Saturday, December 31, 2011

2011



மறுபடியும் ஒரு வருடம் முடிந்துவிட்டது. 2011 ல் செய்யவேண்டிய லட்சியங்கள் அலட்சியமாய் விட்டுவிட்டேன்.

சோதனைகளையும் வேதனைகளையும் எண்ணிப் பார்ப்பதில் என்ன இருக்கிறது?

சாதனைகளை பொன் எழுத்தில் பதிவு செய்யவேண்டியது முக்கியம் அல்லவா!

என்ன சாதித்துவிட்டேன் என்று யோசித்தால்.. அப்பப்பா!

தினேஷ் குமாரா? என்று ஆச்சர்யப்படும் அளவில் சாதித்ததாய் தோன்றுகிறது !!

வயலின்

வயலின் கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டேன். ஸ்வரங்களில் ஆரம்பித்து மேல் ஸ்தாயி வரிசையில் நின்று கொண்டிருக்கிறேன்.
இசை கடல் அளவு.காற்றுபோல் எங்கும் நிரம்பி இருக்கிறது. ஆனாலும்  சமுத்திரத்தில் ஒரு முறையேனும் முக்கி எழுந்து காற்றை உள்ளிழுக்கும் சந்தோஷம். வாழ்நாள் சாதனை.

இசை என்னை அனுமதித்தால் இன்னும் கூட கற்றுக்கொள்ளலாம் (தன்னடக்கம்).

பூமி (BHUMI)

பூமி என்னும் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து சிறுவர்களுக்கு கம்ப்யூட்டர் சொல்லித் தருகிறேன். இங்கு சேர்ந்த பிறகுதான் தெரிகிறது.. தொண்டு செய்ய எத்தனை பேர் இருக்கிறார்கள்! அவர்களோடு எல்லாம் என்னை ஒப்பிடும் போது இதை என் சாதனை வரிசையில் சேர்க்க முடியாது.
என்னாலும் அன்பு செலுத்த முடியும் என்பது பெரிய சந்தோஷம்.

இசை

இந்த வருடம் ஆங்கில இசை ஆல்பங்களை ரசித்தேன். பிரிட்னியும்(Britney Spears) பேக்-ஸ்டிரீட் பாய்ஸ்(BackStreet Boys) பாடல்கள் மட்டும் கேட்ட நான் தி பீட்டில்ஸின்(The Beatles) பீட்-டும் கோல்ட்-பிளேயின்(Cold Play) கிதாரும் ரசிக்க முடிந்தது. ஆன்டனியோ விவால்டின்(Antonio Vivaldi) வயலின் இசையை மொபைல் ரிங்-டோனாக வைக்கும் அளவுக்கு ரசித்தேன் என்றால் பாருங்கள்!

நியான் நகரம் மற்றும் ரனம் சுகம் புக்கிசை என்ற ஆல்பங்களால் தமிழில் புதிய முயற்சிகளை அனுபசித்தேன். தமிழ் சினிமா பாடல்களையும் கேட்க ஆரம்பத்தில், எனக்கும் இசைக்கும் உள்ள இடைவெளி குறைந்த சந்தோஷம்.

புத்தகங்கள்

இந்த வருடம் படித்ததில் பிடித்தது.

தி. ஜானகிராமனின் மோகமுள்,
லா.சா. ராமமிர்தம் அவர்க்ளின் அபிதா,
எஸ். ராமகிருஷ்ணனின் கதாவிலாசம்,
ஜோஹானா ஸ்பைரி-யின் ஹெய்டி,
எராகான்(Eragon) கடைசி (பாகம்) புத்தகம் இன்கெரிட்டென்ஸ்(Inheritance),
வெளிவந்துள்ள அனைத்து ஆர்டிமிஸ் ஃபௌல்(Artemis Fowl) பாகங்கள்.

தற்பெருமை போதும். இனி..

நன்றியுரை

வயலின் கற்றுக்கொள்ள வந்த நண்பர்கள் கிருஷ்ண குமார், தயாளன் & மாலதி அவர்களுக்கு நன்றி. கற்றுக்கொடுத்த ஆசிரியர் திரு.மதன் மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி!
(*** தயாளன் பார்க்கிறதுக்கு அப்பாவி மாதிரி இருக்கிறான நினைச்சேன். ஆனால் பாருங்க இந்த பையனுக்குள்ள இவ்ளோ திறமை இருக்குதுன்னு ஆச்சர்யப்பட வைச்சுட்டான். அவன் வயலின் கத்துக்க காட்டின ஆர்வத்துல நாங்களும் ஆர்வமாயிட்டோம்.)

பூமி இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற உறுதுணையாக இருந்த நண்பர் பிஜீ & உற்சாகப்படுத்திய நண்பர் ராஜ்குமார் அவர்களுக்கும் நன்றி!

இசை ஆல்பங்களை அறிமுகப்படுத்திய தோழி சரண்யா அவர்களுக்கு நன்றி!


இன்னும் என் பதிவுகளை மனம் தளராமல் படிக்கும் நண்பர் கலைவாணி அவர்களுக்கு நன்றி!


பொது அறிவு செய்திகளையும் நாட்டு நடப்புகளையும் என்னுடனும் விவாதிக்கும் நண்பர் சகாயராஜ் அவர்களுக்கு நன்றி!

என் சிந்தனைகளை சீர் செய்யும் மரியாதைக்குரிய பிரபு ஸார், ரங்கநாதன் ஸார் & C.P. ராகவேந்திரன் ஸார்..

எப்பொழுதும் அன்பு செலுத்தும் நல்ல நண்பர்கள் சுப்பிரமணியன், பிந்து, பிரபு, முருகானந்தன் ,ஜெயகிருஷ்ணன் & அனைத்து நண்பர்களுக்கும்..

எல்லாவற்றிற்கும் கூட இருக்கும் என் 'அன்புத் தம்பி' கமலக்கண்ணன்..

என் அப்பா, அம்மா & கடவுளுக்கு..

இவர்களுக்கு நன்றி சொல்வதை விட..
புத்தாண்டு வாழ்த்துக்கள்.


பி.கு:
*** இவ்வாறு எழுதுமாறு தயாளன் கேட்டுக்கொண்டார்.

Monday, October 24, 2011

விடியல்



ரயிலில் கேட்ட ஒரு உரையாடல்..

அப்பாவும் பையனும்

"அப்பா.. எப்ப எக்ஸ்-பாக்ஸ்  வாங்கித் தர்ற?"

"நீ ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கு, அப்புறம் வாங்கித்தரேன்."

"என்னை விட மார்க் கம்மியா வாங்குற ஆனந்த்க்கு அவங்கப்பா பிளே ஸ்டேசன் வாங்கித் தந்திருக்காரு. பிரைஸ் டொன்டி தௌஸன்ட்."
"நீ ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கு. உனக்கு ஒரு லட்ச ரூபாயிக்கு வாங்கித் தரேன்"

"போப்பா நீ.. ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்குனா கவர்மென்டே ரெண்டு லட்சம் தருது. கூட ஒரு லேப்டாப்."

*****

ஆதரவற்ற சிறுவர்களை சந்தித்து, அவர்களுக்கு படிப்பில் நம்பிக்கை ஊட்டவும் உற்சாகப்படுத்தவும் நண்பர்களோடு சென்றிருந்தேன். அவர்களோட பேசிய ஒரு உரையாடல்.

"பெரியவன் ஆனதும் என்ன வாங்கனும்னு ஆசைப்படுற?"

"அண்ணா.. கடலையும் பீச்-சையும் வாங்கப் போறேன்" (சிரிப்பு)

"பெரியவன் ஆகி என்ன பண்ணப் போற?"

"டாக்டர் ஆகப் போறேன். எல்லாருக்கும் உதவி செய்வேன்" (நம்பிக்கை)

"டாக்டர் ஆகனும்னா நல்லா படிக்கனும். நல்லா மார்க் வாங்கனும். உன்னால முடியும். உனக்கு என்ன ஹெல்ப் வேணுமுன்னாலும் எங்ககிட்ட கேட்கலாம். டீச்சர்ட்ட கேக்கலாம். சரியா!"

பையன் தலையை ஆட்டினான் (நல்ல புத்திசாலி)

"கணக்குப் பரீட்சையில எவ்வளவு மார்க் வாங்கின?"

"ஃபெயில் னா" (தலையை குனிந்தான்)

"டேய்.. நீ நல்லாப் படிக்கிற பையன்தானே, அப்புறம் என்னடா? இப்படி படிச்சா எப்படி டாக்டர் ஆவ?"

"இல்லைன்னா, அது வந்து.. ஸ்கூல்ல மழைத்தண்ணீ நிறைய தேங்கி இருந்துச்சு. பரீச்சை அன்னிக்கு காலையில மண் அள்ளிப் போட்டேம். அதான் எழுத முடியலைன்னா" (ஏமாற்றம்)

"பரவால்ல.. நல்லாப் படி!"

*****

நம்பிக்கை ஊட்ட சென்ற நான் நம்பிக்கை இழந்தேன்.

இவர்களுக்கு எப்படி நம்பிக்கை தருவது?

பொய்யான நம்பிக்கையால் இவர்கள் அல்லவா மனக் கஷ்டப்படுவார்கள். இப்படியே விட்டுவிட்டால் இருப்பதை வைத்தாவது சந்தோஷப்படுவார்களே!

கல்வியின் முக்கியத்துவம் இங்கு எல்லோருக்கு தெரியும். ஆனாலும் எல்லோருக்கும் சம்மான தரமான கல்வி வெறும் கதைப் பேச்சுதானா! கனவுதானா?

மாற்றம் என்பது வெறும் ஏமாற்றம் தானா!

எதையுமே மாற்ற முடியாமல், கடைசியில் தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொள்வதுதான் மாற்றமா?

குழப்பத்தின் ஒவ்வொரு படிக்கட்டுகளாய் இறங்கியதில், நம்பிக்கை அதல பாதாளத்தில்!

வாய்ப்பே இல்லாத வியப்புகளை நம்புவது வீண்.

என்னால் யாரையும் ஏமாற்ற முடியாது. என்னால் எதையும் மாற்ற முடியாது!


*****

குழப்பத்தின் குழிக்குள் விழுந்த நான் படுக்கையில் தூக்கத்தை தேடினேன். ஞாபகம் வந்தது எரகான்(ERAGON) புத்தகம்.

அதில் எரகானுக்கு ஒரு கேள்வி வரும்.

"அரசன் கொடியவன். அவனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் அவனுக்கு எதிரான போரில், அதைவிட அதிகமாய் மக்கள் அவதிப் படுகிறார்களே!

வெற்றி வாய்ப்பும் குறைவு. அப்புறம் எதற்காக போராட்டம் செய்கிறாய்? அப்படியே விட்டு விட்டால், மக்கள் கொஞ்சமாவது நிம்மதியாய் இருப்பார்களே!"

இந்தக் கேள்விக்கு கடைசியாய், ஒரு சரியான பதில் கிடைத்துவிடும்.

"கொடிய அரசனால் பாதிக்கப்படுவது இந்த தலைமுறை மட்டுமல்ல; அடுத்தடுத்த தலைமுறைகளும் பாதிப்படையும். எதிர்காலத் தலைமுறைக்காக போராட வேண்டியது முக்கியம்!"

தெளிவு!

*****

ஆதரவற்றவர்களுக்கு தரப்படும் நம்பிக்கையும் கனவும், அடுத்த தலைமுறையிலாவது நடக்கும்!

இருளாய் இருக்கிறது என்று கண்களை மூடிக்கொள்ள முடியாது.
விளக்குகளை ஏற்றி வைப்போம்! விடியாமலா போய்விடும்!

நாளைய விருட்சம் இன்றைய விதையில்!
நாளைய மாற்றம், இன்றைய கனவில்! இன்றைய உழைப்பில்!

Change Today! Change Tomorrow! 

Saturday, September 24, 2011

அதீதத்தின் ருசி



அதீதத்தின் ருசி - மனுஷ்ய புத்திரன் அவர்களின் கவிதை தொகுப்பு.



ஒவ்வொரு கவிதையும் ஒருவகையான உணர்வுகளை வெளிப்படுத்தும். கவிஞனின் உணர்வுகளை அப்படியே உணரப்படுவதில்லை என்பதும், படிப்பவரின் மன நிலையைப் பொறுத்து உணரப்படுகிறது என்பது என் எண்ணம்.

