Sunday, February 27, 2011

உடுக்கை



"என்னடா டிரஸ் இது ! "
என்று கேட்டவன் - ரேமண்ட் டார்க் ப்ளு பேண்ட், அலன் ஸாலி லைட் ப்ளு சட்டை; இன் பண்ணியிருந்தான். கருப்பு கலர் வுட்லேண்ட் ஷூ.

"இதுக்கு என்னடா.."
என்று சொன்னவன் - சரவணா ஸ்டோர்ஸ் ப்ளூ ஜீன்ஸ் , வெள்ளை சட்டை; இன் பண்ணியிருந்தான். கிரே கலர் ஸ்போர்ட்ஸ் ஷூ.
 அவன் பாட்டுக்கு பேச ஆரம்பித்தான்.

"மச்சான். சரியான கொடுமைடா. நைட் பூரா 'டெல் எபட் யுவர்செலஃப்' க்கு பிரிப்பேர் பண்ணிட்டிருந்தேன். என்னைப் பத்தி சொல்றதுக்கு மனப்பாடம் பண்ண வேண்டியிருக்குது.
என்னடா பார்க்குற. டைம் ஆச்சு. இப்ப டிரைன் பிடிச்சாத்தான் கரெக்டா இருக்கும்"

ரயில்வே ஸ்டேசனுக்குள் நுழைந்தார்கள்.

"என்னடா டிரஸ்ஸூ.. ஜீன்ஸ் பேன்ட் போட்டுட்டு இன்டர்வியுவுக்கு வர்ற"

"ஹச்.ஆர். இன்டர்வியுவுக்கு இது போதும்டா"

"டிரஸ் ரொம்ப முக்கியம்டா. ரிஜக்ட் ஆகறதுக்கு இது ஒரு காரணமா ஆகனுமா ?"

"செலக்ட் ஆகறதுக்கு திறமைதான்டா முக்கியம். டிரஸ் இல்லை"

"நீ போடற டிரஸ்தான் இந்த உலகத்துக்கு உன்னை அறிமுகப்படுத்துது. இந்த பிளாட்பார்ம்ல இருக்குறவங்கள பாரு."

எல்லோரும் எலக்ட்ரிக் டிரைனுக்காக காத்திருந்தார்கள். சிலபேர் ஜீன்ஸ் போட்டிருந்தார்கள். சிலபேர் ஃபார்மல்ஸில் டக் இன் பண்ணியிருந்தார்கள். பெரும்பாலோர் கட்டம் போட்ட சட்டையோ அல்லது கோடு போட்ட சட்டையோ போட்டிருந்தார்கள். வெகுசிலரே டிஸைன் டிஸைனாய் சட்டை போட்டிருந்தார்கள்.
 "அங்க பாரு, கருப்பு பேன்ட் வெள்ளை சட்டை. இன் பண்ணிட்டு ஷூ போட்டிருக்காரே, அவரை பார்த்தா என்ன தோனுது?"

"பார்த்த சேல்ஸ்மேன் மாதிரி இருக்காரு.."

"கரெக்ட். அவர் அப்படி டிரஸ் பண்ணினாதான், பார்க்கும் போதே நம்பிக்கை வருது"

" மச்சான். இப்பல்லாம் யாரும் டிரஸ்ஸை பார்த்து நம்பறதில்லை. திருடங்க கூட இப்ப டிப்-டாப்பாத்தான் வராங்க"

" அப்ப அங்க ஒருத்தர் கருப்பு கலர் பேன்ட், பச்சை சட்டை - ரப்பர் செருப்பு பேட்டிருக்காரே, அவர் உங்கிட்ட பேசினா, நிஜமாலும் மதிச்சு மரியாதையா பேசுவியா?"

"முதல்ல யாரும் தெரியாதவங்ககிட்ட நிஜமாலும் மதிச்சு பேசறதில்லை. டிரஸ்ஸுக்காக மதிக்கலாம். ஆனா நல்லா தெரிங்சவங்க மேலதான் நிஜமாலும் பரியாதை வரும் டா "

"என்னோட பாய்ன்ட். உன்னோட டிரஸ் உன்னை தெரியாதவங்ககிட்ட கூட மரியாதை வாங்கித் தருது!"

"நீ சொல்ற மாதிரி நல்லா டிரஸ் பண்ணிட்டு, கொஞ்சம் கூட முகத்தில சிரிப்பில்லாம ஒருத்தர் கடுப்பா இருக்கிறவர் மேல மரியாதை வருமா? ஆனா கிழிஞ்ச சட்டை போட்டிருந்தாலும் சிரிச்ச முகமா இருக்கிறவர் மேல கொஞ்சமாவது மரியாதை வரும்"

"சரிடா.. கிழிஞ்ச டிரஸ் போட்டுக்கிட்டு இன்டர்வியுவுக்கு வா. நிஜ வாழ்க்கையில் உன் தத்துவம் எப்படி இருக்குதுன்னு பார்க்கலாம்."

அவன் பேசிக்கொண்டே அருகில் இருந்த ப்ளு கலர் 'நீள' மரபெஞ்சில் உட்கார்ந்தான். பெஞ்சிலிருந்த செடியை (கிளை) தள்ளும் போது, ப்ளு கலர் பெயின்ட் கையில் அப்பியது.

அப்பொழுதுதான் அந்த பெஞ்சிற்கு பெயின்ட் அடித்திருந்திருக்கிறார்கள். கொஞ்ச தூரம் தள்ளியிருந்த வேறொரு பெஞ்சிற்கு பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
“புல் சிட்" அவன் துள்ளி எழுந்தான். ரேமன்ட் டார்க் ப்ளு பேன்டில் லைட் ப்ளு பெயின்ட் அப்பியிருந்தது.


‘ஹஹ் ஹா.. ஹஹ் ஹா..’ ஜீன்ஸ் பேன்ட் நண்பன் சிரித்தான்.

பர்ஸ்யுட் ஆஃப் ஹேப்பினஸ் படத்தில வில் ஸ்மித், டிரஸ்ஸில பெயின்டோட இன்டர்வியுவுக்கு இப்படித்தான் வருவான். அவன மாதிரியே உனக்கும் கண்டிப்பா வேலை கிடைச்சிடும்”  கிண்டலடித்தான்.

நான் இன்டர்வியுவுக்கு வர்லடா”

***(முற்றும்)***


பி.கு.

பெயின்ட் அடித்த கொஞ்ச நேரத்தில் மட்டும், மொத்தம் மூன்று பேர் பெயின்ட் அப்பிக் கொண்டதாக, பெயின்ட் அடித்தவர் ‘வருத்தமாய்’ சொன்னார்.

செடிகளை பிடிங்கி, அப்பொழுது பெயின்ட் அடித்த பெஞ்சில் போட்டார்.

Thursday, February 24, 2011

பாரம்பரிய நம்பிக்கைகள்



டில்லிக்கு ரயிலில் செல்வதில் எனக்கு பிடிச்ச விஷயம் - நீண்ட நாட்களாய் படிக்காமல் வைத்திருக்கும் புத்தகத்தை படிக்கலாம்.

இந்த முறை நான் படித்த புத்தகம். ஜெய்ஷ்ரீ மிஸ்ரா வின் 'ஏன்ஷியன்ட் பிராமிஸஸ்' (Jayshree Misra’s ‘Ancient Promises’).



இந்த ஆங்கில புத்தகத்திற்கு தமிழ் தலைப்பு யோசிப்பதில்தான் சிரமம்.

*****

இந்த கதை ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பற்றியது - காதல், திருமணம் , டைவோர்ஸ், தாய்மை.

நமது கலாச்சாரத்தில் ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கையை அலசுகிறது. அந்த திருமணக் கட்டுக்குள் வாழ்வதற்கான சமரசங்களையும் மீறுவதற்கான சந்தர்ப்பத்தையும் கதையாய் சொல்லப்பட்டிருக்கிறது.

டில்லியில் பிறந்து வளரும் ஒரு கேரளப் பெண் நவீன கலாசாரத்திற்கும் கேரளப் பராம்பரிய வாழ்க்கை முறைக்கும் சமரசம் செய்ய நேரிடுகிறது. அவளுடைய முதல் சமரசம்.

அவள் பள்ளியில் சகமாணவிகளிடம் 'தென்னிந்திய குணங்களுக்கான' கிண்டலுக்கிடையிலும் அவர்களின் நட்பும் கலாச்சாரமும் இயல்பாகிறது. அதே சமயம் கேரளாவில் 'டெல்லிப் பெண்' என்று அந்நியமாகிறாள்.

பள்ளிக்கூட காதலையும், பருவ வயது அத்துமீறல்களையும் அனுபவிக்கிறாள். ஆனால் பெற்றோர்களின் குறுக்கீட்டால் கேரளாவில் பணக்கார குடும்பத்திற்கு வாழ்க்கைப்படுகிறாள்.

இங்கு திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் உறவு மட்டுமல்ல. இரு குடும்பங்களின் புது உறவு. பெரும்பாலும் பெண், ஆணின் குடும்பத்திற்கு ஏற்ப மாற வேண்டியுள்ளது. கணவனின் குடும்பம் அவளிடம் அந்நியத்தன்மையுடன் இருக்க, அவளுடைய எல்லா சம்ரசங்களும் ஒட்டாமல்- அந்நியமாய் இருக்கிறாள்.

மிகப்பெரிய சோகம் - அவளுக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு மனநிலை சரியில்லை! அவள் கணவனும் புகுந்த வீடும் 'சற்று தள்ளியே' நிற்கிறார்கள்.


(இந்த கதையில் பிடித்த விஷயம்) தன் குழந்தையை மனநிலை சரியில்லாதவர்களுக்கான 'சிறப்பு' பள்ளியில் சேர்க்க விரும்புகிறாள். தன் குடும்பத்தை மீறி ஒரு பள்ளியில் சேர்த்து, அங்கேயே வேலையும் செய்கிறாள்.

வெளிநாட்டில் இவர்கள் சாதரணமாய் நடத்தப்படுவதும், ஸ்பெஷலாக பள்ளியில் சேர்த்து வழிநடத்துவது அறிகிறாள். அதற்காக பட்டப் படிப்பை முடித்து, வெளிநாட்டில் 'ஸ்பெஷல் எடுகேஷன்'(special education) கோர்ஸில் சேரவதற்கான  முயற்சிகளை மேற்கொள்ளுகிறாள்.

இச்சூழலில் மீண்டும் தன் பள்ளிக் காதலனுடனான சந்திப்பில், ‘அத்துமீறுகிறாள்’. அவன் தரும் நம்பிக்கையில், திருமணக் கட்டுக்குள்ளிருந்து வெளியேற முயற்சிக்கிறாள். 

பாரம்பரிய நம்பிக்கையிலிருந்து அத்துமீறுகிறுவதற்கான தண்டனையை அனுபவித்து, கடைசியில் விடுபடுகிறாள்.

காதலனுடன் சேர்வதும், தன் குழந்தைக்கான போராட்டம் முடிவுக்கு வருவதும் - புதிய நம்பிக்கை.

*****


மனநிலை பாதிப்புக்குள்ளான குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே இன்னும் வைத்திருப்பது சரியா? அவர்களுக்காக பள்ளிகூடமும் படிப்பும் உண்டடென்றால் நம் நாட்டில் என்று சாதரணமாய் வழங்கப்படும்?

பொருளாதாரப் போராட்டத்தில் வாழ்பவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சுமைதானே?

விடைதெரியாத கேள்விகளில் எந்த பலனுமில்லை! நிற்க!

*****

இந்தக் கதையை படித்த பின் தோன்றிய கருத்து!

திருமணத்திற்குப் பிறகு ஆணும் எவ்வளவு சமரசம் செய்கிறான். தன்னுடைய குடும்பத்திற்கும் மனைவிக்கும் இடையில் 'அவதிப்படுவது' நிஜம்தானே!

பெரும்பாலும் மருமகளுக்காக 'தன் இயல்பை' விட்டுக்குடுத்துதானே வாழ்கிறார்கள்.

திருமணம் ஒரு பாரம்பரிய நம்பிக்கைதான். ஒரு கால் கட்டுதான். பரஸ்பர நம்பிக்கையில்தான் எல்லாமே இருக்கிறது.

'அன்பு' என்ற செல்வம் இருந்தால் நம்பிக்கைக்கும் சந்தோஷத்திற்கும் பஞ்சம் இருக்குமா?

Tuesday, February 8, 2011

பாசாங்கு



ஏற்கனவே நான் எழுதி, யாருக்கும் புரியாமல் போன 'இயல்பு' பகுதியோட ரீமேக்.


பாசாங்கு - நடிப்பு. போலித்தனம். இயல்பற்ற நிலை.

பாசாங்கு ஏன் தேவைப்படுகிறது?

நம்முடைய உணர்வுகள் (Emotion) எப்பொழுதும் அதே போல் வெளிப்படுத்த முடிவதில்லை. கொஞ்சம் அதிகப்படியாகவோ அல்லது கொஞசம் குறைவாகவோ, பாசாங்கோடுதான் வெளிப்படுத்த முடிகிறது. இது இயல்பு (Nature).

நம்மைச் சுற்றியுள்ள நபர்களுக்காகவும், சில சூழ்நிலைகளுக்காகவும், நம்முடைய இயல்பான நிலையை மீறி பாசாங்காக செயல்பட வேண்டியிருக்குது.

உதாரணத்திற்கு.. 

1.நிஜமாலும் உணர முடியாத பிறருடைய சோகங்களுக்கு, பாசாங்காய் வேதனைப் படுதல்.

2. நம்மால் அனுபவிக்க முடியாத பிறருடைய சந்தோஷங்களுக்கு, போலியாய் புன்னகை செய்தல்.
3. ‘பிறர் என்ன நினைப்பார்களோ’, என்று நினைத்து செய்யும் ஒவ்வொரு செயல்களிலும்.

4. ‘நான் இப்படித்தான்’, என்று நிரூபிக்கும் பொருட்டு செய்யும் செயல்கள்.

விருப்பமில்லாதவைகளில் பாசாங்காய் இருக்க முடியாது.

விருப்பமில்லாத சூழ்நிலையிலும் சிலருடைய பாசாங்குகள் இயல்பாய் வெளிப்படுவதைக் கண்டு ஆச்சர்யப்படுகிறேன். அவர்கள் எப்பொழுதுதான் இயல்பாய் இருப்பார்கள். ஒருவேளை நான்தான், தப்பாய் பாசாங்கு என்று கற்பிதம் செய்துகொள்கிறோனோ?

சிலசமயம் சிலருடைய அதிகப்படியான பாசாங்குகள், போலியாய் படும். அப்போதெல்லாம் கவனிக்கும் போது என்னுடைய போலித்தனங்கள் 'வெட்ட வெளிச்சமாய்' தெரிகிறது.

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றியவுடன், கொஞ்சம் கொஞ்சமாய் தளும்புவது ( சிறு அலைகள் ), சுற்றியுள்ளவர்களின் போலித்தனங்கள் சலனங்களாய் எனக்குள் தளும்புகின்றன.

இல்லை. என்னுள் எந்த போலித்தனமும் இல்லை என்று எண்ணும் போதுதான் பாசாங்குகள் அதிகப்படியாய் வெளிப்படுகின்றன.

என்னை வரையறுக்கும் சமன்பாடுகள்தான், பாசாங்கு வட்டத்திற்குள் தள்ளிவிடுகின்றன.

இயல்பாக இருக்கிறேன் என்ற எண்ணத்தை உதறும்போதே, வட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிகிறது.

இயல்பற்ற நிலையை ஏற்கும்போதெல்லாம் பாசாங்குகளும் மறைகின்றன.

Saturday, February 5, 2011

எல்லோரும் பார்க்கிறார்கள்


யாரோ கூப்பிடுவது போலிருந்தது.

அவனுக்கு அதை யோசிக்க ஒரு கணம் கூட இல்லை.

பின்னால் அஞ்சு போலிஸ் கார் துரத்துகிறது. மேலே கெலிகாப்டர், வட்டமாய் வெளிச்சம் போட்டு அவன் காரை காண்பித்தது. வேறு வழியில்லாமல் பக்கத்திலிருந்த ஸ்டேடியத்திற்குள் காரை ஓட்டினான். பின்னால் சைரன் சத்தம்.

ஸ்டேடியத்திலிருந்து வெளியே வரும் போது.. மீண்டும் யாரோ கூப்பிடுவது போலிருந்தது. திரும்பி பார்த்தான், ஜன்னல் வழியே கூப்பிடும் சத்தம்.

திரும்பி கம்ப்யூட்டர் மானிட்டரை பார்ப்பதற்குள், எதிரே வந்த போலிஸ் கார் மோதி.. சுற்றி வளைத்து விட்டார்கள். ( ‘NFS most wanted’ game விளையாடிப் பாருங்க).

எழுந்து ஜன்னல் பக்கம் போனான். ஜன்னல் வழியே பார்க்கும் போது, ரயில்வே ஸ்டேசன் நுழைவாயில் தெரிந்தது. நிறைய பேர் நின்று, அவர்கள் அபார்ட்மெண்டையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ கத்திக் கொண்டிருந்தார்கள்.

அவனுக்கு ஸ்டேசனை வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். எப்பொழுதும் யாரேனும் போய்-வந்து கொண்டிருப்பார்கள். வயதானவர்கள் படிக்கட்டு ஓரக் கைப்பிடித்து மெதுவாக நடக்கும் போது, சிலர் ரெண்டு ரெண்டு படிக்கட்டுகளாய் தாவுவது வித்தியாசமாக இருக்கும்.

சட்டென்று இவனைப் பார்த்துக் கத்தினார்கள். நிறைய பேர் கையை வலது பக்கம் ஆட்டிக் காண்பித்தார்கள். ஒன்றும் கேட்கவிலை. ஒன்றும் புரியவில்லை.

"அக்கா.. அக்கா.. இங்கே பாரேன். ஒரே கூட்டமாயிருக்கிறது"

*****

அவள் நெயில் பாலிஸ் போட்டுக் கொண்டிருந்தாள்.

நகக் கலரில் இருந்தது. ரங்கநாதன் ஸ்டிரீட்டில் வாங்கியது. அதற்கே அம்மாவின் அட்வைஸ் கேட்க வேண்டியிருந்தது. எல்லாப் பெண்களும் எப்படியிருக்கிறார்கள்!

மோதிர விரல் நகத்துக்கு பாலிஸ் போடும் போதுதான் கமல் கூப்பிட்டான்.

"அக்கா.. அக்கா.. இங்கே பாரேன். ஒரே கூட்டமாயிருக்கிறது"

இவனுக்கு வேற வேலையே இல்லை. ஸ்டேசனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு ஏதேனும் சொல்ல வேண்டியது.

அவளுக்கு ஜன்னல் வழியே ஸ்டேசனைப் பார்ப்பது பிடிக்காமல் போய் விட்டது.  

பெண்கள் அழகாய் டிரஸ் போட்டுக் கொண்டு வருவார்கள். ஜீன்ஸ் டீ-சர்ட். அம்மாவிடம் கேட்டதற்கு திட்டுகிறாள். ஜீன்ஸ்-குர்தா டீசண்டாகத்தான் இருக்கிறது. ஆனால் அம்மாவுக்கு புரியப் போவதில்லை. இன்னும் துப்பட்டாவை ஒழுங்கா போடுவதில்லை என்று குறை சொல்கிறாள். யார் இப்போதெல்லாம் துப்பட்டா போட்டுக்கொண்டு வருகிறார்கள்!

சுண்டு விரலுக்கு நெயில் பாலிஸ் போடும் போது, கமல் மறுபடியும் கூப்பிட்டான். இவன் நச்சரிப்பை இனி தாங்கமுடியாது.

விரல்களை மடக்கி, நெயில் பாலிஸ் மீது ஊதியபடியே ஜன்னல் பக்கம் போனாள்.

கமல் சொன்னது சரிதான். எல்லோரும் அவர்கள் பில்டிங்கையே வேடிக்கை பார்ப்பது தெரிந்தது. பாதி பேர் அந்தப் பக்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தன்னைப் பார்த்து கத்துவதும் சைகை செயவதும் தெரிந்தது. ஏதோ பிரச்சினை. அம்மாவை கூப்பிடுவது நல்லது. இல்லாவிட்டால் இதற்கும் கத்துவாள்.

"அம்மா.. அம்மா.. இங்கு வாயேன்"

*****

கிச்சனில் நின்று கொண்டிருந்தாள். குக்கரில் இன்னொரு சத்தம் வந்தால் இறக்கி வைத்து விடலாம். தாளித்து விட்டால் குழம்பு ரெடி. பார்த்து பார்த்து வாங்கிய ஃபிளாட்டுதான், ஆனால் கிச்சன்தான் சின்னது. ஒரு பாத்திரத்தை எடுத்தால் இன்னொன்று கையில் இடிக்கிறது. வாங்கியாயிற்று.. இருந்துதானே ஆக வேண்டும்.

"அம்மா.. அம்மா.. இங்கு வாயேன்" சுமதியின் குரல் கேட்டது.

கழுதை வயசாகி விட்டது, இன்னும் சின்னப் பெண்ணாகவே இருக்கிறாள். பார்க்க லட்சணமாய் இருக்கிறாள். அதுதான் பயமாயிருக்கிறது.

சுமதி உள்ளே வந்தாள். "அம்மா.. ஸ்டேசன்ல ஒரு கூட்டமா, நம்ப பில்டிங்கை பார்த்து சத்தம் போடுறாங்க"

அந்த ஸ்டேசனை கண்டாலே பிடிக்கவில்லை. ஜன்னல் வழியே எங்கு பார்த்தாலும் ஜோடியாக இருக்கிறார்கள். நெருக்கமாய் உட்கார்ந்துக்கிட்டு, கையை பிடிச்சுக்கிட்டு, அப்படி என்னதான் பேசுவார்களோ! அந்த பெண்களைப் பெற்றவர்கள் பாவம்தான். கன்றாவி. அன்னிக்கொருத்தன் முத்தம் கொடுக்கிறான். நல்லவேளை சுமதி காலேஜுக்கு போயிருந்தாள்.

“அம்மா ஏதோ பிரச்சினை போலிருக்கிறது”

"எனக்கு நிறைய வேலை இருக்குது. உங்க அப்பாட்ட போயி சொல்லு"

*****

அவள் சுமதியிடம் சொல்வது நன்றாகவே கேட்டது. ரிமோட் கண்ட்ரோலை சோபாவில் வைத்து விட்டு கிச்சன் பக்கம் போனார்.

"என்னம்மா சுமதி. வா.. போய் பார்க்கலாம்"

அந்த ரயில்வே ஸ்டேசன் அவருக்கு பிடிச்ச விஷயம். எத்தனை முறை ஆபிஸீக்கு அடிச்சு பிடிச்சு அந்த ஸ்டேசனில் டிரைன் பிடித்திருக்கிறார். ஸ்டேசன் பக்கம் பிளாட் கிடைத்த போது எவ்வளவு சந்தோஷமாயிருந்தது. வாங்கியவுடன் தான் எத்தனை பெருமை. சென்னையையே விலைக்கு வாங்கியது போல்!

ஆமாம். நிறைய பேர் இருந்தார்கள். கூச்சல் போடுவது பார்த்தால், பக்கத்தில் ஏதோ பிரச்சினை. வெளியே போய் பார்க்கலாம்.

"என்னங்க, வாசல்ல ஓடுற சத்தம் கேட்குது. போய் பாருங்க. திருடன் யாராவது வந்திருக்கப் போறான்" அவர் மனைவி கூப்பிட்டாள்.

நல்ல வேளை. வெளியே கிரில் கேட் பூட்டியிருக்கிறது. நாலு பேரும் வாசல் பக்கம் போனார்கள்.

*****

நானும் பிரபு சாரும் புத்தகக் கண்காட்சி போய்விட்டு, கையில் புத்தக பேக்கோடு ஸ்டேசன் வாசலில் நுழைந்தோம். நிறைய பேர் நின்று, சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த பில்டிங்கில் ஒரு ஃபிளாட்டில் நெருப்பு. சின்னதுதான். பாத்திரம் ஏதாவது பத்தி எரிந்து கொண்டிருக்க வேண்டும். லைட் எரிவதை பார்த்தால், வீட்டில் நிச்சயம் யாராவது இருக்க வேண்டும். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை.

அப்பொழுதுதான், நாலு ஜன்னல் தள்ளி ஒரு  பையன் எட்டிப் பார்த்தான். எல்லோரும் அவனைப் பார்த்துக் கத்தினார்கள். அவன் உள்ளே போய், இன்னொரு பெண்ணோடு வந்தான். என்ன கத்தியும், அவர்களுக்கு புரியவில்லை.

மறுபடியும் இன்னொருவர் வந்தார். அதற்குள் அந்த நெருப்பை, வீட்டிலிருந்தவர்கள் அனைத்துவிட்டார்கள். புகை வந்தது.

ஜன்னல் வழியே பார்த்தவர்கள் வீட்டிற்குள் போய் விட்டர்கள்..
வேடிக்கை பார்த்தவர்களும் கலைந்து விட்டார்கள்..
புகை மட்டும் கொஞசமாய் வந்து கொண்டிருந்தது..