Monday, December 31, 2012

2012



இந்த வருட லட்சியங்கள் எதையும் ஒழுங்கா செய்து முடிக்க முடியலை. அதனால் என்ன? 2013ல் முடிச்சிடலாம்!

இந்த வருடம் நடந்த மிகவும் சந்தோஷமான விஷயம்:-
- நண்பர்கள் சுப்பிரமனியன் & ஜெயக்கிருஷ்ணன் திருமணங்கள்
- நண்பன் பிரபு - பெண் குழந்தைக்கு அப்பாவானது

ஆச்சர்யமான விஷயம்:-
-புத்தக கண்காட்சியில் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவ்ர்களை சந்தித்து, புகைப்படம் பிடித்துக் கொண்டது!
-என் பிறந்த நாள் அன்று, என்னோட பதிவை பூமி(Bhumi) வெப்சைட் பிளாக்ல போட்டிருந்தாங்க!

நம்ப முடியாத விஷயம்:-
பூமியில(Bhumi) எனக்கு சேஞ்ச் மேக்கர்(Change Maker Award) அவார்டு கொடுத்தது.

வயலின் - கீதம் வந்தாச்சு. இன்னும் சாகித்யம் சரியா வரலை! அதுக்குள்ள ஒரு இடைவெளி.

*****

டில்லி

இந்த வருடத்தை திரும்பி பார்த்தால், வெறும் வேலை மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அடிக்கடி டில்லி போயிட்டு வருவதால், சில சமயம் வீட்டுல் தூங்கி எழுந்திருக்கும் போது "இப்ப எங்க இருக்கிறேன்?" என்ற கேள்விதான் வந்தது!

அந்த அளவுக்கு ஊர் சுற்றி இருக்கிறேன்.

ஜெய்ப்பூர்

 சுதிப்த(Sudipta), அனுபம்(Anupam) கூட இரண்டு நாள் ஜெய்ப்பூர் சுற்றிப் பார்த்தோம். முக்கியமா பிங்க் பேலஸ்ல யானை சவாரி!
நாநிடால்(Nainital)

ஏரிகளின் நகரம் - செஸாங்(Shashank) அவர்களும் வந்திருந்தார். ஏரிகளை சுற்றிப் பார்த்ததை விட, துப்பாக்கியில் பலூனை/பாட்டிலை சுட்டதுதான் அதிகம்.

சிக்கிம்(Sikkim)

வித்தியாசமான அனுபவம். கிருஷ்ணா, தயாளன் & மிதுலாஜ் - காங்டாக்(Ganktok), யும்தாங் வேல்லி(Yumthang Valley) & பெல்லிங்(Pelling) ஒரு வாரம் சுற்றிப் பார்த்தோம். எல்லா இடத்திலும் பனி, மலை, மோசமான ரோடு.. கரணம் தப்பினால் மரணம் அப்படீங்கிறதுக்கான அர்த்தம் தெளிவா புரிஞ்சது

நடிகர் தலைவாசல் விஜயை யும்தாங் வேல்லி போற வழியில் சந்தித்தோம். கடைசியா அவர் எங்க ஹோட்டலுக்குத்தான் வந்தார். டின்னர் சாப்பிடும் போது எல்லோருக்கும் பரிமாறினார்!

திரும்பி வரும் போது.. ஏர்போர்ட் கார் ரிப்பேர் ஆகி, வேற கார் வந்து, பயங்கர வேகமா போன டென்ஷன் இருக்கே.. கிருஷ்ணா பத்து வரியில் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுற அளவுக்கு இருந்தது!

குற்றாலம்

சுப்பிரமணி அவர்கள் திருமணத்துக்குப் போனப்ப, குற்றாலம் போய் பார்க்க முடிஞ்சது. ஐந்தருவியில் தண்ணி கொஞ்சம் வந்தாலும் குளிக்க முடிஞ்சது. கடைசி நாள், தயாளனும் நானும் குற்றாலீஸ்வரை கும்பிட்டு, நான் மட்டும் மெயின் அருவியில் குளித்தேன் (பின்ன துண்டு, துணி எதுவுமே கொண்டு போகலை!)

கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி , திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு ராமு அண்னா கூட போனேன். கடைசி நாள், தயாளன் கூட மறுபடியும் போக முடிஞ்சது. முக்கியமா - காந்திமதி அம்மன் மூக்குத்தி ஜொலிப்பை காத்திருந்து தரிசித்தோம்.

திருச்சி

ஜெயக்கிருஷ்ணன் திருமணம் திருச்சியில் நடந்தது. அப்பா, அம்மா & தம்பி எல்லாரும் திருச்சியை இரண்டு நாள் சுற்றிப் பார்த்தோம். கல்லனை, முக்கூடல், சமயபுரம்; திருவரங்கம் - பிரம்மாண்டமான கோயில்! நிறைய கோயில்கள் போனதில, திருவானைக்கால் கோயிலை மட்டும் அவசரமா பார்க்க வேண்டியதாயிற்று.

ஊட்டி

ஏப்ரலில் அம்மா & அப்பா கூட இரண்டு நாள் ஊட்டி, குன்னூர் சுற்றிப் பார்த்தோம்.

டிசம்பரில் மூன்று நாள், நானும் தம்பியும் பைக் எடுத்திக்கிட்டு ஊட்டியை சுற்றிப் பார்த்தோம். முக்கியமா அவலாஞ்சிக்கு போகிற வழி சூப்பரா இருந்தது. அவலாஞ்சி, அப்பர் பவானி டேம், எமரால்டு டேம் - புது இடங்களைப் பார்க்க முடிஞ்சது. ஊட்டியில் நைட் ஷோ சினிமா (நீதானே என் பொன்வசந்தம்).

*****

நன்றியுரை

வயலின் கற்றுக்கொடுத்த திரு. மதன் மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி.

என்னை விட பிரமாதமாய் செயல்பட்டவர்கள் நிறைய பேர் இருந்தும், என்னைப் பாராட்டி அவார்டு கொடுத்த பூமி(Bhumi) நண்பர்களுக்கு - நான் நன்றி சொல்வதை விட செயலில் காட்டனும்.

என்னோடு விவாதித்து, என்னை தெளிவு படுத்தும் பிரபு ஸார், ரங்கநாதன் ஸார் & C.P. ராகவேந்திரன் ஸார்..

அன்பு செலுத்தும் நல்ல நண்பர்கள் சுப்பிரமணியன், பிந்து, பிரபு, ஜெயகிருஷ்ணன், முருகானந்தன் & அனைத்து நண்பர்களுக்கும்..

'அன்புத் தம்பி' கமலக்கண்ணன்.. என் அப்பா, அம்மா..

உலகம் அழியாமல் காப்பாற்றின கடவுளுக்கு!

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தகங்கள் 2012


பிடித்த புத்தகங்கள்:-

Life of Pi
Paulo Coelho's Eleven Minutes
The Hunger Game
Catching Fire
Mocking Jay 
எஸ். ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்
பா.விஜய் - சில்மிஷியே

***** 

படித்த புத்தகங்கள்:-

தமிழ் & ENGLISH
   
The Gunslinger
Drawing of the Three
Paulo Coelho's Eleven Minutes
Kushwant Singh's The Company of Women
Diary of Wimpy Kid Series (7 books)
The Hunger Game
Catching Fire
Mocking Jay 
     Devil wears Prada
Foundation
Artemis Fowl and The Last Guardian
Life of Pi
Northern Lights
The Subtle Knife

பாலகுமாரனின் பிருந்தாவனம்
எஸ். ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்
சாருநிவேதிதாவின் தேகம்
பாலகுமாரனின் உடையார் (6)
பா.விஜய் - சில்மிஷியே
மனுஷ்யபுத்திரனின் நீராலானது
தகழி சிவசங்கரப் பிள்ளையின் செம்மீன்
ருத்ர வீணை (1 & 2)
சுஜாதாவின் கடவுள்
தேவன் அவர்களின் சீனுப்பயல்
சுஜாதாவின் கடவுள்
பாகிஸ்தான் போகும் ரயில்
புதுமைப்பித்தன் கட்டுரைகள்


Monday, December 3, 2012

குழப்பம்



பிரமிள் அவர்களின் மொழிபெயர்ப்பு கதை "போர்ஹேயும் நானும்" படித்த பின்:
போர்ஹே இப்படித்தான் சிந்தித்திருப்பாரோ!

*****

எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் எழுதிய புத்தகத்தில் பிடித்த விதமாய் பல இருந்தாலும், சில விஷயங்கள் குழப்பமாய் இருக்கின்றன.

சிலவற்றைப் படிக்கும் போது குழப்பமே எஞ்சுகிறது. ஆனாலும் பலரும் பாராட்டும் காரணத்தால், மீண்டும் புரிந்து கொள்ள முயற்சிப்பதை மட்டும் கைவிடுவதில்லை.

சில சமயம் ஒவ்வொரு வார்த்தைகளின் அர்த்தத்தையும் கோர்த்து 'இப்படி இருக்குமோ' என்றும் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அச்சமயங்களில் அதைப் பாராட்டவும் முடியாமல், பிறர் பாராட்டும் போது மறுக்கவும் முடியாமல், ஏற்படும் குழப்பத்தையும் தவிர்க்க முடிவதில்லை.

சில வாசகர்களின் குழப்பமான கடிதங்களைக் கண்டிக்கும் எழுத்தாளர்களின் பதில்கள் சுவராஸ்யமானவை. குறிப்பாய் அந்த வாசகர்களின் கடிதங்கள் ஆரம்பம் முதல் முடிவு வரை தெளிவில்லாமல் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். அவர் அந்தப் புத்தகங்களை முற்றிலும் புரிந்துகொண்டதாய் எழுதியிருப்பார்.
அதற்கான பதில்களில் வாசகர்களை கிண்டலடிக்கும் வாக்கியங்கள் "நம்மையும் திட்டுவது" போன்ற பிரமையும் ஏற்படும்.

பிரமிப்பூட்டும் பல விஷயங்கள் எல்லோருக்கும் புரியும்படியாய் இருப்பதில்லை. பெரும்பாலும் குழம்பியபடியே, தெளிவாய் இருப்பது போல் காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

"எல்லோருக்கும் எதுவும் தெளிவாய் தெரிவதில்லை" என்பது மட்டுமே குழப்பமே இல்லாத ஒன்றாய் இருக்கிறது.


Wednesday, October 24, 2012

பிரபஞ்சம்



எழுத்தாளர் சுஜாதா Coming Of Age in Milky Way புத்தகத்தில் படித்ததாக, பிரபஞ்ச வரலாற்றை சுருக்கமாக 'கடவுள்' என்ற கட்டுரைப் புத்தகத்தில் விவரித்துள்ளார்.

முதன் முதல் ஆதியோடு ஆதியில் காலம், வெளி, சக்தி இம்மூன்றும் தோனிறிய கணத்திலிருந்து துவங்குகிறது பிரபஞ்சத்தின் சரித்திரம்.

பிரபஞ்சம் ஆரம்பித்து 3 நிமிஷம் 42 செகண்டுக்குப் பின் ஹீலியம், ஹைட்ரஜன்  தோன்றியது.

அதன் பின் பத்து லடசம் வருடங்களுக்கு அப்புறம்தான் காலக்ஸி, நட்சத்திரங்கள் தோன்றின. இன்றிலிருந்து 1700 கோடி வருஷம் முன்பு.

450 கோடி வருஷம் முன்னால் சூரியன், மற்ற கிரகங்கள் பிறந்தன. பூமியும் பிறந்தது.

380 கோடி வருஷம் முன்பு, நம் பூமி கொஞ்சம் சூடு குறைந்து இறுகியது.

350 கோடி வருஷம் முன், முதல் நுட்பமான உயிரினம் தோன்றியது.

150 கோடி வருஷம் முன்பு, முதல் தாவரம்.

90 கோடி வருஷம் முன் முதல் ஆண் பெண் பிரிவு.

40 கோடி வருஷம் முன் முதல் பூச்சி.

20 கோடி வருஷம் முதல் மிருகங்கள்.

ஐந்தரைக் கோடி - குதிரை.

மூன்றரைக் கோடி - நாய், பூனை

2 கோடி - குரங்குகள. சுற்றுச் சூழல் இன்றைய நிலை போல.

1.8 கோடி முதல் மனிதன் - ஹோமோ எரக்டஸ்.

6 லட்சம் வருஷம் முன் ஹோமோ ஸேபியன்ஸ் - ஆதி மனிதன்.

36000 வருஷம் முன்பு - நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்தது.

40000 வருஷம் முன் முதல் மனித மொழிகள்.

35000 வருஷம் - முதல் இசைக் கருவி.

20000 - முதல் விவசாயம்.

5600 - முதல் எழுத்துக்கள்.

இதன் பின் நடந்தது. நவீன் இயற்பியல், வானியல், வேதியியல் என்று இன்று வரை வந்து விட்டோம்.

