Wednesday, October 24, 2012

பிரபஞ்சம்



எழுத்தாளர் சுஜாதா Coming Of Age in Milky Way புத்தகத்தில் படித்ததாக, பிரபஞ்ச வரலாற்றை சுருக்கமாக 'கடவுள்' என்ற கட்டுரைப் புத்தகத்தில் விவரித்துள்ளார்.

முதன் முதல் ஆதியோடு ஆதியில் காலம், வெளி, சக்தி இம்மூன்றும் தோனிறிய கணத்திலிருந்து துவங்குகிறது பிரபஞ்சத்தின் சரித்திரம்.

பிரபஞ்சம் ஆரம்பித்து 3 நிமிஷம் 42 செகண்டுக்குப் பின் ஹீலியம், ஹைட்ரஜன்  தோன்றியது.

அதன் பின் பத்து லடசம் வருடங்களுக்கு அப்புறம்தான் காலக்ஸி, நட்சத்திரங்கள் தோன்றின. இன்றிலிருந்து 1700 கோடி வருஷம் முன்பு.

450 கோடி வருஷம் முன்னால் சூரியன், மற்ற கிரகங்கள் பிறந்தன. பூமியும் பிறந்தது.

380 கோடி வருஷம் முன்பு, நம் பூமி கொஞ்சம் சூடு குறைந்து இறுகியது.

350 கோடி வருஷம் முன், முதல் நுட்பமான உயிரினம் தோன்றியது.

150 கோடி வருஷம் முன்பு, முதல் தாவரம்.

90 கோடி வருஷம் முன் முதல் ஆண் பெண் பிரிவு.

40 கோடி வருஷம் முன் முதல் பூச்சி.

20 கோடி வருஷம் முதல் மிருகங்கள்.

ஐந்தரைக் கோடி - குதிரை.

மூன்றரைக் கோடி - நாய், பூனை

2 கோடி - குரங்குகள. சுற்றுச் சூழல் இன்றைய நிலை போல.

1.8 கோடி முதல் மனிதன் - ஹோமோ எரக்டஸ்.

6 லட்சம் வருஷம் முன் ஹோமோ ஸேபியன்ஸ் - ஆதி மனிதன்.

36000 வருஷம் முன்பு - நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்தது.

40000 வருஷம் முன் முதல் மனித மொழிகள்.

35000 வருஷம் - முதல் இசைக் கருவி.

20000 - முதல் விவசாயம்.

5600 - முதல் எழுத்துக்கள்.

இதன் பின் நடந்தது. நவீன் இயற்பியல், வானியல், வேதியியல் என்று இன்று வரை வந்து விட்டோம்.

4 நாட்கள் முன்பு - சுஜாதாவின் 'கடவுள்' புத்தகம் படிக்க ஆரம்பித்தது.

அரை மணி நேரமாய் - இந்தப் பதிவு எழுதுவது!!

*****
ஒவ்வொரு மதம் மற்றும் கடவுள் பற்றியும் சுருக்கமாக இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். அறிவியல் பார்வையில் 'கடவுள்' எவ்வாறு தேடப்படுகிறார் என்பதையும் விவரித்துள்ளார்.

படிக்க நல்ல சுவராஸ்யமான புத்தகம்.

*****

அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே

திருவாய்மொழி

அவரவர் தங்கள் அறிவின் படி கடவுளைத் தேடுகிறார்கள்; காண்கிறார்கள். அவரவர் விதிகளின் படி அடைய முடியும்.

அறிவியல் விஞ்ஞானிகளையும் கடவுள் தேடுபவர்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்!

Saturday, October 13, 2012

பசி




பசி - 1

அவனுக்கு நன்றாக பசித்தது. அடையார் ஆனந்தபவனில் பரோட்டா பார்சலுக்காக காத்திருந்தான்.

நேத்து நைட் சிஃப்ட். நல்லா தூங்கிட்டு, சாய்ங்காலம் 5 மணிக்குத்தான் எழுந்திருச்சான். காலையில் ஒரு டீயும் வடையும் சாப்பிட்டது.

அடையார் ஆனந்தபவன் பரோட்டா சூப்பரா இருக்கும். பார்சலுக்கு பதிலாக, சாப்பிட்டே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் கூட வந்தது. தனியாக எப்படி உட்கார்ந்து சாப்பிடுவது.
  
அந்தப் பக்கம் பல விதமாய் ஸ்வீட்கள். குறிப்பாய் ஜிலேபி(இங்கே ஜாங்கிரி என்கிறார்கள்) பார்ப்பதற்கே அழகாய் இருந்தது. லட்டு அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்தால் கோயில் கோபுரம் போலிருந்தது
அப்பா! எவ்வளவு ஸ்வீட்ஸ். தினமும் ஒரு ஸ்வீட் சாப்பிட்டாக் கூட ஒரு மாசம் முழுக்க சாப்பிடலாம் போல் இருக்கே!

