Thursday, October 16, 2014

சமூகவியல்


'இன்னும் எத்தனை நாட்களுக்கு கற்பனை உலகம் பற்றிய புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பாய். நிகழ்காலத்துக்கு எப்பொழுது வருவாய்', என நண்பர் கேட்டார். அதன் பற்றிய சிந்தனையின் விளைவுதான் இந்தப் பதிவு.

முதல் கேள்வி: இந்த சமூக அமைப்பு சரியானாதுதானா?

சரி என்று நிச்சயம் என்னால் சொல்லமுடியாது. எல்லோருக்கும் சரிசமமான வாய்ப்புகளையோ வசதிகளையோ, சமூகம் தருவதேயில்லை. ஏற்றத்தாழ்வுகள் இயற்கை என்றும் ஏற்றுக்கொள்வதும் முடிவதில்லை.

தமிழில் நான் படித்ததில் சில புத்தகங்கள், நமக்கு முன்பு வாழ்ந்தவர்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் புரிந்துகொள்ள முடிவதாக இருக்கிறது.

*****
தோட்டியின் மகன்

 தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதியது. தோட்டி என்று அழைக்கப்படும் மக்கள், கழிப்பிடத்தை சுத்தம் செய்பவர்கள். அதில் ஒருவனுக்கு தான் செய்யும் தொழில் அருவருப்பைக் கொடுக்கிறது. தன்னை பலபேர் மதிக்க வேண்டும் என்று எண்ணத்தில், மற்றவர்களை ஏமாற்றியும் பகைத்துக் கொண்டும் பொருளாதாரத்தில் முன்னேறுகிறான். ஆனாலும் 'உயர்குடி' மக்கள் அவனை மதிப்பதில்லை.

தன் மகனாவது நன்கு படித்து பெரிய ஆளாக ஆசைப்படுகிறான். கடைசியில் அவன் மகனும் படிப்பதை விட்டுவிட்டு, மற்ற பசங்களோடு சேர்ந்து திருடுகிறான். இன்னொரு தோட்டியாக உருவாகுகிறான்
*****
கூகை

சோ.தர்மன் அவர்கள் எழுதியது. பள்ளக்குடியைச் சேர்ந்தவர்கள் கூலி வேலை செய்பவர்கள். உயர்குடி மக்களால் ஒதுக்கப்படுபர்கள். ஆனாலும் அவர்களுக்காக மாடாய் உழைப்பவர்கள்.

ஊரை விட்டுப்போகும் பிராமனர் ஒருவர், தன் நிலத்தை பள்ளக்குடி மக்களுக்கு குத்தகைக்கு விடுகிறார். அதனால் அவர்கள் உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்கிறது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மற்ற இனம் அவர்களுக்குத் தொல்லைகள் கொடுக்கிறது. கோபத்தில் தாழந்த இனத்தைச் சேர்ந்தவன் உயர்குலத்தோனை கொன்றுவிடுகிறான். போலிஸ் மொத்தப் பள்ளக்குடி மக்களுக்கும் கொடுக்கும் தொந்தரவில், அவர்கள் வாழ்க்கை முன்பைவிட மோசமாகி விடுகிறது.
*****
ஏழாம் உலகம்

ஜெயமோகன் அவர்கள் எழுதியது. பிச்சைக்கார்களை வாங்கி, அவர்கள் வாங்கும் பிச்சையில் வாழும் ஒரு முதலாளியின் கதை. அவன் 'நான் கடவுள்' படத்தில் இருப்பது போன்ற கொடூரமான வில்லன் கிடையாது. பிறப்பாலும் வாழ்விலும் ஒதுக்கப்படும் மனிதர்கள் உருப்படிகளாய் வாங்கி, பிச்சையெடுக்கும் இன்னொரு சராசரி ஏழை. அதில் அவன் பொருளாதாரத்தில் முன்னேறுவதும் இல்லை. அவன் குடும்பமும் சந்தோசமாய் வாழ்வதுமில்லை.

இந்தக் கதைகள் எல்லாம், நம் கண்முன்னே வாழ்பவர்களைப் பற்றியதுதான்.  இவர்களையெல்லாம் நாம்தான் ஒதுக்கி வைத்துள்ளோம். நம்மால் என்னதான் செய்யமுடியும்?

*****

பின் குறிப்பு.


புத்தகங்களின் கற்பனை உலகத்தின் சமூக அமைப்பை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.