Saturday, January 21, 2012

பிருந்தாவனம்



பிருந்தாவனம் - மகான் ஸ்ரீ ராகவேந்திரரின் சரிதம் - பாலகுமாரன் அவர்களின் புத்தகத்தை படித்ததில் ஒரு நிறைவு.


பாலகுமாரன் - காதலையும் காமத்தையும் தெளிவாய் சிந்திக்க வைத்தவர். மனிதர்களின் குணங்களையும் சூழ்நிலைகளையும் புரியவைத்தவர். பெண்களிடம் மரியாதை செலுத்தக் கற்றுக்கொடுத்தவர். குறிப்பாய் அகங்காரத்தின் உச்சியினைக் காட்டியவர். தியானம், பக்தி & கடவுள் பற்றி சிந்திக்க வைத்தவர். அவர் எழுத்தின் மூலம் சிந்திக்க ஸ்ரீ  ராகவேந்திரரின் சரிதம் படித்தது சந்தோஷம்.

ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமைகளைப் பற்றி (அவைகளைப் பற்றித் தெளிவில்லாமல் எழுதிவிடுவேனா என்ற அச்சத்தில்) இந்தப் பதிவில் எழுதப் போவதில்லை.

படித்த சில கருத்துக்கள்:-

அஹம் பிரம்மாஸ்மி - என்பது வேத வாக்கியம். யஜுர் வேதத்திலிருந்து எடுக்க்ப்பட்ட ஒரு சொல் வாக்கியம்.

நானே கடவுள் என்று அர்த்தம் கொள்கிறது அத்வைதம். இரண்டல்ல ஒன்று. அதாவது பரமாத்மா என்கிற விஷயத்திலிருந்து இந்த ஜீவன் பிரிந்து வந்து இங்கு வாழ்ந்து மீண்டும் பரமாத்மாவோடு கலக்கிறது.

நானும் கடவுளும் என்று அர்த்தம் கொள்கிறது த்வைதம். இரண்டும் வெவ்வேறானவை. பரமாத்மா ஜீவாத்மா இரண்டும் கலக்க முடியாது. ஜீவாத்மா இடையறாது பரமாத்மாவை வணங்கி, அதற்கு அருகில் இருப்பது (கலப்பது அல்ல).

நிரம்ப பக்தி செய்தால் பரமாத்மாவோடு கலக்கலாம் என்கிறது விசிஷ்டாத்வைதம்.

******

தான் சிறந்த மதவாதி என்று காட்டிக்கொள்ள மற்ற மதத்தைக் கண்டிப்பது ஒரு சாதரணத் தந்திரம்.

தன் மதம் பற்றி எந்த ஞானமும் இல்லாதவனே மற்றவர் மதம் பற்றி நிந்திப்பான். கடவுள் பற்றிய அக்கறை இல்லாதவனே தன் மதம் மட்டும் சிறந்தது என்று வாதிப்பான்.

மதம் முக்கியமே இல்லை. கடவுள் தேடுதல்தான் முக்கியம்.

******

ஆசாரம் - விதிமுறைகளின்படி வாழ்தல் என்று அர்த்தம்.

அவை கணக்கிலடங்கா. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வழிமுறைகள். எல்லாமும் ஆசாரம்தான்.  அது காலத்திற்கு காலம் மனிதர்க்கு மனிதர் வேறுபாடுடைய விஷயம்.

ஆசாரத்தின் நோக்கம் மனிதநேயம். மனித நேயமில்லாத ஆசாரம் உயிரற்ற உடம்பு.

கடவுளைத் தேடுதலை விட்டுவிட்டு சம்பிராதயங்களில் மனம் ஈடுபடுகிறபோது, அது அபத்தமாகிறது. சடங்குகள் மட்டும் வாழ்க்கை அல்ல. அது தாண்டி உண்மையை உணர்தல், கடவுளை அடைதல் மிக முக்கியம்.

******

புத்தகத்தின் கடைசி வரிகள் சில:

மஹான்களின் சரிதம் படிக்கப் படிக்க மனதில் தெளிவும் நம்பிக்கையும் நிச்சயம் ஏற்படும். நல்வழிப் புலப்படும்.

3 comments:

ரசிகன் said...

பிருந்தாவனம் வந்ததும் ப்ளாக் முக்தி அடைஞ்சிடுச்சோ !!! அதுக்கப்புறம் வேற போஸ்ட்ஸ் வரவே மாட்டுது..

ரசிகன் said...
This comment has been removed by the author.
Dinesh said...

ஆபிஸ்ல வேலை பார்க்கச் சொன்னால், எப்படி எழுதறதுங்க?