Monday, July 28, 2008

பாத்திரம் அறிந்து பிச்சையிடு

உலகத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு உண்டு. அதன்படி ஆராய்ந்து பார்த்தால், தானம் செய்வதற்கும் - அதாவது பிச்சை போடுவதற்கும் ஒரு ‘குறைந்தபட்ச’ (அதிகப்பட்ச) அளவு உண்டு; ஒரு ரூபாய்.

பொதுவிடம் - இரண்டே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் “ பிச்சைக்காரர்கள் உலாவுமிடம்”.

பிச்சைக்காரர்கள் தினந்தோறும் நம்முடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவர்கள். நாமும் விதவிதமான பிச்சைக்காரர்களை சந்திக்கிறோம்.

“கண் தெரியாதவர்கள் (அதிக எண்ணிக்கையில்),
கை கால்களில்லாதவர்கள்,
பக்திப் பாடல்களையும் பழைய பாடல்களையும் பாடுபவர்கள்,
பலவிதமான இசைக்கருவிகளை வாசிப்பவர்கள்,
சாகசங்கள் செய்யும் சின்னஞ்சிறுவர்கள்,
பூகம்பத்திலோ வெள்ளத்திலோ உடைமைகளை இழந்தவர்கள்,
ஊருக்குப் போக முடியாமல் பணத்தை தொலைத்தவர்கள்,
ஒரு குழந்தையை இடுப்பிலும் இன்னொரு சிறுமியை கையில் பிடித்திருக்கும் கர்ப்பிணிப் பெண்கள்,
பசியோடு காட்சியளிக்கும் முதியவர்கள் “
ஏனோ ஊமைப் பிச்சைக்காரர்களை மட்டும் பார்க்க முடிவதில்லை !

அவர்களும் பல விதமான அலைவரிசைகளில் ஒலி எழுப்பி பிச்சை கேட்கிறார்கள். நாமும் பரிதாபப்பட்டோ அல்லது பயந்து போயோ ஒரு ரூபாய் தானம் செய்கிறோம். சில்லறை இல்லாவிட்டால் வேறு வழியில்லாமல் இரண்டு ரூபாயும் கொடுக்கிறோம். (சில நியாயஸ்தர்கள்
“சில்லறை இல்லை” என்ற உண்மையை சொல்லி விடுகிறார்கள்).

அதாவது சட்டைப் பையில் உள்ள மிகக்குறைந்தப்பட்ச காசையே அதிகப்பட்சமாய் தானம் செய்கிறோம்.

சில விசேஷ தினங்களில், (பிறந்த நாள்,திருமண நாள்) கோவிலுக்குப் போய் வரும்போது தாரளமாய் பத்து ரூபாய் வரை தானம் செய்வதுண்டு. இன்னும் சில தர்மவான்கள் அநாதை இல்லத்திற்கோ அல்லது முதியோர் இல்லத்திற்கோ ஒரு வேளை உணவுக்கான தொகையை அளிப்பதுண்டு.

ஒரு சிலர் வேண்டுதல் காரணமாக கோவிலில் உணவோ அல்லது உடையோ தானம் செய்வதுண்டு. இப்படி எல்லோரும் ஏதேனும் வகையில் தானம் செய்து வருகிறோம்.

மேலும் தானம் செய்வதை விமர்சிக்கும் முன், கதையொன்றினை சொல்ல விரும்புகிறேன்.

தானம் பற்றிய கதை


மகாபாரதத்தின் கிளைக் கதையாக இது சொல்லப்பட்டு வருகிறது.

அர்ஜுனன், கிருஷ்ணனிடம் கேட்டான்.
“கிருஷ்ணா, கர்ணன் உண்மையிலே தானம் செய்வதில் மிகச்சிறந்தவனா ! “

“அர்ஜுனா, உனக்கு அதிலென்ன சந்தேகம்”, எனக் கேட்டு கிருஷ்ணன் புன்னகைத்தான்.

“கிருஷ்ணா, உலகத்தில் எல்லா அரசர்களும் தானம் செய்கிறார்கள். தர்மத்தின் மறு உருவமாக விளங்கும் அண்ணன் யுதிஷ்டிரனும் தாரளமாய் தானம் செய்கிறார்.

துரியோதனன் கூட தானம் செய்வதில் சிறந்தவன். அவன் தானே கர்ணனுக்கு நாடளித்தவன்.

இப்படி பல அரசர்கள் தானம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்க,
எப்படி கர்ணன் மட்டும் தானம் செய்வதில் மிகச்சிறந்தவன் ஆவான்?”
, என்று அர்ஜுனன் பேசி முடித்தான்.

“உன்னுடைய கேள்விக்கான விடையை இப்பொழுது நான் கூறுவதை விட, ஒரு போட்டியின் மூலம் கண்டறியலாம்.
அர்ஜுனா, நாளை சூரிய உதயத்தின் போது இங்கு வருவாயாக. உனக்கும் கர்ணனுக்கும் ஒரு போட்டி வைக்கிறேன்."
, என்றான் கிருஷ்ணன்.

அர்ஜுனனும் வியப்போடு திரும்பிச் சென்றான்.
அடுத்த நாள் சூரிய உதயத்தின் போது அர்ஜுனன் அதே இடத்திற்கு வந்த போது, அங்கு தங்கக் குன்று ஒன்று பளபளவென மின்னியது.

கிருஷ்ணன் அவனை ஆவலோடு எதிர்கொண்டு, சொன்னான்.
“இந்த தங்கக் குன்றினைப் பார். இன்று சூரியன் மறைவதற்குள் இத்தனையையும் நீ தானம் செய்ய வேண்டும். போட்டி இதுதான்.”

யாசகம் கேட்பவர்களுக்கெல்லாம் அர்ஜுனனும், அந்த தங்கக் குன்றினை பாளம் பாளமாக வெட்டிக் கொடுத்தான். சூரியன் மறையும் முன் அனைத்தையும் தானமாக கொடுத்து முடித்தான். எதுவும் பேசாமல் வெற்றிச் சிரிப்போடு கிருஷ்ணனைப் பார்த்தான்.

கிருஷ்ணனும் புன்னகையோடு,
“அர்ஜுனா, நாளை கர்ணன் என்ன செய்கிறான் என்று பார்ப்போம்”, என்றான்.

மறுநாள் கிருஷ்ணன் மறுபடியும் தங்கக் குன்றினைப் படைத்திருந்தான். கர்ணனுக்கும் அதே நிபந்தனைகளை விதித்தான். கர்ணன் தங்கக் குன்றுக்கு அருகில் யாசகம் கேட்பவர்களுக்காக காத்திருந்தான். அர்ஜுனனும் ஆவலோடு காத்திருந்தான். அப்பொழுது ஏழை ஒருவன் கர்ணனிடம் வந்தான்.

“கர்ண மகாராஜா உம் கொடையின் கீழ் எல்லோரும் இன்புற்றிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு தொலை தூரத்திலிருந்து வருகிறேன். நானும் என் குடும்பமும் வறுமையில் வாடுகிறோம். தயவுசெய்து எங்கள் வறுமையை போக்கி வளம்பெறச் செய்ய வேண்டும்” , என்றான்.

கர்ணன்,
“இந்த தங்கக் குன்றினை நீயே வைத்துக்கொள்.”
என்று கூறி தங்கக் குன்றினை முழுவதுமாய் தானம் கொடுத்தான். கிருஷ்ணனிடம் விடை பெற்று அந்த இடத்தை விட்டுச் சென்றான்.

கிருஷ்ணன் அர்ஜுனனிடம் திரும்பி,
“நீயும் தங்கக் குன்றினைத் தானம் செய்தாய்; கர்ணனும் அதே அளவுள்ள தங்கக் குன்றினைத் தானம் செய்தான். இப்பொழுது நீயே சொல்; கர்ணன் மட்டும் எப்படி தானம் செய்வதில் மிகச்சிறந்தவன் ?”

இந்தக் கதையை படிக்கும் போது இரண்டு வகையான சிந்தனைகள் தோன்றின.

சிந்தனை - 1:

நாமும் அர்ஜுனனைப் போன்றவர்களே. எத்தனையோ வெட்டிச் செலவுகள் தாரளமாய் செய்தாலும் தானம் செய்வதில் மட்டும் தயக்கம் கொள்கிறோம். சில செலவுகளின் பட்டியல்..

ஒரு முறை டீ அல்லது காபி குடிப்பதற்கான செலவு 10ரூ.
சில பிடித்த திண்பண்டங்களுக்கான செலவு 20ரூ
சினிமா பார்ப்பதற்கான செலவு 100ரூ ( திருட்டு விசிடி / டிவிடி என்றால் 50ரூ).
புதிய துணி வாங்குவதற்கான செலவு 500ரூ - 1000ரூ


இது ஒருவருக்கான சராசரி செலவு மட்டுமே. தேவையே இல்லாமல் செய்யும் எல்லாச் செலவுகளும் வெட்டிச் செலவுகளே. வெட்டிச் செலவுகளை கண்டறிவதும் அதை தானம் செய்வதும் உங்களின் விருப்பம்.

டீ குடிக்கும் போது ஒரு ரூபாயை பிச்சையிட்டும், புதிய துணிகளை வாங்கிக் கொண்டு - பழைய துணிகளை தாரளமாய் தானம் செய்தும், நம்மை நாமே சமாதனப் படுத்திக்கொண்டு - பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

சிந்தனை - 2:

சிந்தனை ஒன்றினைப் படித்து விட்டு, தானம் செய்வதைக் கிண்டல் அடிக்கவே இது எழுதப்பட்டதாக நீங்கள் நினைத்தால் -
அது முற்றிலும் தவறு. வேண்டுமானால் இந்தப் பகுதியின் தலைப்பைப் படித்துப் பாருங்கள் - “பாத்திரம் அறிந்து பிச்சையிடு”.

இன்று பிச்சையெடுத்தலை தொழிலாகவே செய்து வருகிறார்கள். அத்தொழிலில் மூலதனம் செய்யும் பங்குதாரராக உங்களுக்கு விருப்பமா ?

அதனால் ஒரு ரூபாய் கூட பிச்சை போட வேண்டாம். முடிந்தவரை உணவுப் பொருளாகவே வாங்கிக் கொடுங்கள். அதே போல் அநாதை அல்லது முதியோர் இல்லங்களுக்கு உணவுப் பொருளாக கொடுப்பதற்குப் பதிலாக பணமாக கொடுக்கலாம்.

எத்தனையோ பேர் தானம் செய்ய விரும்பினாலும் எப்படி செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நிதி திரட்டி எத்தனையோ நல்லது செய்யல்லாம். முடிந்தால் ஒருவருக்கான கல்விக்கான செலவை ஏற்றுக் கொள்ளலாம்.

இரத்த தானம், சிறுநீரக தானம், கண் தானம் பற்றி கூட சிந்திக்கலாம்.

கருத்து
தானம் செய்வதற்கென்று எந்த அளவுகோலும் இல்லை.
தானம் என்பது கொடுக்கப்படும் பொருளின் அளவைப் பொருத்தது அல்ல.
கொடுக்கின்றவரின் மனதைப் பொருத்தது.