Friday, December 31, 2010

2010

நாளை புத்தாண்டு தினம், சந்தோஷம்.

இன்று 2010 வருடத்தின் கடைசி நாள் (உண்மை!).

11 மாதங்கள்
51 வாரங்கள்
364 நாட்கள்
8753 மணி நேரங்கள்
525232 நிமிடங்கள்
31513947 வினாடிகள் கழிந்துவிட்டதா?
நாம்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்றால், நமக்கு முன் வேகமாய் வருடங்கள் ஓடுகின்றன.

அப்படி என்னதான் இந்த வருடத்தில் கிழித்தேன் என்று யோசித்தால், காலண்டரில் தேதியை கூட கிழித்ததில்லை!

கிழித்தல் என்பது தவறான பார்வை.

அப்படி என்னதான் இந்த வருடத்தில் சாதித்தேன் என்று யோசித்தால்...

சபாஷ்! எத்தனை சாதனைகள்!

1. ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்தேன் ( 6 கிலோ எடை கூடிவிட்டது! )
2. நீச்சல் குளத்தில் இறங்கி ( மூச்சிறைக்கும் வரையிலாவது ) நீந்தக் கற்றுக்கொண்டாகிவிட்டது. ( கற்றுக் கொள்ள உதவி செய்த கிருஷ்ண குமார்,  உண்ணி, பிஜூ & ஜோயல் அவர்களுக்கு நன்றி! )
3. கார் ஓட்டக் கற்றதுடன் லைசன்ஸ் வாங்கியாயிற்று. ( கற்றுக்கொடுத்த பவானி டிரைவிங் ஸ்கூல் சேகர் அவர்களுக்கு நன்றி! )
4. பனிச் சறுக்கு (Skiing) , படகோட்டுதல் (White Water Rafting) & பாரசூட்டில் பறத்தல் (Paragliding) என இமாலயச் சாதனைகள்
5. Lord of the Rings, The Hobbit, The Host & Chicken Soup for the souls புத்தகங்கள் படித்தாயிற்று.
6. நிறைய பிளாக் எழுதி வரலாற்றில் இடம் பிடித்தது.


நன்றியுரை

எழுதியவுடன் ஆர்வமாய் படித்து பிழை திருத்தும் என் 'அன்புத் தம்பி' கமலக்கண்ணன்..

என்னுள் ஊறும் சிந்தனகளுக்கெல்லாம் வாய்க்கால் வெட்டும்
நண்பர் சுப்பிரமணியன்,
தோழி பிந்து,
மரியாதைக்குரிய பிபு ஸார், ரங்கநாதன் ஸார் & C.P. ராகவேந்திரன் ஸார்..

என்னுயிரினும் மேலான ரசிகர்களுக்கு ( குறிப்பாக தோழர் தயாளன் அவர்களுக்கு ),

இந்த உலகத்திற்கு மற்றும் பல பேரலல் யுனிவர்ஸ்களுக்கு..

என் அப்பா, அம்மா, என் நண்பர்கள் & கடவுளுக்கு..


நன்றி என்ற வார்த்தையில் சொல்லி முடிக்காமல்,
மேலும் மேலும் எழுதி..
அவர்கள் புகழை பொன்னெழுத்தில் பதிவு செய்தலே தகும்!

Friday, December 24, 2010

சாலை விதிகள்

கார் ஓட்டக் கற்றுக்கொள்ள சென்ற முதல் நாள்..
"இந்த ரோடு எவ்வளவு இருக்கும்?"
"15 அடி", என்றேன்.
"இல்லை அம்பது அடி. கார் ஓட்டும் போது, ரோட்டோட இடப்பக்க பாதியை நாம எடுத்துக்கலாம். மீதியை எதிர்த்தாப்பல வர்றவங்களுக்கு விடனும். அப்படீன்னா இந்த ரோட்டுல நீங்க எவ்வளவு எடுத்துக்குவீங்க?"
"இருபத்தஞ்சு அடி எடுத்துக்கலாம்."
"இருவது அடி ரோட்டுல.."
"பத்து அடி ஸார்"
"அஞ்சு அடி ரோட்டுல.."
"நாலு அடி ஸார். காரோட அகலம் நாலடின்னு ஏற்கனவே சொல்லீட்டீங்க! கணக்குல நான் ஸ்டிராங்"
இப்ப கேள்வி, நிஜமாலுமே நாம பாதி ரோட்டைத்தான் பயன்படுத்துகிறோமா?
இல்லை. எங்க ஏரியாவுல, காலையில முக்கால்வாசி ரோட்டை ரயில்வே ஸ்டேசன் போறவங்க ஆக்கிரமிச்சுவாங்க. சாயுங்காலம் முக்கால்வாசி ரோட்டை திரும்பி வரவங்க ஆக்கிரமிச்சுவாங்க!
எதிர் திசையில் போறவங்களுக்கு எப்பவுமே கஷ்டம்தான்.
இதுதான் எல்லா இடத்திலும் நடக்குது!
அப்படீன்ன சாலை விதிகள் என்னத்துக்கு?