4 நாட்கள் முன்பு - சுஜாதாவின் 'கடவுள்' புத்தகம் படிக்க ஆரம்பித்தது.

அரை மணி நேரமாய் - இந்தப் பதிவு எழுதுவது!!

*****
ஒவ்வொரு மதம் மற்றும் கடவுள் பற்றியும் சுருக்கமாக இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். அறிவியல் பார்வையில் 'கடவுள்' எவ்வாறு தேடப்படுகிறார் என்பதையும் விவரித்துள்ளார்.

படிக்க நல்ல சுவராஸ்யமான புத்தகம்.

*****

அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே

திருவாய்மொழி

அவரவர் தங்கள் அறிவின் படி கடவுளைத் தேடுகிறார்கள்; காண்கிறார்கள். அவரவர் விதிகளின் படி அடைய முடியும்.

அறிவியல் விஞ்ஞானிகளையும் கடவுள் தேடுபவர்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்!

Saturday, October 13, 2012

பசி




பசி - 1

அவனுக்கு நன்றாக பசித்தது. அடையார் ஆனந்தபவனில் பரோட்டா பார்சலுக்காக காத்திருந்தான்.

நேத்து நைட் சிஃப்ட். நல்லா தூங்கிட்டு, சாய்ங்காலம் 5 மணிக்குத்தான் எழுந்திருச்சான். காலையில் ஒரு டீயும் வடையும் சாப்பிட்டது.

அடையார் ஆனந்தபவன் பரோட்டா சூப்பரா இருக்கும். பார்சலுக்கு பதிலாக, சாப்பிட்டே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் கூட வந்தது. தனியாக எப்படி உட்கார்ந்து சாப்பிடுவது.
  
அந்தப் பக்கம் பல விதமாய் ஸ்வீட்கள். குறிப்பாய் ஜிலேபி(இங்கே ஜாங்கிரி என்கிறார்கள்) பார்ப்பதற்கே அழகாய் இருந்தது. லட்டு அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்தால் கோயில் கோபுரம் போலிருந்தது
அப்பா! எவ்வளவு ஸ்வீட்ஸ். தினமும் ஒரு ஸ்வீட் சாப்பிட்டாக் கூட ஒரு மாசம் முழுக்க சாப்பிடலாம் போல் இருக்கே!

கண்டிப்பாய் ஜிலேபி வாங்கனும்.

பரோட்டா பார்சல் வந்தபின், ஜிலேபியும் வாங்கிக் கொண்டான். இரண்டு பைகளையும் பைக்கின் இரண்டு ரியர்வியூ கண்ணாடியில் மாட்டிக் கொண்டான்.

ரூமுக்குப் போய் சாப்பிடலாம். வண்டியை வேகமாக கிளப்பினான்.

கொஞ்ச தூரம்தான் போயிருப்பான். திடீர்னு எங்கிருந்தோ பறந்து வந்த பாலித்தீன் கவர் முகத்தை மூடியதில் தடுமாறி விழுந்தான்.

பைக் கீழே விழுந்ததில் பரோட்டா பார்சல் பறந்து விழுந்தது. இன்னொரு பார்சலில் இருந்த ஜிலேபிகள் நசுங்கிக் கூழாயிற்று.

******


பசி - 2

அவனுக்கு நன்றாக பசித்தது.

கொண்டு போன சாப்பிட்டில், பாதியை ஆபிஸில் இருந்தவர்களே சாபிட்டு விட்டார்கள். சாய்ங்காலம் கிளம்பும் வரை டீக்கு கூடப் போக முடியவில்லை.

ரயில் ஏறுவதற்கு முன், ஒரு கடலைப் பாக்கெட்டையும் மிக்சர் பாக்கெட்டையும் வாங்கிக்கொண்டான்.

ரயிலி ஏறி, கடலையை ரசித்து சாப்பிட்டான். ரயிலில் விற்ற சமோசாவையும் சாப்பிட்டான். வேளச்சேரியில் நின்றிருந்த பஸ்ஸில் ஏறி மிக்சர் பாக்கெட்டையும் முடித்தான். கிளம்பிய பஸ்ஸிலிருந்து ஜன்னல் வழியாக, பாலித்தீன் கவரை வெளியே பறக்க விட்டான்.


******

பசி - 3

அவனுக்கு நன்றாக பசித்தது.

பத்து ரூபாய்தான் பாக்கெட்டில். எப்பொழுதுமே இப்படித்தான், அவன் பசியோடு இருக்கும்படியாய் ஆகிறது.

மயிலாப்பூர் கோயில் அன்னதானத்தைதான் நம்பியிருந்தான். அதுவும் கிடைக்கவில்லை. கையில் காசு உள்ளவர்கள் கூட, பக்தி என்ற பெயரில் ஒரு கட்டு கட்டிவிடுகிறார்கள்.

மீனகளுக்கு எதுவும் போட வேண்டாம் எனறாலும் குளத்தில் பொரியை அள்ளிப் போடுகிறார்கள்.

சாய்ங்காலம் ஆனால் போதும் அவன் கடுப்பாகிவிடுவான். எங்கு பார்த்தாலும் பஜ்ஜி, போன்டாக் கடை. பானிப்பூரிக் கடை, மசாலாப் பொரிக்கடை, சில்லிச் சிக்கன் கடை. இவர்கள் எல்லாம் வீட்டில் போய் சாப்பிடுவார்களா, இல்லையா?

ரயிலில் ஏறி உட்கார்ந்தான். ரயில் எப்பொழுதுமே ஒரு ஹோட்டல் மாதிரிதான் இருக்கும். எல்லோரும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

எதிரில் உட்கார்ந்தவனைக் கண்டதுமே கடுப்பாகிவிட்டது. ஒவ்வொரு கடலையையாய் ரசித்து சாப்பிட்டான். இதில் வேறு, கடலைத் தொப்பையை தூக்கி எறிகிறான்.

அவன் மீது ஒரு தொப்பை விழுந்த போது, ஒரு அறை விடலாம் என்று வெறி வந்தது.

அப்போது வந்த சமோசாவையும் எதிர்த்தாள்  வாங்கி விழுங்கினான். வயிற்றெரிச்சலாய் இருந்தது

நல்லவேளை வேள்ச்சேரி ஸ்டேசன் வந்ததால், எதிர்த்தாள் தப்பினான். இல்லையென்றால், அவனுக்கு வந்த வெறிக்கு..

எதிர்த்தாள் கையில் பாலித்தின் கவரோடு பஸ் ஏறும் வரைக் கூடவே போனான்.

போய்த் தொலையட்டும்! என்று நினைத்தபடி திரும்பி எதிர்பக்கம் நடந்தான்.

சட்டென்று அவன் முன்னாடி, கொஞ்ச தூரம் தள்ளி ஒருத்தன் பைக்கோடு கீழே விழுந்தான். ஒரு பாலித்தின் பார்சல் பறந்து வந்து, அவன் காலடியில் விழுந்தது.

எடுத்துப் பார்த்தால், குருமா வாசனை. அவனுக்கு நன்றாக பசித்தது.

Sunday, August 26, 2012

முடிவிலி



முடிவிலி அல்லது இன்பினிட்டி (Infinity - ∞) பற்றிய விவரங்கள் வியப்பானது! "ஒன் டூ த்ரீ.. இன்பினிட்டி" (One Two Three.. Infinity) புத்தகத்தில் George Gamow எழுதியவை.

கணக்கு, எண்கள் என்று கண்டுபிடிக்கப்படாத காலத்தில், இன்பினிட்டி எப்படி இருந்திருக்கும். 

இரண்டு புத்திசாலிகளுக்கு விவாதப் போட்டி நடந்தது. மிகப்பெரிய எண் எதுவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.

முதல் புத்திசாலி மூன்று 3 என்று பதில் சொன்னார். இரண்டாவது புத்திசாலி ரொம்ப நேரம் யோசித்து, விடை சரின்னு ஒத்துக்கிட்டார்.

அவங்க இருந்த காலகட்டத்தில, மொத்த எண்களே ஒன்று, இரண்டு, மூன்று மட்டும்தான். அதுக்கு மேல சொல்ல வேண்டி இருந்த 'பல' (Many) என்று பயன்படுத்தினாங்க. அப்பொழுது இன்பினிட்டி என்பது பழக்கத்தில் இருந்திருக்கிறது.

மிகப்பெரிய எண்களை கண்டுபிடிக்கிறதும் அதை எப்படி குறிக்கலாம் என்பதும் எல்லாப் பகுதியிலும் விதவிதமா இருந்திருக்கிறது.

*****

நம்ம நாட்டில் நடந்த கதை இது.