கண்டிப்பாய் ஜிலேபி வாங்கனும்.

பரோட்டா பார்சல் வந்தபின், ஜிலேபியும் வாங்கிக் கொண்டான். இரண்டு பைகளையும் பைக்கின் இரண்டு ரியர்வியூ கண்ணாடியில் மாட்டிக் கொண்டான்.

ரூமுக்குப் போய் சாப்பிடலாம். வண்டியை வேகமாக கிளப்பினான்.

கொஞ்ச தூரம்தான் போயிருப்பான். திடீர்னு எங்கிருந்தோ பறந்து வந்த பாலித்தீன் கவர் முகத்தை மூடியதில் தடுமாறி விழுந்தான்.

பைக் கீழே விழுந்ததில் பரோட்டா பார்சல் பறந்து விழுந்தது. இன்னொரு பார்சலில் இருந்த ஜிலேபிகள் நசுங்கிக் கூழாயிற்று.

******


பசி - 2

அவனுக்கு நன்றாக பசித்தது.

கொண்டு போன சாப்பிட்டில், பாதியை ஆபிஸில் இருந்தவர்களே சாபிட்டு விட்டார்கள். சாய்ங்காலம் கிளம்பும் வரை டீக்கு கூடப் போக முடியவில்லை.

ரயில் ஏறுவதற்கு முன், ஒரு கடலைப் பாக்கெட்டையும் மிக்சர் பாக்கெட்டையும் வாங்கிக்கொண்டான்.

ரயிலி ஏறி, கடலையை ரசித்து சாப்பிட்டான். ரயிலில் விற்ற சமோசாவையும் சாப்பிட்டான். வேளச்சேரியில் நின்றிருந்த பஸ்ஸில் ஏறி மிக்சர் பாக்கெட்டையும் முடித்தான். கிளம்பிய பஸ்ஸிலிருந்து ஜன்னல் வழியாக, பாலித்தீன் கவரை வெளியே பறக்க விட்டான்.


******

பசி - 3

அவனுக்கு நன்றாக பசித்தது.

பத்து ரூபாய்தான் பாக்கெட்டில். எப்பொழுதுமே இப்படித்தான், அவன் பசியோடு இருக்கும்படியாய் ஆகிறது.

மயிலாப்பூர் கோயில் அன்னதானத்தைதான் நம்பியிருந்தான். அதுவும் கிடைக்கவில்லை. கையில் காசு உள்ளவர்கள் கூட, பக்தி என்ற பெயரில் ஒரு கட்டு கட்டிவிடுகிறார்கள்.

மீனகளுக்கு எதுவும் போட வேண்டாம் எனறாலும் குளத்தில் பொரியை அள்ளிப் போடுகிறார்கள்.

சாய்ங்காலம் ஆனால் போதும் அவன் கடுப்பாகிவிடுவான். எங்கு பார்த்தாலும் பஜ்ஜி, போன்டாக் கடை. பானிப்பூரிக் கடை, மசாலாப் பொரிக்கடை, சில்லிச் சிக்கன் கடை. இவர்கள் எல்லாம் வீட்டில் போய் சாப்பிடுவார்களா, இல்லையா?

ரயிலில் ஏறி உட்கார்ந்தான். ரயில் எப்பொழுதுமே ஒரு ஹோட்டல் மாதிரிதான் இருக்கும். எல்லோரும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

எதிரில் உட்கார்ந்தவனைக் கண்டதுமே கடுப்பாகிவிட்டது. ஒவ்வொரு கடலையையாய் ரசித்து சாப்பிட்டான். இதில் வேறு, கடலைத் தொப்பையை தூக்கி எறிகிறான்.

அவன் மீது ஒரு தொப்பை விழுந்த போது, ஒரு அறை விடலாம் என்று வெறி வந்தது.

அப்போது வந்த சமோசாவையும் எதிர்த்தாள்  வாங்கி விழுங்கினான். வயிற்றெரிச்சலாய் இருந்தது

நல்லவேளை வேள்ச்சேரி ஸ்டேசன் வந்ததால், எதிர்த்தாள் தப்பினான். இல்லையென்றால், அவனுக்கு வந்த வெறிக்கு..

எதிர்த்தாள் கையில் பாலித்தின் கவரோடு பஸ் ஏறும் வரைக் கூடவே போனான்.

போய்த் தொலையட்டும்! என்று நினைத்தபடி திரும்பி எதிர்பக்கம் நடந்தான்.

சட்டென்று அவன் முன்னாடி, கொஞ்ச தூரம் தள்ளி ஒருத்தன் பைக்கோடு கீழே விழுந்தான். ஒரு பாலித்தின் பார்சல் பறந்து வந்து, அவன் காலடியில் விழுந்தது.

எடுத்துப் பார்த்தால், குருமா வாசனை. அவனுக்கு நன்றாக பசித்தது.