Saturday, January 21, 2012

பிருந்தாவனம்



பிருந்தாவனம் - மகான் ஸ்ரீ ராகவேந்திரரின் சரிதம் - பாலகுமாரன் அவர்களின் புத்தகத்தை படித்ததில் ஒரு நிறைவு.


பாலகுமாரன் - காதலையும் காமத்தையும் தெளிவாய் சிந்திக்க வைத்தவர். மனிதர்களின் குணங்களையும் சூழ்நிலைகளையும் புரியவைத்தவர். பெண்களிடம் மரியாதை செலுத்தக் கற்றுக்கொடுத்தவர். குறிப்பாய் அகங்காரத்தின் உச்சியினைக் காட்டியவர். தியானம், பக்தி & கடவுள் பற்றி சிந்திக்க வைத்தவர். அவர் எழுத்தின் மூலம் சிந்திக்க ஸ்ரீ  ராகவேந்திரரின் சரிதம் படித்தது சந்தோஷம்.

ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமைகளைப் பற்றி (அவைகளைப் பற்றித் தெளிவில்லாமல் எழுதிவிடுவேனா என்ற அச்சத்தில்) இந்தப் பதிவில் எழுதப் போவதில்லை.

படித்த சில கருத்துக்கள்:-

அஹம் பிரம்மாஸ்மி - என்பது வேத வாக்கியம். யஜுர் வேதத்திலிருந்து எடுக்க்ப்பட்ட ஒரு சொல் வாக்கியம்.

நானே கடவுள் என்று அர்த்தம் கொள்கிறது அத்வைதம். இரண்டல்ல ஒன்று. அதாவது பரமாத்மா என்கிற விஷயத்திலிருந்து இந்த ஜீவன் பிரிந்து வந்து இங்கு வாழ்ந்து மீண்டும் பரமாத்மாவோடு கலக்கிறது.

நானும் கடவுளும் என்று அர்த்தம் கொள்கிறது த்வைதம். இரண்டும் வெவ்வேறானவை. பரமாத்மா ஜீவாத்மா இரண்டும் கலக்க முடியாது. ஜீவாத்மா இடையறாது பரமாத்மாவை வணங்கி, அதற்கு அருகில் இருப்பது (கலப்பது அல்ல).

நிரம்ப பக்தி செய்தால் பரமாத்மாவோடு கலக்கலாம் என்கிறது விசிஷ்டாத்வைதம்.

******

தான் சிறந்த மதவாதி என்று காட்டிக்கொள்ள மற்ற மதத்தைக் கண்டிப்பது ஒரு சாதரணத் தந்திரம்.

தன் மதம் பற்றி எந்த ஞானமும் இல்லாதவனே மற்றவர் மதம் பற்றி நிந்திப்பான். கடவுள் பற்றிய அக்கறை இல்லாதவனே தன் மதம் மட்டும் சிறந்தது என்று வாதிப்பான்.

மதம் முக்கியமே இல்லை. கடவுள் தேடுதல்தான் முக்கியம்.

******

ஆசாரம் - விதிமுறைகளின்படி வாழ்தல் என்று அர்த்தம்.

அவை கணக்கிலடங்கா. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வழிமுறைகள். எல்லாமும் ஆசாரம்தான்.  அது காலத்திற்கு காலம் மனிதர்க்கு மனிதர் வேறுபாடுடைய விஷயம்.

ஆசாரத்தின் நோக்கம் மனிதநேயம். மனித நேயமில்லாத ஆசாரம் உயிரற்ற உடம்பு.

கடவுளைத் தேடுதலை விட்டுவிட்டு சம்பிராதயங்களில் மனம் ஈடுபடுகிறபோது, அது அபத்தமாகிறது. சடங்குகள் மட்டும் வாழ்க்கை அல்ல. அது தாண்டி உண்மையை உணர்தல், கடவுளை அடைதல் மிக முக்கியம்.

******

புத்தகத்தின் கடைசி வரிகள் சில:

மஹான்களின் சரிதம் படிக்கப் படிக்க மனதில் தெளிவும் நம்பிக்கையும் நிச்சயம் ஏற்படும். நல்வழிப் புலப்படும்.

Tuesday, January 17, 2012

இது தேவைதானா




இது தேவைதானா? என்று என் தம்பிதான் அடிக்கடி கேட்பான். இந்த அஃறிணை என்ற பதிவு தேவைதானா? என்று என்னை நானே கேட்டதின் பதில், இந்த பதிவு!

வரலாறு

* படிக்கும் பழக்கம் ஆரம்பித்தவுடனே எழுதும் ஆசையும் வந்துவிட்டது.

பதிவின் நோக்கம்:

* எழுத்தாளானாகும் முயற்சியில்லை இது. ஆனால் இது தமிழில் சரியாக எழுதுவதற்கான பயிற்சி.

* நிறைய ரசிகர்கள் ரசிக்கும் படியாக எழுதுவதற்கல்ல. (எனக்கு புரிந்த) உண்மையை நண்பர்கள் மட்டுமாவது புரிந்துகொள்ளும் வகையில் எழுதுவது.

* படித்த புத்தகங்களைப் பற்றி எழுதப் போகிறேன். விமர்சனம் இல்லை; பிடித்ததை மட்டும் சுட்டிக் காட்டுவதற்காக.

* இனி நிறைய கதை, கவிதைகளை எழுதப் போகிறேன். ஒரு வரியில் நான்கு வார்த்தைகளுக்கு மிகாமல் இருந்தால், அது கவிதை; இல்லையென்றால் கதை.

* யாருமே படிக்கவில்லை என்றாலும் முடிந்தவரை எழுதுவது ( வேறு வழியில்லை, நண்பர்கள் படித்தே ஆக வேண்டும். இல்லை என்றால் நேரடியாக சொல்லி புரிய வைப்பேன். ஜாக்கிரதை ! ).

பிடிச்சா படிங்க!
பிடிகலைன்னாலும் படிங்க!

Tuesday, January 10, 2012

புத்தகக் கண்காட்சி



பொங்கல் என்றதும் எனக்கு ஞாபகத்துக்கு வரும் இரண்டு முக்கிய விஷயங்களில் ஒன்று: புத்தகக் கண்காட்சி.

போன வருடம் வாங்கிய புத்தகங்களில் இன்னும் சில படிக்காமலே இருக்கிறது. (கண்ணில்படும் புத்தகத்தையெல்லாம் வாங்குவதாலும், நூலகத்தில் பிடித்த புத்தகங்கள் கிடைப்பதாலும் எல்லாவற்றையும் எப்போதும் படிக்கமுடிவதில்லை!)
இன்னும் படிக்கவேண்டியவை:
சுந்தர ராமசாமியின் அழைப்பு
சுந்தர ராமசாமியின் தொலைவிலிருக்கும் கவிதைகள்
தியாகராஜர் கீர்த்தனைகள்
குருஜி வாசுதேவ் அவர்களின் சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்
சுஜாதாவின் சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்
தகழி சிவசங்கரப் பிள்ளையின் செம்மீன்
ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம்

அதனால் இந்த வருடம் இரண்டு புத்தகங்கள் மட்டும்தான் வாங்குவது என்று முடிவெடுத்தேன்.

*****

வழக்கம்போல் நானும், நண்பர் சுப்பிரமணியனும் (சுபம்) சென்றோம். நண்பர் கலைவாணி அவர்கள்  கணவருடனும் தேஜீவோடும் வந்திருந்தார். இந்தமுறை மாலதியும் உண்ணியும் கலந்துகொண்டார்கள். வெகுநாளாய் புத்தக கண்காட்சியை எதிர்பார்த்திருந்த சக்திவேல் எங்களுக்கு முன்னதாகவே வந்திருந்தான் (பெங்களூரிலிருந்து இதற்காகவே!).

சனிக்கிழமை அன்று நல்ல கூட்டம். ஞாயிறு அன்று அதை விட இரண்டு மடங்கு கூட்டம் ( என் தம்பி கமலக்கண்ணன், நண்பர்கள் மணி, முருகானந்தன் & கண்ணனுடன் மறுபடியும் சென்றிருந்தேன்).

*****

பத்து வரிசைகளில் புத்தக பதிவாளர்களின் ஸ்டால்கள் இருந்தன. கிட்டத்தட்ட இரண்டு வரிசைகளில் முழுக்க சி.டி, டி.வி.டி விற்கும் ஸ்டால்களும் இங்கிலீஸ் புத்தக ஸ்டால்களும் இருந்தன.

பொன்னியின் செல்வன் விதவிதமாய் ஒவ்வோரு ஸ்டால்களிலும் பார்க்க முடிந்தது. காவல்கோட்டம் புத்தகமும் நிறைய ஸ்டால்களில் கிடைக்கிறது
திருக்குறள், பாரதியார் கவிதைகள் & பாரதிதாசன் கவிதைகள் போன்ற புத்தகங்களும் பல பதிப்புகளில் கிடைக்கிறது.
சிறுவர்களை கவரும் விதத்தில் பல வண்ணங்களோடு புத்தகங்கள் கிடைக்கின்றன. (வீட்டில் சின்ன பசங்க இருந்தால், கண்டிப்பா கூட்டிட்டு போங்க).

*****

எஸ். ராமகிருஷ்ணன்


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்தது அளப்பரிய சந்தோஷம். அவர் ரசிகர்களுடன் உரையாடியதை அருகிலிருந்து கேட்கமுடிந்தது.

எழுதுவது போல் அவர் பேச்சும் இயல்பாய் இருந்தது. ஒரு வாக்கியத்தின் அர்த்தத்தையும் அழகையும் ரசிப்பதற்குள் அடுத்த வாக்கியத்திற்கு சென்றுவிடுகிறார்!

அவரோடு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவர் எழுத்துக்கள் ஆழமானவை என்றோ தெளிவானவை என்றோ சொல்வதில் என்ன இருக்கிறது. அவர் சொன்னதையே நான் புரிந்துகொண்டேனா என்பதே புரியவில்லை. முதன்முறையாய் வெற்று வார்த்தைகளை பேசாமல் அமைதியாய் நின்றிருந்தேன்.

அவரோடு புகைப்படம் எடுக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு,
மற்ற எழுத்தாளர்களை (கி.ரா, லா.ச.ரா & நகுலன்) அறிமுகப் படித்தியதற்கு நன்றி கூறினேன். நகுலன் கவிதைகளை தேடிக் கிடைக்கவில்லை என்றதும், காவ்யா பதிப்பகத்தில் கிடைக்கும் என்று கூறினார்.
எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ரசிகன் என்பது பெருமை!

*****

மனுஷ்ய புத்திரன் அவர்களை சந்தித்து, அதீதத்தின் ருசி நன்றாக இருந்தது என்றும், குறிப்பாக மழை பற்றிய கவிதை  மிகவும் பிடித்தது என்றும்,

யாவரின் மீதும்
பெய்யும் மழை
யாருமே இல்லாதது போல
பெய்கிறது!

கவிதையையும் அவரிடமே சொன்னேன்.

*****

பாதை இசை நண்பர்களை அவர்களின் ஸ்டாலில் சந்தித்தேன். அவர்களின் இரண்டு புக்கிசைகளும் ரணம்சுகம் & நியான் நகரம் நன்றாக இருந்ததை தெரிவித்தேன்.
குறிப்பாக பாரதி பாடலின் இசை வடிவம் பிடித்துப் போனதை கூறி, சமீர் அவர்களோடு கைக்குலுக்க முடிந்தது.

*****

வாங்கிய புத்தகங்கள்:
எஸ். ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் - விஜயா பதிப்பகம்
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் - கவிதா பதிப்பகம்
நகுலனின் நாய்கள் - காவ்யா பதிப்பகம்
நகுலன் கவிதைகள் - காவ்யா பதிப்பகம்
மனுஷ்யபுத்திரனின் நீராலானது - உயிர்மை பதிப்பகம்
எஸ். ராமகிருஷ்ணனின் சித்திரங்களின் விசித்திரங்கள்- உயிர்மை பதிப்பகம்
ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - மீனாட்சி பதிப்பகம்
பாலகுமாரனின் பிருந்தாவனம் - விசா பதிப்பகம்
பாலகுமாரனின் முதிர்   கன்னி - விசா பதிப்பகம்
சாருநிவேதிதாவின் தேகம் -உயிர்மை பதிப்பகம்
ஜே. கிருஷ்ணமூர்த்தியின் On Relationship - கிருஷ்ணமூர்த்தி ஃபௌன்டேசன்
(ஒவ்வொரு வருடமும் சுபம் ஒரு புத்தகம் வாங்கித்தருவார். இந்த முறை உபபாண்டவம் வாங்கித்தந்தார்.)

*****

புத்தகங்களைப் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, காண்பதற்காகவது கண்காட்சியில் கலந்து கொள்ளுங்கள்!

Friday, January 6, 2012

மோகமுள்



தி.ஜானகிராமன் அவர்களின் மோகமுள் - ஒரு அருமையான புத்தகம்.  சில புத்தகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் அளவிடமுடியாது. இப்படித்தான் என்று முடிவு செய்த கருத்துக்களை அடியோடு புரட்டிப்போட்டு விடுகிறது. மோகமுள் - அப்படியொரு தவிர்க்கமுடியாத புத்தகம். இதில் மரபு மீறல்களுக்கான சூல்நிலையை சந்திக்கமுடிந்தது.


எனக்கு தமிழில் வார்த்தைகள் கிடைக்காமல் போன தருணங்கள் பல..

காதலுக்கு காமத்துக்கும் இடையான ஒரு வெளி, நட்புக்கும் காதலுக்கும் இடையில் தயங்கி நிற்கும் ஒரு வார்த்தை!

ஆனால் முதன் முறையாய் 'மோகம்' என்றொரு வார்த்தைக்கான விளக்கம் தேடச் செய்தது இந்த புத்தகம்.




மோகம்-1

ஆஸ்துமாவுடன் போராடும் வயதானவனின் மனைவியாய் வரும் அழகான இளம்பெண் தங்கம்மா. சுவரேறிக் குதித்து பாபுவைத் தேடச்செய்ய அவளைத் தூண்டியது எது? காதலா! காமமா!
கள்ளக்காதல் என்று பொத்தாம் பொதுவாய் புறக்கணிக்கப்படும் செய்யும், அவளின் மோகத்தை படித்துவிட்டு அவள் மீது இரக்கம் கொள்ளாமல் என்ன செய்வது.

பாபுவைப் போல் ஜன்னல் கதவுகளைச் சாத்தும் தைரியம் இங்கு எத்தனை பேருக்கு உண்டு!

மோகம்-2

பாபுவை விட யமுனா பத்து வயது பெரியவள். பாபு யமுனாவின் மீது வைத்திருக்கு பக்தி; யமுனா பாபுவின் மீது வைத்திருக்கும் பாசம்; சட்டென்று அவள் மீது கொண்டது "மோகம்" என்று புரிந்ததும், பாபுவின் துணிச்சலை வியக்காமல் இருக்க முடியவில்லை.

அப்படியும்  கூட ஏன் யமுனாவுக்கு (பெண்களுக்கு) பாபுவின்(ஆண்கள்) மீதிருக்கும் அன்பு குறைவதே இல்லை!

இசை

ரங்கண்ணாவைப் பற்றிப் படித்தபிறகு இசை மேதைகள் இப்படித்தான் இருப்பார்கள் என்னும் மரியாதை ஏற்பட்டுவிட்டது. இசையை ரங்கண்ணாவைப் போல் அனுபவிக்க கிடைப்பது பெரும் பாக்கியம்!

குருவைப் பற்றி பல முறை (எழுத்தாளர் பாலகுமாரன் எழுதி) படித்ததுண்டு. குரு இப்படித்தான் இருப்பார் எனபற்கு நல்ல உதாரணம் - ரங்கண்ணா அவர்கள்.

கற்றுக்கொள்பவர்களுக்கு குரு சொன்ன பாடம்:
''ஜெண்டை வரிசை ஆகும்போது வெள்ளைக் கடுக்கண் வேணும் போலிருக்கும். வர்ணம் வந்தா மயில் கண் வேஷ்டி, மல்லு சட்டை. கீர்த்தனம் வந்தா கொஞ்சம் அத்தர் இருந்தா தேவலை போல இருக்கும். அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு அலையும். அதுக்கப்புறம் சங்கீதம், பிராணன் எல்லாம் ஒன்னொன்னா கரையும் ...............................................பணமும்,பேரும்,துர்நடத்தையும் எங்கே, எங்கே என்று வாயைப் பிளந்து கொண்டு விழுங்க காத்திருக்கும் கலை இது."


நட்பு

பிடித்தமான இன்னொரு சிறந்த நட்பு பாபு & ராஜம் ( மற்றொன்று: இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் கதையில் வரும் சிவா & கோபால் நட்பு ).

*****

மோகமுள் - ஒரு சிறந்த அனுபவம்..

Sunday, January 1, 2012

வாழ்தல் இனிதென..



ஒவ்வொரு செயலும் செய்யும் போதும் இரண்டு விதமான முடிவுகளை மட்டுமே எதிர் நோக்கி உலகம் காத்திருக்கிறது.

வெற்றி தோல்விகளை எதிர்பார்த்தே, எல்லோரும் உற்றுநோக்குகிறார்கள். (வெற்றியாளர்களைப் பற்றியோ வெற்றி பெருவதைப் பற்றியோ இங்கு விவாதிக்கப் போவதில்லை. தைரியமாய் படியுங்கள். )

சாதாரன மக்களாகிய நாம், தோல்விகளை கண்டு பயந்து செய்யாமல் விட்டுப் போகும் செயல்கள்தான் எத்தனை?

ஆசைகளைக் கூட அளந்து பார்த்து கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு கணம் மட்டும் வந்து தூக்கிப்போட்ட பேராசைகளை எண்ணிப் பாருங்கள். பேராசைக் கனவுகளை அளந்து பார்க்கலாமா!

*****

பேராசை - பெரிய ஆசை.
இருபத்தெட்டு வயதில் மிருதங்கம் கற்றுக்கொள்ளும் ஆசை அல்லது ஓவியம் வரைய ஆசை. ஆசைப்படுபவருக்கோ இசையை கேட்கும் பழக்கமில்லை; உற்றுப்பார்க்கும் பழக்கமும் அல்லாதவர்.

நிச்சயமாய் இந்த பெரிய ஆசைகளை தூக்கிப் போட்டுவிடுவார். அவருக்குத் தெரியும் இது வெற்றிபெறக் கூடியதல்ல.

வெறும் கால விரயம் என்று கருதுபவர்களுக்கு மட்டும் இந்தக் கருத்து.

*****

எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய கதை (கடலோரக் குருவிகள் புத்தகத்தில் வரும்):

கடலோரமாய் ஒரு மரத்தில் இரு குருவிகள் வாழந்தன. காற்றடித்ததில் அதன் முட்டைகள் கடலுக்குள் விழுந்தன.

குருவிகளுக்கோ வருத்தம். கடலுக்குள் விழுந்த முட்டைகளை எடுப்பது எப்படி! கடைசியில் கடல் நீரை இறைத்து வெளியே ஊற்றுவதென முடிவெடுத்தன.

அவற்றின் சிறிய அலகுகளால் நீரை கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே எடுத்துச் சென்று ஊற்றின. நாட்கள் ஓடின. மனம் தளராமல் நீரை வெளியேற்றின.

பார்த்துக் கொண்டிருந்த கடவுள் கடல் நீரை வற்றச் செய்து, முட்டைகளை குருவிகளை எளிதாக எடுக்கும்படி செய்தார்.

முட்டைகள் கிடைத்தது எப்படி? குருவிகளின் முயற்சியா! கடவுளின் கருனையா!
*****

நாத்திகர்களுக்கும் திருவள்ளுவர் எழுதியிருக்கிறார்.

தெய்வத்தானா காதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.

*****

வெற்றி பெறுவது மட்டும் வாழ்க்கை இல்லை.
தூக்கிப் போடும் முன் ஒருமுறை ஆசையை முயற்சித்துப் பார்க்கலாம். வெற்றியை நோக்கி அல்ல! தோல்வியை நோக்கியே..

தோல்வியுறும் என்று தெரிந்த பின், கவலை எதற்கு? சந்தோஷமாய் முயற்சி செய்யலாமே!

எந்த செயலும் செய்து பார்ப்பது படிப்பினையே! வெறும் கால விரயம் இல்லை.

யாருக்கு வேண்டும் வெற்றி. எல்லோருக்கும் வேண்டியது திருப்தியும் சந்தோஷமும்தான்.

செய்து பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று வருந்தாமல், இன்று கூட சந்தோஷமாய் செய்து பார்க்கலாம்!

நம் ஆசைப்படுவதற்காக செய்யும் சின்ன சின்ன செயல்கள்தான் வாழ்க்கையை சந்தோஷமாய் நிரப்புகின்றன.

கணியன் பூங்குன்றனார் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை,
வாழ்தல் இனிதென மகிழ்ந்து பாருங்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.