Monday, October 24, 2011

விடியல்



ரயிலில் கேட்ட ஒரு உரையாடல்..

அப்பாவும் பையனும்

"அப்பா.. எப்ப எக்ஸ்-பாக்ஸ்  வாங்கித் தர்ற?"

"நீ ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கு, அப்புறம் வாங்கித்தரேன்."

"என்னை விட மார்க் கம்மியா வாங்குற ஆனந்த்க்கு அவங்கப்பா பிளே ஸ்டேசன் வாங்கித் தந்திருக்காரு. பிரைஸ் டொன்டி தௌஸன்ட்."
"நீ ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கு. உனக்கு ஒரு லட்ச ரூபாயிக்கு வாங்கித் தரேன்"

"போப்பா நீ.. ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்குனா கவர்மென்டே ரெண்டு லட்சம் தருது. கூட ஒரு லேப்டாப்."

*****

ஆதரவற்ற சிறுவர்களை சந்தித்து, அவர்களுக்கு படிப்பில் நம்பிக்கை ஊட்டவும் உற்சாகப்படுத்தவும் நண்பர்களோடு சென்றிருந்தேன். அவர்களோட பேசிய ஒரு உரையாடல்.

"பெரியவன் ஆனதும் என்ன வாங்கனும்னு ஆசைப்படுற?"

"அண்ணா.. கடலையும் பீச்-சையும் வாங்கப் போறேன்" (சிரிப்பு)

"பெரியவன் ஆகி என்ன பண்ணப் போற?"

"டாக்டர் ஆகப் போறேன். எல்லாருக்கும் உதவி செய்வேன்" (நம்பிக்கை)

"டாக்டர் ஆகனும்னா நல்லா படிக்கனும். நல்லா மார்க் வாங்கனும். உன்னால முடியும். உனக்கு என்ன ஹெல்ப் வேணுமுன்னாலும் எங்ககிட்ட கேட்கலாம். டீச்சர்ட்ட கேக்கலாம். சரியா!"

பையன் தலையை ஆட்டினான் (நல்ல புத்திசாலி)

"கணக்குப் பரீட்சையில எவ்வளவு மார்க் வாங்கின?"

"ஃபெயில் னா" (தலையை குனிந்தான்)

"டேய்.. நீ நல்லாப் படிக்கிற பையன்தானே, அப்புறம் என்னடா? இப்படி படிச்சா எப்படி டாக்டர் ஆவ?"

"இல்லைன்னா, அது வந்து.. ஸ்கூல்ல மழைத்தண்ணீ நிறைய தேங்கி இருந்துச்சு. பரீச்சை அன்னிக்கு காலையில மண் அள்ளிப் போட்டேம். அதான் எழுத முடியலைன்னா" (ஏமாற்றம்)

"பரவால்ல.. நல்லாப் படி!"

*****

நம்பிக்கை ஊட்ட சென்ற நான் நம்பிக்கை இழந்தேன்.

இவர்களுக்கு எப்படி நம்பிக்கை தருவது?

பொய்யான நம்பிக்கையால் இவர்கள் அல்லவா மனக் கஷ்டப்படுவார்கள். இப்படியே விட்டுவிட்டால் இருப்பதை வைத்தாவது சந்தோஷப்படுவார்களே!

கல்வியின் முக்கியத்துவம் இங்கு எல்லோருக்கு தெரியும். ஆனாலும் எல்லோருக்கும் சம்மான தரமான கல்வி வெறும் கதைப் பேச்சுதானா! கனவுதானா?

மாற்றம் என்பது வெறும் ஏமாற்றம் தானா!

எதையுமே மாற்ற முடியாமல், கடைசியில் தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொள்வதுதான் மாற்றமா?

குழப்பத்தின் ஒவ்வொரு படிக்கட்டுகளாய் இறங்கியதில், நம்பிக்கை அதல பாதாளத்தில்!

வாய்ப்பே இல்லாத வியப்புகளை நம்புவது வீண்.

என்னால் யாரையும் ஏமாற்ற முடியாது. என்னால் எதையும் மாற்ற முடியாது!


*****

குழப்பத்தின் குழிக்குள் விழுந்த நான் படுக்கையில் தூக்கத்தை தேடினேன். ஞாபகம் வந்தது எரகான்(ERAGON) புத்தகம்.

அதில் எரகானுக்கு ஒரு கேள்வி வரும்.

"அரசன் கொடியவன். அவனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் அவனுக்கு எதிரான போரில், அதைவிட அதிகமாய் மக்கள் அவதிப் படுகிறார்களே!

வெற்றி வாய்ப்பும் குறைவு. அப்புறம் எதற்காக போராட்டம் செய்கிறாய்? அப்படியே விட்டு விட்டால், மக்கள் கொஞ்சமாவது நிம்மதியாய் இருப்பார்களே!"

இந்தக் கேள்விக்கு கடைசியாய், ஒரு சரியான பதில் கிடைத்துவிடும்.

"கொடிய அரசனால் பாதிக்கப்படுவது இந்த தலைமுறை மட்டுமல்ல; அடுத்தடுத்த தலைமுறைகளும் பாதிப்படையும். எதிர்காலத் தலைமுறைக்காக போராட வேண்டியது முக்கியம்!"

தெளிவு!

*****

ஆதரவற்றவர்களுக்கு தரப்படும் நம்பிக்கையும் கனவும், அடுத்த தலைமுறையிலாவது நடக்கும்!

இருளாய் இருக்கிறது என்று கண்களை மூடிக்கொள்ள முடியாது.
விளக்குகளை ஏற்றி வைப்போம்! விடியாமலா போய்விடும்!

நாளைய விருட்சம் இன்றைய விதையில்!
நாளைய மாற்றம், இன்றைய கனவில்! இன்றைய உழைப்பில்!

Change Today! Change Tomorrow! 

No comments: