனால் குறிப்பிட்ட அலமாரியில் தேடுவது எளிதாயிற்று.

ஆனாலும் நினைத்த புத்தகங்களைத் தேடும் போதுதான், பல புத்தகங்கள் பிடித்தவிதமாய் கிடைக்கின்றன.

வாழ்க்கையில் தேடியது கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்தது பிடிக்கும் இடமாய் இருக்கிறது, நூலகம்!

உங்கள் அருகில் இருக்கும் நூலகத்தை 'மிஸ்' பண்ணாமல், ஒரு முறையேனும் தரிசித்து பாருங்கள்!

*****

பி.கு:
இபோழுது இன்டர்நெட்டில் புத்தகங்களை ரிசர்வ் செய்யவும், எடுத்த புத்தகங்களை புதுப்பிக்கவும், கன்னிமரா நூலகம் வசதிகள் ஏற்படுத்தி உள்ளன.


Thursday, September 15, 2011

ரணம் சுகம்



ஒரு கதை, சில கவிதைகள்,  இசை தொகுப்பு!

'ரணம் சுகம்' என்கிற மியூசிக்கல் நாவல், நான் ரசித்து படித்து/கேட்ட ஒரு புது அனுபவம். 'பாதை' என்கிற மியுசிக்கல் பேண்ட் நண்பர்களின் ஒரு புது முயற்சி.


கதை - நம்ம கற்பனைகளில் கதாபாத்திரங்களை உலா வரச்செய்யும் ஊடம்
கவிதை - வார்த்தைகளோட அழகையும் சுவையையும் ரசிக்க வைக்கும் உணர்வுகளின் தொகுப்பு
இசை - கதை/கவிதைகளால் சொல்ல முடியாம போகும் இடங்களில் கூட நுழையும் காற்று, மொழியை மீறிய அனுபவம்.


இந்த மூன்றையும் தனித்தனியே ரசிச்சிருக்கேன். மூன்றையும் சேர்ந்து அனுபவிக்க கிடைத்த முதல் அனுபவம், ரணம் சுகம் என்கிற புக்கிசை!

*****

"தேடிச்சோறு நிதம் தின்று" பாரதி வரிகள் புதுமையாய் கேட்கும்படி இருந்தது.

எனக்கு பிடித்த பாடல்/கவிதை வரிகள்:

"பெண்ணே  உன் கண்கள் கொஞ்சம் மூடு
தொடர்ந்து மின்னல் பார்க்கும் சக்தி
ஆண்டவன் தரவில்லை எனக்கு"

முனுமுனுக்க வைத்த பாடல் வரிகள்:

"காற்றுள்ளபோதே
தூற்றிக்கொள் விழியே
ஒரு பார்வை அள்ளவிடுவாய் அவளை"
  
கதையில் பிடித்தது:

"பியானோவின் வெள்ளைகளை மட்டுமே வைத்துக்கொண்டு அவளுக்காக மட்டும் நான் செய்த காதல் இசை. அவளை நினைத்து இசையமத்த போது பியானோவின் கருப்பினைத் தொட மனம் வரவில்லை."

இதுதான் காதல் மனசு!

"கடலுக்கு யாரும் உண்மையில் சொந்தமில்லை. வருவார்கள், பார்ப்பார்கள், கால்கள் நனைத்து விளையாடுவார்கள், ரசிப்பார்கள், நேரம் வந்ததும் வீட்டுக்கு செல்வார்கள். அவளும் அதேதான் செய்தாள், வந்தாள், என்னில் சோகம் நனைத்தாள், என் தனிமை கேட்டாள், ரசித்தாள், ரசிக்க வைத்தாள், நேரம் வந்ததும் சென்றுவிட்டாள்."

நல்ல உவமானம்!

*****


புத்தகம் படிக்கும் போது, இடையில நிறுத்தி, இசையோடு பாடலை கேட்பது நல்லாத்தான் இருக்கு!

உங்களுக்கு கூட பிடிக்கும்! படிச்சு/கேட்டுப் பாருங்க..