ஆனால் இந்த கவிதை தொகுப்பை படிக்கும் போது ஒரு தனிமைக்குள் செலுத்தப்படுவது போல் இருந்தது. ஒரு சில கவிதைகள் மனதுக்குள் வெற்றிடத்தை உருவாக்குகிறது. வெற்றிடம் வலி போன்ற ஒரு உணர்வையும், நிரப்ப வேண்டும் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது.

*****

பிடித்த சில கவிதை வரிகள்:

"சிநேகிதிகளின் கணவர்கள்" என்ற கவிதையில்..

நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று

அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று
ஒரு சிநேகிதியை
'சிஸ்டர்' என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று

"சரியாக வராத புகைப்படங்கள்" என்ற கவிதையில்..

க்ரூப் போட்டாக்களில்
இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதுதான்
வாழ்வின் மிகப்பெரிய நெருக்கடி

மழை என்றொரு தனிமை" என்ற கவிதையில்..(ரொம்ப ரொம்ப பிடிச்சது)

யாவரின் மீதும் 
பெய்யும் மழை 
யாருமே இல்லாதது போல 
பெய்கிறது! 

"என்னைப் போகவிடு" என்ற கவிதையில்..

வெறுமனே காத்துக் கொண்டிருப்பதை விட
இந்த பூமியில் நடப்பதற்கு
வேறு பாதைகளே இல்லையா?
என்னைப் போகவிடு
.............................................
.............................................
வெறுமனே காத்துக் கொண்டிருப்பதை விட
இந்த பூமியில் நடப்பதற்கு
இன்றெனக்கு
வேறு பாதைகளே
இல்லாத போதும்
என்னைப் போகவிடு

*****

நல்ல கவிதை தொகுப்பு. "அதீதத்தின் ருசி"யை ரசித்துப் பாருங்கள்.


Monday, September 19, 2011

நூலகம்


பத்தாவது படிக்கும் போதுதான் முதல் முறையாக 'கட்' அடித்தேன். அது கூட மதிய உணவு வேளையில் பள்ளியை விட்டு வெளியே போனேன். போன இடம் எங்க ஊர் பொது நூலகம்.



அங்கு உறுப்பினரான பின், வாரம் ஒரு முறையாவது செல்லாமல் இருந்ததில்லை. விடுமுறை நாட்களில், வெள்ளிக் கிழமை எடுத்த புத்தகங்களை, படித்து முடித்து ஞாயிற்று கிழமையே திருப்பிக் கொடுத்தது பலமுறை.



நூலகத்திலேயே புத்தகம் படிப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. புத்தகங்கள் எடுத்து வீட்டில் படிப்பதுதான் விருப்பம்.


என்னுடைய ஒவ்வொரு தேடலும் அந்த நூலகத்திலிருந்தே ஆரம்பித்தது. நான் தொலைந்து போகும் போதெல்லாம், எனக்கு புகலிடம் 

கொடுத்து, என்னை திருப்பிக் கொடுத்ததும் அந்த நூலகம்தான். 'நான்’ என்று விளக்கம் கொடுக்கும் வார்த்தைகள் எல்லாம், அங்கிருந்துதான் எடுக்கப்பட்டது. 






எங்க ஊரில் எனக்கு பிடித்த இடமானது, அந்த நூலகம்.


*****

சென்னையில் கடல் எவ்வளவு பிரம்மாண்டமாய் உணர்ந்தேனோ, அது போல்தான் கன்னிமரா நூலகமும் தோற்றம் அளிக்கிறது.

அந்தக் கடலில் பிடித்த புத்தகங்களை தேடுவது எளிதல்ல. அவைகளைக் கண்டுபிடிப்பதற்கு கம்ப்யூட்டரில் தேடும் வசதிகள் உள்ளன. அதனால் குறிப்பிட்ட அலமாரியில் தேடுவது எளிதாயிற்று.

ஆனாலும் நினைத்த புத்தகங்களைத் தேடும் போதுதான், பல புத்தகங்கள் பிடித்தவிதமாய் கிடைக்கின்றன.

வாழ்க்கையில் தேடியது கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்தது பிடிக்கும் இடமாய் இருக்கிறது, நூலகம்!

