Thursday, May 3, 2012

மரம்



சட்டென்று பிடித்துப் போனதாய் தோன்றியது. அதே சமயம் ரொம்ப நாட்களாய் கூடவே இருந்திருக்கிறது அந்தப் பிடிப்பு.

அதிகமாய் பழகிய மரம் வேப்ப மரம். உச்சி வெயில் நேரத்தில் வேப்பமரக் காற்றுக்கு ஈடு எது? மாலை நேரம், வேப்பமரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் புத்தகம் படிக்கும் சுகம்தான் என்ன?

முல்லை நிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு இந்த நெய்தல் நிலம் பாலையாய் காட்சி அளிக்கிறது. நல்ல வேளையாய் கடற்காற்று உயிரூட்டிக் கொண்டிருக்கிறது. - சென்னை.

கடற்காற்று சுகமா? வேப்பமரக் காற்று சுகமா? பட்டிமன்றம் நடத்தினால் எது ஜெயிக்கும்.

ஏசி யின் வெம்மையில் வேம்பின் குளுமை தெரியாமலே போய்விடுமோ!
மரம் வளர்த்து மரநிழலை வாடகைக்கு விடும் கலிகால எண்ணமும் உண்டு!

*****

மரம் எப்போதும் ஒரு ஆச்சர்யம். ஒரு உயிருள்ள பிரம்மாண்டம் எப்படி மௌனமாய் இருக்கிறது.

மரம் பார்ப்பதற்கே கொள்ளை அழகு. கிளைகள் ஒவ்வொரு திக்கிலும் நீட்டிக் கொண்டு, இலைகளைப் போர்த்திக்கொண்டு மௌனமாய் நின்று எல்லோரையும் ரசித்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரும் மரமும் ஒவ்வொரு வடிவம். மலை விளிம்பிலும் ஆற்றோரத்திலும் கடற்கரையிலும் எப்படியெல்லாம் வளைந்து நெளிந்து வாழ்கிறது. பணிவு என்பது பிரம்மாண்டத்தின் அழகுக் குறிப்போ?

மழைக்கு ஒதுங்கியவர்களுக்குத்தான் புரியும் மரத்தின் ரசனை. தாய் குழந்தையை குளிப்பாட்டுவது போல, மழையில் நனைய பயந்தவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து ரசிக்க வைக்கிறது. மழை நின்றதும் ஒரு காற்றசைவில் மொத்த மழையையும் பொழிவதில் தெரியும் அதன் குறும்பு.

காற்றின் மெல்லிய ஒலிக்கும் தலையாட்டாமல் இருப்பதில்லை மரம். நல்ல இசை ரசனை!

*****

நார்நியா புத்தகத்தில் வருவது போல, ஒரு காலத்தில் நம் கூட பேசி இருந்திருக்கலாம். நாம் அதைப் புறக்கணித்ததில் கோபித்துக் கொண்டதோ! இன்றும் அது ஏதோ சைகை மொழியில் பேசிக் கொண்டிருக்கிறது. நாம்தான் புரியாமல் ஜடங்களாய் இருக்கிறோம்.

தி ஹேப்பனிங் (The Happening) படத்தில் வருவது போல் மரங்கள் கோபித்துக் கொண்டால், நாம் இங்கு வாழ முடியுமா?

நாம் இல்லாமல் எத்தனை ஆண்டுகளாய் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவை இல்லாமல் நாம் எத்தனை ஆண்டுகள் வாழப்போகிறோம்.

ஏதேனும் ஒரு உயிர் கிரகத்தில் மரங்கள் மட்டும் நிம்மதியாய் வாழ்ந்து கொண்டிருக்கலாம்!

*****

வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை,
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும்.

மரமாய் நானும் மாறேனோ
என் மனித பிறவியில் உய்யேனோ...

*****

பின் குறிப்பு:

இந்தப் பதிவில் சில வரிகளை நான் 'ரசித்து' எழுதியிருக்கிறேன். மர நினைவு கூட வசந்தம் தான்.