Saturday, March 23, 2013

சில நேரங்களில் சில மனிதர்கள்



ஜெயகாந்தன் அவர்களின் சில நேரங்களில் சில மனிதர்கள் புத்தகம் - நம் சமூகத்தின் சவால் என்றுதான் படித்தவுடன் தோன்றியது.

அதற்கு முன் அவருடைய சிறுகதை 'அக்னிப் பிரவேசம்' படித்துவிட்டேன் (முதலில் அந்த சிறுகதையைப் படியுங்கள்).

ஒரு கல்லூரியில் படிக்கும் பெண், மழைக்காக ஒருவருடன் காரில் செல்கிறாள். அவள் அசட்டுப்பெண் போல் இருந்ததால், அவன் அவளைக் கற்பழிக்கிறான். அந்தப் பெண்ணின் அம்மாவுக்கு தெரிந்ததும், அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி, தலையில் தண்ணீர் ஊற்றி, எல்லா அழுக்கும் போய்விட்டது என்கிறாள்.

இந்தச் சிறுகதை அக்காலத்தில் ஒரு பெரிய புரட்சியாக இருந்திருக்கிறது. பாவம், ஜெயகாந்தன் அவர்கள், ஏராளமாய் திட்டு வாங்கி இருகிறார்!

ஒருவேளை அவளுடைய அம்மா, அவள் கற்பிழந்ததை மறக்கவில்லையென்றால்? ஊர்முழுதும் தெரிந்திருக்கும். அப்புறம். அதுதான் சில நேரங்களில் சில மனிதரகள் கதை!

நல்ல நாவல்! ஜெயகாந்தன் அவர்களின் சிறந்த படைப்பு.

அந்த கதையில் எனக்குள் உண்டான சில (புரட்சிகரமான! ) எண்ணங்களுக்காக, இந்த பதிவு.

******

கற்பு

கற்பிழத்தல் என்பது சாக்கடைக்குள் விழுந்தது போல்தான். குளித்தால் உடல் நாற்றம் போய்விடும். மனம் எப்பொழுதும் சுத்தமாகத்தான் இருக்கும்! தேவையெல்லாம் மனம் மாற்றம்தான்!


திருவள்ளுவர் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை. கற்பு என்ற வார்த்தையை அகராதியில் இருந்து நீக்கி விடுவோம். அந்த வார்த்தையின் கவர்ச்சியால், கலாச்சாரம் காப்பற்றப்பட்டதோ இல்லையோ, பாவம்! சிலர் மட்டும் அவதிக்குள் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அது வெறும் மாயை என்று பெண்களும், பின் நாமும் புரிந்துகொள்ள வேண்டும்.

புரட்சி

இந்தக்கதை எனக்குப் புரிய வைத்த மிக முக்கியமான விஷயம். புத்திசாலிகளின் மிகப்பெரிய முட்டாள்தனம், இந்த சமூகத்தின் முட்டாள்தனத்தை தனியே எதிர்ப்பது.

இங்கு எல்லோரும் முட்டாள்கள் என்று முதலில் தோன்றும் பின், ஏதோ புரட்சி செய்வதாய் எண்ணிகொண்டு எல்லோரிடம் திமிராய் (அவர்கள் பார்வையில்) நடக்கவேண்டி இருக்கும். அதனால் இங்கு எதுவும் மாறப்போவதுமில்லை.

புரட்சி என்ற விஷயமே பெரும் சவால்தான். சமூகத்தில் இருந்து விலகி நின்றோ, அல்லது எதிர்த்து நின்றோ எதையும் மாற்ற முடியாது!
நிச்சயம் அது தனி மனிதனால் செய்யப்படுவதில்லை. குறைந்தப்பட்சம், அதை நம்பகூடிய சில முட்டாள்களாவது தேவை! அல்லது சில முட்டாள்தனமான செயல்களால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.

குறைந்தபட்சம் இந்தப் பதிவுகள் எழுதுவதன் மூலம்!