இது தேவைதானா




இது தேவைதானா? என்று என் தம்பிதான் அடிக்கடி கேட்பான். இந்த அஃறிணை என்ற பதிவு தேவைதானா? என்று என்னை நானே கேட்டதின் பதில், இந்த பதிவு!

வரலாறு

* படிக்கும் பழக்கம் ஆரம்பித்தவுடனே எழுதும் ஆசையும் வந்துவிட்டது.

* காந்தியின் அஹிம்சை கொள்கையை விமர்சிப்பது எனக்கு பிடித்தமான விஷயம். அதனால் அவர் இறக்கும் போது, அஹிம்சையை வெறுப்பதாக எழுதியதுதான் என் முதல் கதை. அதற்கு அஃறினை என்று தப்பாக தலைப்பிட்டு வாரமலர் சிறுகதைப் போட்டிக்கு துணிச்சலாக அனுப்பிவைத்தேன். பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தும் போனேன்.
ஆனால் அனுபவம் இல்லாமல் என்ன எழுதுவது, என்று புரிந்ததும் கதை என்று எழுதுவதை நிறுத்தினேன்.

* நான் தமிழில் எழுதியதைப் படித்துவிட்டு, சில பெண்கள் "கவிதை எழுதுகிறாயா" என்று கிண்டல் அடித்தார்கள். பின்புதான், கவிதை எழுதும் ஆசை வந்தது.

* மழை பற்றிய கவிதையை முதலில் எழுதினேன். திரும்பத் திரும்ப மழையை மட்டுமே பலவிதமாய் எழுதினேன். எல்லாவற்றுக்கும் ஒரே தலைப்பில் "அஃறினை மனிதர்கள்". எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை.

* எல்லோரிடம் சொல்வது போல்தான், தோழியிடம் சொன்னேன் "நான் கவிதை எழுதுவேன்". அவள் கேட்டதற்காக, மறுபடியும் எழுதினேன். "அஃறினை மனிதர்கள்" என்ற மழைக் கவிதை. அவள் நன்றாக இருக்கிறது என்று பாராட்டி அவளே வைத்துக்கொண்டாள்.

* நல்ல வேலை தேடி அலைந்த காலம். பாலை வெயிலாய் சுட்ட பருவம்.  நூலகத்தில் கதைகளையும் கவிதைகளையும் வார்த்தைகளாய் விழுங்கிக் கொண்டிருந்தேன். நட்பின் நிழலில் அமர்ந்தபடி, ஏமாற்றங்களையும் சின்னஞ்சிறிய சந்தோஷங்களையும் கவிதைகளாய் எழுதிக்கொட்டினேன். தோழியே அனைத்தையும் சேகரித்துக் கொண்டாள் ( இன்னும் வைத்திருக்க வாய்ப்பில்லை. கிடைத்தால் இன்னொரு முறைப் படித்துப் பார்க்கலாம்).

* சென்னை எனக்கு மேலும் சில நல்ல நண்பர்களைக் கொடுத்தது. எழுதுவதை விட்டுவிட்டாலும், (இரு) நண்பர்களின் உதவியால் ஓரளவுக்கு தெளிவாய் யோசிக்க ஆரம்பித்தேன்.

* தெளிவாய் யோசிக்கிறேன் என்று எண்ணம் வந்ததும் ஒரு சந்தேகமும் வந்தது: இன்று எது என் தெளிவான கருத்தோ, அதுவே நாளையும் இருக்குமா!

* பதிவு செய்வதற்காக மீண்டும் எழுத ஆரம்பித்தேன். கூகிளில் தேடி சரியானபடி, அஃறிணை என்று பெயரில் தொடங்கினேன்.

பதிவின் நோக்கம்:

* எழுத்தாளானாகும் முயற்சியில்லை இது. ஆனால் இது தமிழில் சரியாக எழுதுவதற்கான பயிற்சி.

* நிறைய ரசிகர்கள் ரசிக்கும் படியாக எழுதுவதற்கல்ல. (எனக்கு புரிந்த) உண்மையை நண்பர்கள் மட்டுமாவது புரிந்துகொள்ளும் வகையில் எழுதுவது.

* படித்த புத்தகங்களைப் பற்றி எழுதப் போகிறேன். விமர்சனம் இல்லை; பிடித்ததை மட்டும் சுட்டிக் காட்டுவதற்காக. !

* இனி நிறைய கதை, கவிதைகளை எழுதப் போகிறேன். ஒரு வரியில் நான்கு வார்த்தைகளுக்கு மிகாமல் இருந்தால், அது கவிதை; இல்லையென்றால் கதை.

* யாருமே படிக்கவில்லை என்றாலும் முடிந்தவரை எழுதுவது ( வேறு வழியில்லை, நண்பர்கள் படித்தே ஆக வேண்டும். இல்லை என்றால் நேரடியாக சொல்லி புரிய வைப்பேன். ஜாக்கிரதை ! ).

பிடிச்சா படிங்க!
பிடிகலைன்னாலும் படிங்க!

No comments: