Wednesday, January 26, 2011

வயது வந்தவர்களுக்கு மட்டும்


இந்த வருசம் நான் படிச்சு முடிச்ச முதல் புத்தகம் கி. ராஜநாராயணன் (கி.ரா.) எழுதிய "வயது வந்தவர்களுக்கு மட்டும்".

நம்ம நாட்டுப்புறக்கதைகளிலிருந்த பாலியல் கதைளோட தொகுப்பு இது. தாத்தா ஒருத்தர் சொல்லுகிற அம்பதுக்கு மேற்பட்ட "கெட்ட வார்த்தை கதைகள்" தான் இந்த புத்தகம்.

கி.ரா. வின் சில வாக்கியங்கள்..

“அடேயப்பா, எத்தனை வகைக் கதைகள்!

இந்தக் கதைகளினால் எதாவது பிரயோஜனம் உண்டா யாருக்காவது?

இந்தக் கதைகள் எல்லாத்தையுமே அப்படிச் சொல்ல முடியாது. பிரயோஜனமுள்ளவை, அல்லாதவை, தெரிந்து கொள்ள வேண்டியவை, மனுசக் கற்பனைகள், அவனோட விகாரங்கள், ஆசைகள், கனவுகள், இப்படி இன்னும் எத்தனையோ அடங்கி இருக்கு இதுகளில்.

இந்தக் கதைகளை கேட்கிற காதுகளையும் ஏற்றுக் கொள்கிற மனசுகளையும் பொறுத்திருக்கிறது எல்லாம்.

ஓரளவு பழுக்காத மனசுகளை இவை பாதிக்கலாம். என்றாலும் இதை என்றைக்கிருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியதுதான்.

இவைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய முன்னோர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல; கோயில்களிலும், தேரிகளிலும் சிற்பங்களாகத் தெரியட்டும் என்றுதான் செதுக்கி வைத்திருக்கிறார்கள்”

“பாலியல் கதைகளைச் சொல்லுவதற்கு ஒருவகை "ஜாலக்" தேவைப்படும். சொல்ல முடியாத, பளிச்ச்சென்று சொல்லிக்காட்ட முடியாத பச்சை வார்த்தைகளை மாற்றுச் சொல்லாலும் குரல் தேய்ப்பாலும் அபிநயத்தாலும் ஒரு சிமிட்டலாலுங் சொல்லிவிட முடியும்.

ஆனாலும் எழுதுகிற போதுள்ள இக்கெட்டு வேற எதிலுங் கிடையாது “

ஆனாலும் நல்லா எழுதியிருக்கிறார். நம்ம "கலாச்சாரம்" பாதிக்காத மாதிரியான வார்த்தைகளைத்தான் உபயோகித்திருக்கிறார். வயதுக்கு வந்த எல்லோரும் படிக்கலாம்.
  
*****

இந்த 'விஷயத்தை' படிக்கிறது; பேசறது; பார்க்கிறது; எல்லாமே தப்புங்கிற பாவனையிலதான் நாம (இந்த உலகம்) இருக்கோம். இந்த மாதிரி ஜோக்குகள் இது வரைக்கும் யாருமே கேட்டதில்லையா. அல்லது பார்த்ததுதானில்லையா (எத்தனை சினிமா! இப்ப இன்டர்நெட்).

இதை ரசிக்கலாம்; ஆனால் யாரும் வெளிப்படையா ஒத்துக்க மாட்டாங்க. என்ன அசிங்கம்னு சொல்லனும்.

நம்ம கலாச்சாரத்தை பொறுத்த வரைக்கும் காமம், கலவி, பால் உறுப்புகள் எல்லாமே கெட்ட வார்த்தை!

நல்ல சினிமாவில் கூட ஒரு எல்லை வரை காட்டலாம்னு அனுமதிக்கிறது நம்ம கலாச்சாரம்; கற்பனையை பலவிதமாய் தூண்டும்படிதான் எல்லாமும் இருக்கிறது. நிஜத்தை ஏற்றுக் கொள்ளாமல் போலித்தனமாய்  கற்பனையில் மட்டும் ஏற்றுக் கொள்கிறோம்.


போதுங்க இந்த போலித்தனம்.

வயிற்று பசிபோல்தான் வயசுப் பசியும். காமத்தை காதலோடு சொன்னதுங்க நம்ம இலக்கியத் தமிழ். காமத்தை தனியே பிரிச்சு, மறைச்சு அசிங்கப் படுத்தினது போதும்.

*****

Saturday, January 22, 2011

என்ன தப்பு


இதில என்னங்க தப்பு?



அவன் அப்படி என்ன தப்பா சொல்லிட்டான்! அதுக்கு போயி இப்படி அவனை அடிச்சிருக்க கூடாது.

இந்த வயசுல ஒரு பையன் ஒரு பொண்ணுகிட்ட முத்தம் கொடுப்பேன்னு சொன்னா தப்பா? நீங்களே சொல்லுங்க.

அவன் மூனாங் கிளாஸ் படிக்கிறான். அந்த பொண்ணை அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. அவ பேர் *** கூட பிடிக்காது.

காலாண்டு பரீட்சையில அவன்தான் ஃப்ர்ஸ்ட் ரேங்க். அந்த பொண்ணு செகண்ட் ரேங்க். அவன்தான் கிளாஸ் லீடர். யார் ஃப்ர்ஸ்ட் ரேங்க் வாங்குறாங்களோ, அவங்கதான் லீடர்.

லீடர்னா ஒரு ஜாலிதான். கிளாஸ்ல பேசுறவங்க தலையில கொட்டலாம்; ஸ்கேலால அடிக்க கூட செய்யலாம். அவன் அதிகமா கொட்டுனது அந்த பொண்ணு தலையிலதான்.

டீச்சர் கிளாஸ்ல இருந்தா கூட, பேசுறவங்க பேரையெல்லாம் போர்டுல அவனைத்தான் எழுதச் சொல்லுவாங்க. ஒருதடவை ஆறுமுகம் ஸார் தமிழ் பரீட்சை பேப்பர்ல, அவனைத்தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம் ரவுண்டு போடச் சொன்னார். லீடர்ங்கிறது ராஜ வாழ்க்கை.

இங்கிலீஸ்ல மார்க்கு குறைஞ்சதால, அரையாண்டு பரீட்சையில அவன் செகண்ட் ரேங்க்; அந்த பொண்ணுதான் ஃபர்ஸ்ட் ரேங்க்; லீடர். அவளும் பழிவாங்கற மாதிரியே, கிளாஸ்ல அவன்தான் எப்ப பாரு பேசுறான்னு டீச்சர்ட்ட மாட்டிவிட்டுடுச்சு. முதல் தடவையா டீச்சர்ட்ட பெரம்பாலா அடிவாங்கினான்.

அன்னிக்கு டீச்சர் லீடரை கிளாஸை பார்த்துக்கச் சொல்லிட்டு போயிட்டாங்க. அந்த பொண்ணு, பேசுற பசங்க பேரையெல்லாம் போர்டுல எழுதிட்டியிருந்துச்சு.

"பார்றா, அந்தப்பக்கம் பேசுற பொண்ணுங்கள்ள எவ பேரையும் எழுதல." அவன் பக்கத்திலிருந்த ஞானத்துக்கிட்ட சொன்னான்.

உடனே அவன் பேரை போர்டில் எழுதினாள்.

"என் பேரை ஏன் எழுதன? என்ன திமிரா"

"நீ ஞானசேகர்ட்ட குசுகுசுன்னு பேசல"

"நான் பேசவேயில்ல. நீ வேணுமின்ன எழுதற. முதல்ல அதை அழி"

"பேசாம இரு, அழிக்கிறேன்"

பேசிட்டிருக்காளே உன் ஃபிரண்டு குள்ள கத்திரிக்கா, அவ பேரை முதல்ல எழுது”

"அவளை குள்ள கத்திரிக்கானு கூப்பிட்ட, டீச்சர்ட்ட சொல்லிடுவேன்"

"எம்பேரை முதல்ல அழிடீ"

"டீன்னு கூப்புட்ட ஸ்கேலால அடிப்பேன்" கோபமாய் கத்தினாள்.

"அடிச்சுப்பாரு. அப்புறம் உனக்கு முத்தம் கொடுப்பேன்"

ஏதோ தெரியாமல் சொல்லிட்டான். அதுக்கு அந்த பொண்ணு அழ ஆரம்பிச்சு.. பசங்களெல்லாம் சிரிச்சு..  குள்ளக்கத்திரிக்கானு கூப்பிட்ட பொண்ணு ஓடிப் போயி டீச்சரை கூட்டிட்டு வந்து...

எத்தனை அடி! டீச்சர்ட்ட அடி.. ஹெட்மிஸ்டர்ஸ்ட்ட அடி.. அப்பாட்ட அடி.. அம்மாட்ட அடி..

*****

கல்லூரியில்..

"டேய்.. அவகிட்ட போயி கேளுடா" அவன் ஃபிரண்ட் சொன்னான்.

"சான்ஸே இல்ல."

"நீதான் எல்லா பொண்ணுக்கிட்டயும் கடலை போடறீல்ல. போய் கேளுடா"

"அந்த பொண்ணை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. நான் கேக்க மாட்டேன்"

"உன்னை என்ன முத்தமாடா கேக்கச் சொல்றேன். பிரிண்ட் எடுக்க ஏ ஃபோர் சீட்தான கேக்கச் சொல்றேன்"

"தயவுசெஞ்சு என்னை விட்டுடு. வேணுமின்ன நீயே கேட்டுக்க. நான் போறேன்"


*****

சுற்றியும் யாருமில்லை. அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். அவள் பேசும் போது உதடுகள் அழகாக  அசைந்தன. கொஞ்சம் தடித்த உதடுகள். சின்ன சின்ன வெடிப்புகள். லேசாய் ஈரப்பதம். ஜீராவில் கொஞ்ச நேரம் ஊறவைத்த ஜிலேபி மாதிரி இருந்தது.

"என்னடா பார்க்குற"

"இல்ல.. ஜிலேபி சாப்பிடனும்னு ஆசையாயிருக்கு"

"சாப்பிடலாம். உனக்கில்லாத ஜிலேபியா.."

கொஞ்சம் தைரியம் வந்தது. இங்கிலீஸ் படத்தில் பார்த்த கிஸ் சீன்களெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. சட்டென்று அவள் உதட்டில் ஒரு முத்தம் ( ஒற்றி எடுத்தான் ) கொடுத்தான்.

"டேய் என்னடா பண்ணுற" அவள் கோபமாய் தோள்பட்டையில் அடித்தாள். "இனிமே உங்கிட்ட பேசமாட்டேன்" உதடுகளை தொடைத்த படி எழுந்து சென்றாள்.

இதில என்னங்க தப்பு? இந்த வயசுல ஒரு பையன் ஒரு பொண்ணுகிட்ட முத்தம் கொடுத்தா தப்பா? நீங்களே சொல்லுங்க.

*****
கதைக்கு பின்..

நிச்சயமா நீங்க படிச்சது கதைதான். அப்படித்தான் நினைச்சு நான் எழுதினேன்.

கடைசியா, அவன் முத்தம் கொடுக்க முயற்சிக்கும் போது ( டிரைன்ல நின்னுக்கிட்டு வரும்போது ) தவறி விழுந்து சாகறமாதிரி எழுதலாம்னுதான், முதல்ல நினைச்சேன்.

பாவமா இருந்துச்சு. அதான் கடைசில முத்தம் கொடுத்துட்டான்.

இப்ப அந்த பொண்ணு பின்னாடி போயிட்டிருக்கான். வேற எதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு இன்னொரு முத்தம் கொடுக்கலாம்னுதான்.

Wednesday, January 5, 2011

கலிகாலம்

கதைக்கு முன்..

1. இந்த கதை வெறும் கற்பனை. ஒரு விஷயம் மட்டும்தான் உண்மை.
2. இது சீரியஸாக எழுதப்பட்டது. அதனால் சீரியஸாக படிக்கவும். ஆனால் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!



கலிகாலம்

உங்கள் பெயர் ? ‘

‘ ஸ்நேதி ‘

‘ எந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள் ? ‘

‘ கொத்தடிமை வேலைக்கு! ‘

‘ உங்கள் அனுபவம் ? ‘

‘ ஐந்து வருடங்கள் அடிமை வேலை பார்த்திருக்கிறேன். ‘

எண் ஏழு கோடியே இருபத்தேழு ஒரு பகா எண். உண்மையா? பொய்யா? ‘

‘தெரியவில்லை! ‘

‘நன்று. நீங்கள் மனிதர்தான். எந்திரன் அல்ல. சில நிமிடங்களில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவீர்கள். காத்திருக்கவும்.’

******

இடம்: சென்னை, திருக்குறள் கட்டிடம்
நாள்: செவ்வாய் கிழமை, 19 , மார்கழி மாதம், பிரமாதீச வருடம் (5–JAN–2094)

அவன் வேலை நிமித்தமாக நிலாவிலிருந்து வந்திருந்தான். இப்பொழுது காத்திருக்கிறான்.

இந்த கதை நடக்கும் நாளை, நாம் பார்க்கப்போவது அரிது என்பதாலும், கற்பனை கதை என்று அறிமுகப்படுத்தியாலும், சில விவரங்கள்.

திருப்புமுனையாக தமிழகத்தில் 2011 வது வ்ருடம் நடந்த தேர்தலில், நடிகர் விஜய் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆனார். அவருடைய 21 வருட ஆட்சியில் ( தமிழ் பொற்காலம்) தமிழ் மொழி உலக மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பணத்தின் மதிப்பு மிகவும் உயர்ந்ததால், மீண்டும் காசு-பைசா-அனா-ரூபா கணக்குகள் வந்தன. ( 3காசு-1 பைசா, 4 பைசா-1 அனா, 16 அனா-1ரூபா).

பூமியில் நிலத்தின் விலை மிகவும் அதிகரித்ததால், மக்கள் நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நதநந்தா, பூமி சூரியனை சுற்றவில்லை என்றும், சூரியன், பூமி, மற்ற கிரகங்கள்தான்  நிலவை கண்டபடி சுற்றுகிறது என்றும் நிரூபித்தார். அதனால் நிலவிலும் நிலத்தின் விலை வேகமாக அதிகரித்தது,


“ஸ்நேதி! அறை எண் ‘ஒன்று மூன்று மூன்று பூஜ்யத்திற்கு’ வரவும்” சத்தமாக அழைப்பு வந்தது.

மின் தூக்கி முன் சென்று 1330 எண்ணை அழுத்தினான். அருகில் வேறு யாருமில்லை.

ஒவ்வொரு அறையாக அவன் முன் வந்து சென்றது. 1330 என்று எழுதிய அறை வந்து நின்றது. ( இந்த வகை மின் தூக்கி அரிய கண்டுபிடிப்பு! புரியாதவர்கள், மீண்டும் படிக்கவும்)

அவன் கதவை திறந்து உள்ளே சென்றான். ஊஞ்சலில் ஒருவர் அமர்ந்திருந்தார். நிச்சயம் அவர்தான் நேர்முகத்தேர்வு நடத்தப் போகிறவர்.

' வணக்கம் ஐயா! ' கைகூப்பிவிட்டு, நேராக கைகட்டி நின்றான்.

' வணக்கம். உன்னை பற்றி கூறு! '

' என் பெயர்  ஸ்நேதி. இப்பொழுது நிலவில் குடியிருக்கிறேன். பிறந்தது வளர்ந்து எல்லாம் சென்னைதான்.
ஐந்து வருடங்கள் நிலவில் அடிமையாக வேலை பார்த்திருக்கிறேன்.
எட்டு மணி நேர வேலையென்றால், பன்னிரண்டு மணி நேரம் வரை அலுவலக்த்தில் இருப்பேன். தேவையென்றால் இருபது மணி நேரம் கூட இருப்பேன்.
மாதத்திற்கு ஒருநாள் மட்டும்தான் ஓய்வு விடுமுறை எடுப்பேன். '

அவர் முகத்தில் திருப்தி. ' உன் பலம் ? '

' என் பலம் தேவைப்படுகிற அளவுக்கு பொய் பேசுவேன். அடுத்தவர்களை ஏதேனும் சிக்கலில் மாட்டிவிடும் பட்சத்தில் உண்மைகூட பேசுவேன் `

' நன்று ' அவர் முகத்தில் புன்னகை. ' உன் பலவீனம் ? '

' உண்மை பேசி மாட்டிவிட்டதை, அவரிடமே பெருமையாக சொல்லிவிடுவேன். ‘

' மிக்க நன்று. சம்பளம் நான்கனா. வேலை செவ்வாய் கிரகத்திலென்றால் சம்மதமா ? '

' செவ்வாய் கிரகம் என்றால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி '

' நீங்கள் செல்லலாம். உன் வேலைக்கான அழைப்பு விரைவில் தெரிவிக்கப்படும். "

' நன்றி ஐயா '

அவன் வெளியேறுவதை பார்த்து நினைத்துக்கொண்டார். 'இந்த அடிமை மிகமிக திறமைசாலி. வாய்தான் காதுவரை நீளும்!'

*****

அவன் பறக்கும் தொடர்வண்டியை பிடித்து நிலவிற்கு வந்து சேர்ந்தான். அவன் வீட்டிற்குள் வந்ததும் அப்பாவுடைய குரல் கேட்டது. சித்திரை மாதம் வந்தால் 110 வயது!

‘ உலகத்தை சுத்திட்டு வரீயா. உன்னை செவ்வாய் கிரக்கத்தில வேலைக்குச் சேர சொல்லி அழைப்பு வந்திடுச்சு. ‘

சந்தோஷம். ஆனாலும் அவன் எதுவும் பேச வில்லை.

மீண்டும் அப்பா குரல் கேட்டது.

" அந்த காலத்துல, வேலை தேடி ஈரோட்டுலிருந்து சென்னைக்கு குடிவந்தோம்.
இப்ப நிலாவில வீட்டு வாடகை ஏறிடுச்சுதன்னு, வேலையை மாத்திட்டு செவ்வாய் கிரக்த்துக்கு போறீங்க!"