Wednesday, June 16, 2010

மாயை

மாயை - நிஜம் போலவே தோற்றமளிக்கும். நிஜமாகவே உணரப்படும். ஆனால் நிஜமல்ல.காலம் கடந்த பின்னே மாயை என்றே உணரப்படும்.

கதை - எப்பொழுதோ படித்தது

நாரயணனும் (கடவுள்) நாரதரும் உலகை வலம் வந்துகொண்டிருந்தனர். அப்பொழுது நாரதர் கேட்டார்.
"நாராயணா, மாயை என்றால் என்ன? சற்று புரியும்படி விளக்கம் கூறுங்களேன்."

"நாரதரே!", நாரயணனும் புன்னகைத்தபடி சற்று தூரத்திலிருந்த குளத்தை காண்பித்தார்.
"அந்த குளத்தில் குளித்துவிட்டு வாரும். விளக்கம் தருகிறேன்"

நாரதரும் குளத்தில் இறங்கி, தலை முழுகி எழும்பினார். அருகில் அழகிய பெண் குளித்துக் கொண்டிருந்தாள்.

நங்கையின் அழகில் மயங்கினார்.
நாரயணை மறந்தார்.
கண்டதும் காதல் கொண்டார். (எப்படி!)
அவளும் புன்னகைக்க..
காதல்..
கல்யாணம்.
நாட்கள் நகர்ந்தன..
மகனும் மகளும் பிறந்தார்கள்..

வருடங்கள் ஓடின..
பின் பேரன் பேத்திகள்!
சந்தோஷம் துக்கமுமான வாழ்க்கை..
சட்டென்று ஒரு நாள் அலுப்பு தட்டியது.
நாரயணனும் ஞாபகத்திற்கு வந்தார். எல்லாம் மாயமாய் மறைந்தது!


உடனே நாரயணனை தேடிச்சென்றார்.

"நாரயணா, இது நியாயமா? நடுக்குளத்தில் விட்டுவிட்டு போய்விட்டாயே!"
"நாரதரே, இதுதான் மாயை!", என்று புன்னகைத்தார் நாராயணன்.


எது நிஜம்?

நிஜம் - நம் அறிவால் புறிந்தகொள்ள முடிந்ததெல்லாம் நிஜம். மூளையால் உணர்ந்தவை எல்லாம் நிஜம்.

பார்ப்பவை, கேட்பவை, நுகர்ந்தவை, தொட்டவை - எல்லாம் மூளையால் உணரப்பட்ட நிஜம்.
ஆனால் மூளை நம்மை ஏமாற்றினால், எது நிஜம்?

கண் (லென்ஸ்) வழியே பார்ப்பவையெல்லாம், தலைகீழ் பிம்பங்களாய்த்தான் தெரியும். மூளைதான் நேர் பிம்பமாய் மாற்றுகிறது. (அறிவியல்)
ஒருவேளை மூளை சரியாக வேலை செய்யவில்லையென்றால், தலைகீழாகத்தானே பார்க்க முடியும்.
இங்கு எல்லாமும் தலைகீழாய் இருந்து, நாமும் தலைகீழாய் பார்க்கிறோமோ!

நாம் பார்க்கும் வடிவங்களும் வண்ணங்களும், அதே மாதிரிதான் மற்றவர்களாலும் பார்க்கப்படுகிறதா?
எனக்குத் தெரிந்த மஞ்சள் நிறம், ஒருவேளை உங்களுக்கு பச்சை நிறமாய் தெரியலாம்.
எனக்கு பிடித்த நீல நிறம்தான், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நிறங்களாய் பிடித்திருக்கலாம்.

எனக்கு பிடித்த இசை,
எனக்கு பிடித்த வாசனை,
எனக்கு பிடித்த சுவை,
எல்லாமும் உங்கள் எல்லோருக்கும் பிடித்திருக்கலாம். ஆனால் வெவ்வேறு பெயரில்!

நம் எல்லோருக்கும் ஒரே ரசனை, ஒரே சிந்தனை!
மூளை மட்டும் வெவ்வேறாய் உணர்ந்து கொண்டிருக்கலாம்!!!


இன்னும் கொஞ்சம்..

நாம் இப்பொழுது தூக்கத்தில் காணும் கனவுதான் வாழ்க்கையோ? (MATRIX படம் பார்க்கவும்).
பாதிக் கனவில் விழித்தவர்கள்தான் பைத்தியங்களாய் திரிகிறார்களோ?
இறப்பது கூட தூக்கத்திலிருந்து விழிப்பதுதானோ?


நீண்ட நாள் சந்தேகம்.
ஒவ்வொரு முறை தூங்கி எழும் போதும், தூங்கிய நானேதான் எழுந்திருக்கிறேனா?

நிஜம் என்பது வெறும் நம்பிக்கை!
இங்கு எல்லாம் மாயை!


கவிதை

நிற்பதுமே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? - பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே, இளவெயிலே, மரச் செறிவே, நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப் போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? - இந்த ஞாலமும் பொய்தானோ?


- பாரதியார்