எப்பொழுது மனிதர்கள்(நாம்) சமூகம் என்ற சூழலில் வாழ ஆரம்பித்தோமோ, அப்போழுதே விதிகள் தேவைப்பட்டது. பெரும்பான்மை மனிதர்கள் பயன்படும்படியா விதிகள் உருவாக்கப்பட்டது. விதிகள் சமூகச் சூழலில் ஒழுக்கத்தை உருவாக்கியது.
ஆனாலும் சிலருக்கு விதிகள் விருப்பமின்றியே திணிக்கப்பட்டது. விதிகள் மீறுவதும் இயல்பாயிற்று.

இப்பொழுது சிலர் விதிகளை மீறுவதை பார்த்து, பலரும் மீறுகிறார்கள்.
ரயில்வே கேட்டில் காத்திருக்காமல் செல்வது..
சிக்னலில் பச்சை ஒளிர்வதற்கு முன்..
எதிரில் வருவதற்கு வழிவிடாமல் ரோட்டை ஆக்கிரமித்து செல்வது..
இதில் என்ன தப்பு? பல பேர் பயன்படும்போது விதிகளை மீறுவதில் என்ன தப்பு!


மணாலியிலிருந்து ஏர் பஸ்ஸில் கீழே வந்துகொண்டிருந்தோம்.
ஏர் பஸ்.. மலைப் பாதை என்றாலே சிரமம்தான்.



மேலிருக்கும் படத்திலிருக்கும் வழி போல், ஒரு குறுகலான வழியில் செல்லவேண்டியிருந்தது. அந்த வழியில், ஒரே சமயத்தில் ஒரு வண்டிதான் செல்ல முடியும். அதனால் இரண்டு புறமும் சிக்னல் இருந்தது. ஒரு சமயத்தில் ஒரு திசையில் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.
எங்க பஸ் கிரீன் சிக்னலுக்காக கால் மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தது.
கிரீன் சிக்னல் கிடைத்த பின் முந்நூறு மீட்டர் போயிருப்போம், எதிர்புறமாய் ஒரு கார் வேகமாய் வந்தது.
எங்க பஸ்ஸூம் முன்னே செல்ல முடியாது. அந்த காரும் பஸ்ஸை தாண்டி செல்ல முடியாது. எங்க பஸ்ஸூக்கு பின்னால் பல வாகனங்கள்..
கண்டக்டர் பஸ்ஸிலிருந்து இறங்கி சத்தம் போட்டார். அந்த கார் டிரைவர் புரிந்து கொள்ளாமல், சண்டை போட்டார்.
சண்டை முடிவுக்கு வருவதற்குள், எதிர்புறமும் வாகனங்கள் வந்து சேர்ந்தன.
DEAD LOCK.
டிராஃபிக் இன்ஸ்பெக்டர் வந்து டிராஃபிக் கலைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாயிற்று.
அந்த கார் டிரைவர் கிரீன் சிக்னலுக்காக காத்திருந்திருக்கலாம்!


விதிகளை மீறும்போது பல பேர் அவதிப்பட வேண்டியிருக்கிறது.
பிரச்சினைகளை உருவாக்கும், விதிகளை மீறும் நபர்களில் ஒருவராக நாம் இல்லாமலிருக்கலாம்.

Friday, December 17, 2010

கிருஷ்ணா

கதைக்கு முன்..

இது போன்ற கதைகள் நிறைய எழுதப்பட்டிருக்கிறது. இது என்னுடைய முயற்சி.
இனி கதை..
சில மைக்ரோ செகண்டுகளில், தூங்கிக்கொண்டிருந்த நியுரான் செல்கள் விழித்தன.
மூளையில், படுவேகமாக கான்ஸியஸ் வந்தது.
நான்..
கணேஷ்..
சனிக்கிழமை..
லீவு..
அவன் தூக்கத்திலிருந்து கண் விழித்தான்.

காலண்டரில் வெள்ளிக்கிழமை என்று காட்டியது.
எழுந்திருக்க சோம்பலாகத்தான் இருந்தது. இருந்தும் கட்டிலிலிருந்து இறங்கி, காலண்டரில் தேதியை கிழித்தான்.
வீட்டுக்குள் இருந்து அம்மாவின் சத்தம் கேட்டது.
"கிருஷ்ணா, எந்திருச்சிட்டியா! "
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. யார் கிருஷ்ணா?