ஒரு கணித மேதை சதுரங்க விளையாட்டை கண்டுபிடித்து, அந்த நாட்டு அரசனுக்கு விளக்கி இருக்கிறார். அரசனுக்கும் சதுரங்க விளையாட்டு ரொம்ப பிடிச்சுப் போனதால, என்ன பரிசு வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

கணித மேதை தன் கணிதத் திறமையை பயன்படுத்தி இப்படிக் கேட்டிருக்கிறார்.

"சதுரங்கப் பலகையில இருக்கிற முதல் கட்டத்துக்கு ஒரு கோதுமை கொடுங்க, இரண்டாவது கட்டத்துக்கு இரண்டு கோதுமையும், மூன்றாவது கட்டத்துக்கு நான்கு கோதுமையும்.. இப்படி ஒவ்வொரு கட்டத்துக்கும் அதுக்கு முன்னாடி கொடுத்த கோதுமையின் அளவை விட இரண்டின் வர்க்கமா கொடுங்க"

அரசரும் ".. அவ்வளவு மூட்டை கோதுமை வேண்டுமா" கேட்டிருக்கிறார்.

"இல்லை. அவ்வளவு கோதுமை மணிகள் கொடுத்தாப் போதும்" அப்படின்னு நம்ம கணித மேதை சொல்லி இருக்கிறார்.

அரசரும் அவர் கேட்ட மாதிரி கொடுக்கலாம்னு பார்த்தா.. எவ்வளவு கோதுமை தெரியுமா?
சதுரங்கத்தில் மொத்தம் 64 கட்டங்கள்.

1+21+22+23+..+263

அதாவது மொத்தம் 18,446,744,073,709,551,615 கோதுமைகள். அவ்வளவு அளவு கோதுமையை யாரலும் கொடுக்க முடியாது.

அப்பொழுதே இன்பினிட்டி என்ற முடிவில்லாத எண்ணை இப்படி பயன்படுத்தி இருக்காங்க
.
*****

அதே மாதிரி இன்னொரு கதை.

ஒரு கோயில்ல, ஒரு பூசாரி உலகம் அழியப் போற நாளை எண்ணிக்கிட்டிருந்தாராம். எப்படின்னு ஆச்சர்யமா இருக்குல்ல?

அந்தக் கோயில்ல மூன்று கம்பிகள் தரையில் நடப்பட்டிருந்தது. மொத்தம் 64 தங்கத் தட்டுகள் அதில் சொருகப் பட்டிருந்திருக்கின்றன (Tower of Hanoi). ஒவ்வொரு தங்கத்தட்டும் வெவேறு அளவுல இருந்தன.
Tower of Hanoi

அவர் ஒரு தங்கத் தட்டை முதல் கம்பியில் இருந்து எடுத்து அடுத்த கம்பிக்கு மாட்டுவாரு. ஆனால் எப்பவும் சின்னத் தட்டுதான் பெரிய தட்டு மேல் வர்ற மாதிரி வைப்பாரு. பெரியத் தட்டை சின்னது மேல வைக்கிற மாதிரி ஏற்பட்டா, மூனாவது கம்பியில் வைத்து, அப்புறம்தான் இரண்டாவது கம்பிக்கு கொண்டு வருவாரு.

பழைய கணக்குதான். 64 தட்டையும் ஒரு கம்பியில் இருந்து இன்னொரு கம்பிக்கு கொண்டுவர 18,446,744,073,709,551,615 தடவை நகர்த்தனும்.

ஒரு வினாடிக்கு ஒரு தடவை நகர்த்தினாலும், 15,000,000,000 வருடங்கள் தேவைப்படும். அதுக்குள்ள உலகம் அழிந்து போயிருக்கும்..

*****

அதுக்கப்பறம் கணித மேதைகள் இரண்டு விதமான இன்பினிட்டி எண்களை ஒப்பிட ஆரம்பிச்சாங்க. அதில ஒரு சுவராஸ்யம்!

ஒரு கோட்டில் இருக்கும் புள்ளிகளின் எண்ணிக்கை இன்பினிட்டி.

ஆச்சர்யம் என்னன்னா? ஒரு இன்ச் கோட்டில இருக்கும் புள்ளிகளின் எண்ணிக்கையும், ஒரு மைல் அளவுள்ள கோட்டில இருக்கும் புள்ளிகளின் எண்ணிக்கையும் சமம்.


*****