உங்கள் அருகில் இருக்கும் நூலகத்தை 'மிஸ்' பண்ணாமல், ஒரு முறையேனும் தரிசித்து பாருங்கள்!

*****

பி.கு:
இபோழுது இன்டர்நெட்டில் புத்தகங்களை ரிசர்வ் செய்யவும், எடுத்த புத்தகங்களை புதுப்பிக்கவும், கன்னிமரா நூலகம் வசதிகள் ஏற்படுத்தி உள்ளன.


Thursday, September 15, 2011

ரணம் சுகம்



ஒரு கதை, சில கவிதைகள்,  இசை தொகுப்பு!

'ரணம் சுகம்' என்கிற மியூசிக்கல் நாவல், நான் ரசித்து படித்து/கேட்ட ஒரு புது அனுபவம். 'பாதை' என்கிற மியுசிக்கல் பேண்ட் நண்பர்களின் ஒரு புது முயற்சி.


கதை - நம்ம கற்பனைகளில் கதாபாத்திரங்களை உலா வரச்செய்யும் ஊடம்
கவிதை - வார்த்தைகளோட அழகையும் சுவையையும் ரசிக்க வைக்கும் உணர்வுகளின் தொகுப்பு
இசை - கதை/கவிதைகளால் சொல்ல முடியாம போகும் இடங்களில் கூட நுழையும் காற்று, மொழியை மீறிய அனுபவம்.


இந்த மூன்றையும் தனித்தனியே ரசிச்சிருக்கேன். மூன்றையும் சேர்ந்து அனுபவிக்க கிடைத்த முதல் அனுபவம், ரணம் சுகம் என்கிற புக்கிசை!

*****

"தேடிச்சோறு நிதம் தின்று" பாரதி வரிகள் புதுமையாய் கேட்கும்படி இருந்தது.

எனக்கு பிடித்த பாடல்/கவிதை வரிகள்:

"பெண்ணே  உன் கண்கள் கொஞ்சம் மூடு
தொடர்ந்து மின்னல் பார்க்கும் சக்தி
ஆண்டவன் தரவில்லை எனக்கு"

முனுமுனுக்க வைத்த பாடல் வரிகள்:

"காற்றுள்ளபோதே
தூற்றிக்கொள் விழியே
ஒரு பார்வை அள்ளவிடுவாய் அவளை"
  
கதையில் பிடித்தது:

"பியானோவின் வெள்ளைகளை மட்டுமே வைத்துக்கொண்டு அவளுக்காக மட்டும் நான் செய்த காதல் இசை. அவளை நினைத்து இசையமத்த போது பியானோவின் கருப்பினைத் தொட மனம் வரவில்லை."

இதுதான் காதல் மனசு!

"கடலுக்கு யாரும் உண்மையில் சொந்தமில்லை. வருவார்கள், பார்ப்பார்கள், கால்கள் நனைத்து விளையாடுவார்கள், ரசிப்பார்கள், நேரம் வந்ததும் வீட்டுக்கு செல்வார்கள். அவளும் அதேதான் செய்தாள், வந்தாள், என்னில் சோகம் நனைத்தாள், என் தனிமை கேட்டாள், ரசித்தாள், ரசிக்க வைத்தாள், நேரம் வந்ததும் சென்றுவிட்டாள்."

நல்ல உவமானம்!

*****


புத்தகம் படிக்கும் போது, இடையில நிறுத்தி, இசையோடு பாடலை கேட்பது நல்லாத்தான் இருக்கு!

உங்களுக்கு கூட பிடிக்கும்! படிச்சு/கேட்டுப் பாருங்க..

Thursday, August 11, 2011

கண்ணாடி உலகம்


படிப்பதற்கு முன்:
சின்ன வயசில மீன் வாசம் கூட பிடிக்காது. ஆனால் இப்பொழுது மீன் எனக்கு பிடித்த உணவு. எப்படி பிடிக்காத ஒன்று பிடிச்சு போனதோ, அதே மாதிரி பிடித்த ஒன்று பிடிக்காம போயிடிச்சு!

*****

ஒன்றரை அடி நீளம், அரை அடி அகலம், ஒரு அடி ஆழம் இருந்தது அந்த மீன் தொட்டி. அதில கலர் கலரா மீன்கள். அதுங்க குறுக்கும் நெடுக்குமா நீந்திட்டு இருந்துச்சுங்க. சில மீன்கள் வெறுமனே இருந்துச்சுங்க, வேடிக்கை பார்க்கிற மாதிரி.

ஒரு சலூன் கடையில பார்த்தது. ஒரே ஒரு மீன், ஆனால் அது கிட்டத்தட்ட கால் அடி இருந்துச்சு. நாலு எட்டு நீந்தினா, அந்த பக்கம் கண்ணாடிச் சுவர் முட்டும். அது எப்பவும் சும்மாவே இருக்கும். எதோ தியானம் செய்யிற மாதிரி.

கண்ணாடித் தொட்டில மீன்களை பார்க்கிறது சந்தோஷமா இருக்கும்.  ஆனால் இப்பல்லாம் அப்படி பார்க்கிறது பிடிக்கலை (பக்கத்தில் தம்பியோட  கிண்டல்: தட்டுல பார்த்தா பிடிக்குமா?).

Finding Nemo படம் பார்த்திருக்கீங்களா? குட்டி மீனை கடலில் இருந்து பிடிச்சிட்டு போயிடுவாங்க. ஒரு கண்ணாடித் தொட்டியில் போட்டுடுவாங்க. அதை தேடி, அப்பா மீன் கடல் முழுவதும் அலையும். குட்டி மீன் அங்கிருந்து தப்பிச்சு, மீண்டும் அப்பாவோட சேர்வதுதான் கதை. (நல்ல படம், பாருங்க!)

அவ்வளவு பெரிய கடலில் வளர்ந்த மீன்களுக்கு, கண்ணாடித் தொட்டி எவ்வளவு சிறியது?

குளம், குட்டை, கிணத்துல வளர்கிற மீன்கள் கூட, ஒரு சுதந்திரமான உலகத்தில் நீந்த முடியுது. மீன்களால எவ்வளவு தூரம் நீந்த முடியும்! அவைகளை சிறிய கண்ணாடி உலகத்தில அடைச்சு வைக்கிறது சரிதானா?

கூண்டுல இருக்கிற பறவைகளுக்கு பரிதாபப்படும் மனங்கள் கூட மீன்களை கண்டு கொள்வதில்லை.

நம்ம சந்தோஷத்துக்காக மீன்களை அடைச்சு வைக்கிறதை விட, உணவுக்காக மீன்களை சாப்பிடலாம்.

*****

சில நண்பர்கள் சொல்லி இருக்காங்க, மீன்கள் நீந்துவதை பார்க்கும் போது மனசுக்கு ஒரு அமைதி கிடைக்குது.

எனக்கு மட்டும் மனசஞ்சலம் தான் ஏற்படுகிறது. மீன்களோட முட்டைக் கண்களை பார்க்கும் போது, அதுங்க என்கிட்ட கேட்கிற மாதிரி தோன்றுகிற கேள்விகள் பயங்கரமானவை!

கண்ணாடித் தொட்டியில் வளர்கிற மீன்களுக்கும், எனக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு காலத்தில வீட்டுக்கும் பள்ளிக்கும் நீந்தினேன். அப்புறம் காலேஜீக்கு. இப்ப ஆபிஸுக்கும் வீட்டுக்கும் நீந்திட்டிருக்கேன். மீன்கள் கண்ணாடி சுவர்களுக்குள்ள நீந்துற மாதிரி. குறைந்தபட்சம், அந்த மீன்கள் நமக்கு சந்தோஷத்தையாவது கொடுக்கிறது. நாம?


அந்த மீன் தொட்டி, மீன்களுக்கு சிறிய கண்ணாடி உலகம்.
நமக்கு இந்த உலகம், ஒரு பெரிய கண்ணாடி தொட்டி!

Friday, July 22, 2011

ஹாய் தினேஷ்


மதன் அவர்களை நான் ரொம்ப ரொம்ப மதிக்கிறேன். அவரோட ரசிகன் நான். அவரை மாதிரி என்னால ஆக முடியாதுன்னு தெரியும். ஆனாலும் அதற்காக முயற்சி செய்யாம இருக்க முடியுமா, சொல்லுங்க?






*மாலதி
உங்களோட வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று நினைக்கிறீங்க?
எனக்கு பிடிச்ச மாதிரி வாழ்றதுதான்!


*தயாளன்
நீங்க நல்லவரா? கெட்டவரா?
நல்லவன் யாரு? நல்லது செய்யறவன்.
யாரு நல்லது செய்வாங்க? நல்ல எண்ணம் இருக்கிறவங்க.
யாருக்கு நல்ல எண்ணம் இருக்கும்? நல்லவங்களோட பழகிறவங்களுக்கு.

எங்கூட பழகிறவங்களும் நல்லவங்களா இருக்காங்க. என் நண்பர்களும் நல்லவங்களா இருக்காங்க.  இப்படி என்னை சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் நல்லவங்களா இருக்காங்க. அதனால நான் ரொம்ப நல்லவனா இருக்கிறேன்.

உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்குங்களா?

எந்த விஷயத்தை எதிர்கொள்ளும் போதும் ஏற்படக்கூடிய பயம்தான், வெட்கம்.
தப்பு செய்யறவங்களுக்குதான் வெட்கம் வேணும். எனக்கு எதுக்கு?

மானம், சூடு, சொரணைங்கிறது எல்லாம், வெறும் உணர்ச்சி கொந்தளிப்பு. இல்லைங்கிற ஒரு விஷயத்தை இருக்குற மாதிரி காட்டற பாசாங்கு எனக்கு தேவையில்லை.

அந்த பெண்ணை புரோபோஸ்(Propose) பண்ணீட்டிங்களா?

அந்த பெண்ணை, நான் நிஜமாலும் விரும்பி, ஒரு நாள் அவ இல்லைனா நான் இசையில்லாத வெறும் பாடல் மாதிரி உணர்ந்தா, அன்னிக்கு அவங்களை புரோபோஸ் பண்ணுவேன். சரி எந்த பெண்ணை?


*கமலக்கண்ணன் 
கம்யூனிசம் சோஸியலிசம் பற்றி புரியற மாதிரி சொல்லுங்க?

ஒரு பணக்காரன், ஒரு நிலம் வைச்சிருந்தான். அந்த ஊர்ல தண்ணீர் தேவைப்பட்டதால, அவன் நிலத்தில கூலி ஆளுங்களை வைச்சு கிணறு தோண்டினான். அதுக்கு கூலியா குடிக்கிறதுக்கு தண்ணீ கொடுத்தான். அவன்தான் கிணத்துக்கு முதலாளி. எல்லாருக்கும் வேணுங்கற தண்ணீரை காசுக்கு வித்து மேலும் பணக்காரன் ஆனான். வேலை செஞ்ச கூலி ஆளுங்க, தண்ணீரை காசு கொடுத்து வாங்கி கடன்காரங்களா ஆனாங்க! இதுதான் கேபிடலிசம்.

கிணறு தனக்கு சொந்தமாயிருந்தாலும், தண்ணீர் எல்லோருக்கும் பொதுவானது. அவன் ஒரு அரசாங்கம் மாதிரி தண்ணீரை தேவைப்படுற எல்லோருக்கும் தேவையான அளவு கொடுத்தான். இது சோஸியலிசம்.

கிணறும் எல்லோருக்கும் பொது. தண்ணீரும் எல்லோருக்கும் பொது. இது கம்யூனிசம்.

*ரங்கநாதன்
Belief க்கும் faith க்கும் உள்ள வித்தியாசம்?
இரண்டுமே நம்பிக்கையை குறிக்கும் வார்த்தைகள்தான்.

Belief- தெரிந்த உண்மைகளை அடிப்படையாக கொண்டது.
Faith - உணர்வுகளை அடிப்படையாக கொண்டது.
கேள்விகளுக்கு பதில் எழுதுவேன்னு நான் நினைச்சது Belief. அதையே நீங்க நினைச்சது Faith.




பின் குறிப்பு:

மதன், நீங்க கிரேட். கேள்விகளுக்கு எனக்கு பிடிச்ச மாதிரி பதில் எழுதறதே கஷ்டமா இருக்கே. எப்படி எல்லோருக்கு பிடிச்ச மாதிரி நீங்க எழுதறீங்க.