ரூமுக்குள் வந்த அம்மா, "கிருஷ்ணா, டீ வேணுமா " என்றாள்.
யாரும்மா கிருஷ்ணா?
நீதான்டா, என்ன பேர் மறந்திடுச்சா?
“அம்மா! நான் கணேஷ்மா”, திகைப்போடு கத்தினான்.
“என்னடா ஆச்சு! டீ வேணுமா? வேணாமா?” என்று கேட்டுவிட்டு, திரும்பி உள்ளே சென்றுவிட்டாள்.

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அம்மா சம்பந்தமில்லாமல் என்னை கிருஷ்ணா என்று கூப்பிடுகிறாள். அப்பா வேறு ஊரில் இல்லை.
அம்மா பின்னாடியே சென்றான்.


அம்மா! அம்மா! என்று கத்தினான்.
உனக்கு என்னடா ஆச்சு!
எம்பேரு கணேஷ்மா!
உனக்கு மொட்டை அடிச்சு காது குத்தின எனக்குத் தெரியாதாடா?. உனக்கு என்னடா வேணும்.
யாரும்மா கிருஷ்ணா! எனக்கு கணேஷ்னு தாம்மா பேர் வச்சீங்க!

ஆமான்டா! எங்க வீட்டுல உனக்கு கணேஷ்னு தான் பேர் வைக்கனும்னு சொன்னாங்க. யார் கேட்டாங்க? உன் பாட்டி
கிருஷ்ணானு தான் பேர் வைப்பேன்னு அடம் பிடிச்சாங்க!
“அது மட்டுமா", என்று மீண்டும் ஆரம்பித்த அம்மா முகம் மாற ஆரம்பித்தது.
உங்க மாமா, தோடுக்கு ஒரு பவுனுக்கு பதிலா அரைப்பவுன் போட்டதுக்கு சண்டை போட்டாங்களே அதை மறக்கவா முடியும். யாராவது ஒரு பவுனுல பெரிய தோடா போடுவாங்களா. உன் சின்ன காது என்னாகிறது?
இதற்கு மேல் அம்மாவிடம் பேச முடியாது, என்று திரும்ப அவன் ரூமுக்கு வந்தான்.


அம்மாவுக்கு என்னமோ ஆயிடுச்சு.
தயாளனை கூப்பிடலாம். குப்பையாக கிடந்த கம்பயூட்டர் டேபிளில் இருந்து செல்போனை எடுத்து கால் பண்ணினான்.
ரிங் போய்கொண்டிருந்தது. இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான்.
ரிங் சத்தம் நின்று, அவனுடைய தூக்கக்குரல் கேட்டது.
"என்னடா கிருஷ்ணா"
ஒன்றும் புரியவில்லை. தயாளனும் என்னை கிருஷ்ணானு கூப்பிடுறான். எல்லாருக்கும் என்ன ஆச்சு!
"தூங்கிட்டிருக்கிறயா, அப்புறம் கூப்பிடறண்டா", காலை கட் பண்ணினான்.


டேபிள் மேலிருந்த பேங்க் பாஸ் புக்கை எடுத்துப் பார்த்தான். அதிலும் கிருஷ்ணா என்று இருந்தது.
இது என்ன குழப்பம்.
பக்கத்திலிருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்துப்பார்த்தான்.
எல்லாவற்றிலும் கிருஷ்ணா என்று எழுதியிருந்தது.
பர்ஸிலிருந்த ஏ.டி.எம் கார்டு
டிரைவிங் லைசன்ஸ்
டிரைன் சீசன் டிக்கெட்
எல்லாவற்றிலும் கிருஷ்ணா!

அவனுடைய காலேஜ் சர்டிபிகேட்,
பிளஸ் டூ மார்க் சீட்
டென்த் மார்க் சீட்
அவனுக்கு கிடைத்த கிரீட்டிங் கார்ட்ஸ்
எல்லாவற்றையும் பார்த்தான். கிருஷ்ணா என்றுதான் இருந்தது.

அவன் பெயர் கணேஷ் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் எப்படி எல்லவற்றிலும் கிருஷ்ணா என்று இருக்கிறது.
அம்மாவிடம் கூட எதுவும் சொல்லவில்லை.
தயாளன் போனில் கூப்பிட்டான். பதினோரு மணிக்கு காபி டேவுக்கு வருவதாக சொன்னான்.
தினேஷும் வருவான்.
அந்த பிரச்சினையை நேரில் சொல்வது என்று முடிவெடுத்தான்.


காபி டே, பதினொன்றரை மணியளவில்..
தயாளனும் தினேஷும் எதிர் டேபிள் அழகான பெண்ணை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

"டேய்! நான் சொல்றதை கேட்கப்போறீங்களா, இல்லையா?" பொறுமையிழந்து கத்தினான்.
தயாளன் கேட்டான், "உனக்கு என்னதான்டா பிரச்சினை".
தினேஷ் இரண்டு பேரையும் பார்த்துவிட்டு, மீண்டும் அந்த பெண்ணை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

அவன் காலையிலிருந்து நடந்த எல்லாவற்றையும் சொன்னான்.
" எங்களுக்கு எந்த சந்தேகமுமில்லை, நீ கிருஷ்ணாதான். நைட்டு சரக்கு ஓவராயிடுச்சா!", தயாளன் கிண்டலடித்தான்.
“நான் கணேஷ்தான்டா. உங்க எல்லோருக்கும் என்ன ஆச்சு!”

"நீ கணேஷ்தான்", தினேஷ் சிரித்தபடியே சொன்னான்.
"பேரலல் யுனிவர்ஸ் பத்தி சொல்லியிருக்கிறேன் ஞாபகமிருக்கா"

"ஆரம்பிச்சிட்டான்" தயாளன் முனுமுனுத்தான்.
ஆனாலும் அவன் சீரியஸாக கவனித்தான்.

"அதாவது நார்நியா படத்தில வர மாதிரி இன்னொரு உலகம் நம்ம உலகத்திலயே இருக்கிறது ஒரு கான்சப்ட்.
இன்னொரு கான்சப்ட்.. ஒவ்வொரு சாய்ஸுக்கும் ஒரு பேரலல் யுனிவர்ஸ் இருக்கும்.
அதாவது இன்னொரு யுனிவர்ஸுல உங்க அம்மா நினைச்சபடி உனக்கு கணேஷ்னு பேர் வச்சிருப்பாங்க.
அதான் நீ.
ஆனா தூங்கி எந்திரிச்ச போது இந்த யுனிவர்ஸுக்கு வந்துட்ட." தினேஷ் பேசி முடித்தான்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. புரிந்த மாதிரியும் இருந்தது.
தயாளன் எதுவும் பேசாமல் இருந்தான்.


வீட்டிற்கு வந்து பேரலல் யுனிவர்ஸ் பற்றி இன்டர்நெட்டில் படித்துப் பார்த்தான்.
எல்லாம் சரி. இது எப்படி சாத்தியம்!

நான் கணேஷ்தான். தூங்கி எந்திரிச்சதிலிருந்து எல்லாமே மாறியிருக்கிறது.
தூக்கத்தில் ஏதாவது பிரச்சினையா?

கூகிளில் ஸ்லீப்பிங் பிராப்ளம் என்று தேடிப்படித்தான்.

சரியான தூக்கமில்லாததால் மனிதனின் மனநிலை பாதிக்கப்படலாம். ஆழ்ந்த தூக்கத்திலிருந்து சட்டென்று விழிக்கும் போது குழப்பம் சோம்பேறித்தனம் நிலை ஏற்படும்.
ஸ்லீப் இனெர்டியா (Sleep inertia*) என்ற பாதிப்பு 4 மணி நேரம் வ்ரை இருக்கலாம். நல்ல ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிக்கும் போது பாதிப்பு கடுமையாகவும் பல மணி நேரம் தொடரலாம்.

படித்தவுடன், அவனுக்கு பயமாகத்தான் இருந்தது. நாளைக்கும் இப்படியே இருந்தால் டாக்டரை பார்க்கலாம்.
சீக்கிரமாகவே படுக்கைக்கு சென்றான். அலுப்பில் உடனடியாக ஆழ்ந்து தூங்கினான்.


காலை..
சில மைக்ரோ செகண்டுகளில், தூங்கிக்கொண்டிருந்த நியுரான் செல்கள் விழித்தன.
மூளையில், படுவேகமாக கான்ஸியஸ் வந்தது.
நான்..
கிருஷ்ணா..
அவன் தூக்கத்திலிருந்து கண் விழித்தான்.

என் பேர் கிருஷ்ணாதான். நேற்று நடந்ததெல்லாம் கனவு போல் இருந்தது.
ஆனாலும் சந்தோஷமாக இருந்தது.

"கிருஷ்ணா.. கிருஷ்ணா..
என் ஃபேவரிட் காட் நீதான் கிருஷ்ணா" சத்தமாக பாடினான்.

வீட்டுக்குள் இருந்து அம்மாவின் சத்தம் கேட்டது.
"கணேஷ், எந்திருச்சிட்டியா! "
*Some sleep disorders are serious enough to interfere with normal physical, mental and emotional functioning.
Sleep Inertia
Sleep inertia refers to the feeling of grogginess most people experience after awakening. Sleep inertia can last from 1 minute to 4 hours, but typically lasts 15-30 minutes. During this period, you are at a reduced level of capacity and may have trouble doing even simple everyday actions.
If someone has been very sleep deprived or has been woken from a deep sleep stage, the sleep inertia can be more severe than normal and may take longer to overcome.