Saturday, September 24, 2011

அதீதத்தின் ருசி



அதீதத்தின் ருசி - மனுஷ்ய புத்திரன் அவர்களின் கவிதை தொகுப்பு.



ஒவ்வொரு கவிதையும் ஒருவகையான உணர்வுகளை வெளிப்படுத்தும். கவிஞனின் உணர்வுகளை அப்படியே உணரப்படுவதில்லை என்பதும், படிப்பவரின் மன நிலையைப் பொறுத்து உணரப்படுகிறது என்பது என் எண்ணம்.

ஆனால் இந்த கவிதை தொகுப்பை படிக்கும் போது ஒரு தனிமைக்குள் செலுத்தப்படுவது போல் இருந்தது. ஒரு சில கவிதைகள் மனதுக்குள் வெற்றிடத்தை உருவாக்குகிறது. வெற்றிடம் வலி போன்ற ஒரு உணர்வையும், நிரப்ப வேண்டும் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது.

*****

பிடித்த சில கவிதை வரிகள்:

"சிநேகிதிகளின் கணவர்கள்" என்ற கவிதையில்..

நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று

அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று
ஒரு சிநேகிதியை
'சிஸ்டர்' என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று

"சரியாக வராத புகைப்படங்கள்" என்ற கவிதையில்..

க்ரூப் போட்டாக்களில்
இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதுதான்
வாழ்வின் மிகப்பெரிய நெருக்கடி

மழை என்றொரு தனிமை" என்ற கவிதையில்..(ரொம்ப ரொம்ப பிடிச்சது)

யாவரின் மீதும் 
பெய்யும் மழை 
யாருமே இல்லாதது போல 
பெய்கிறது! 

"என்னைப் போகவிடு" என்ற கவிதையில்..

வெறுமனே காத்துக் கொண்டிருப்பதை விட
இந்த பூமியில் நடப்பதற்கு
வேறு பாதைகளே இல்லையா?
என்னைப் போகவிடு
.............................................
.............................................
வெறுமனே காத்துக் கொண்டிருப்பதை விட
இந்த பூமியில் நடப்பதற்கு
இன்றெனக்கு
வேறு பாதைகளே
இல்லாத போதும்
என்னைப் போகவிடு

*****

நல்ல கவிதை தொகுப்பு. "அதீதத்தின் ருசி"யை ரசித்துப் பாருங்கள்.


No comments: