Monday, April 30, 2012

உப பாண்டவம்



எத்தனையோ முறை படித்தாயிற்று. இன்னும் சுவராஸ்யமாய் இருக்கிறது. இனி புதிதாய் சொல்வதற்கு எதுவுமே இல்லை; ஏற்கனவே எல்லாமும் சொல்லப்பட்டதாய் இருக்கிறது - மகாபாரதம்.

எம்.டி.வாசுதேவன்நாயரின் ‘இரண்டாமிடம்’, ஐராவதிகார்வேயின் ஒரு யுகத்தின் முடிவு & பி.கெ.பாலகிருஷ்ணனின் 'இனி நான் உறங்கலாமா' என்று பலவகையாய் படித்தாயிற்று. இன்னும் முடியவில்லை இந்த வரிசை.

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் உப பாண்டவம் - மகாபாரதக் கதையின் புதிய பார்வை. மகாபாரதம் தெரிந்தவர்களுக்கு இது ஒரு புதிய தொகுப்பு. (ராஜாஜியின் மகாபாரதம் - தெரியாதவர்களுக்கு ஒரு எளிய அறிமுகம்).

போருக்குப் பின் வரும் அமைதி இப்படித்தான் இருக்குமோ! ஒவ்வொரு முறை மகாபாரதம் படித்த பின் வரும் அமைதி.

*****

மகாபாரதத்தை பாத்திரங்களின் வாயிலாகவே உணர்ந்திருந்த நான், இந்தப் புத்தகத்தில் குணங்களின் வாயிலாக பல கோணங்களில் அறிய முடிகிறது. (விசித்திரமாக பெண்கள் சூல் கொள்ளும் முறை, காமத்தில் மாட்டிக்கொள்ளும் தந்தைகள், இளைநர்களின் வேதனை, நகரங்கள், இளவரசர்கள்) .

பழைய நகரங்களில் வாழும் மனிதர்கள் நகரத்தின் குணத்தையும், புதிய நகரம் அங்கு குடிகொண்ட மனிதர்களின் குணத்தையும் கொண்டிருக்கிறது என்பதை அழகாக விவரிக்கிறார். ராமகிருஷ்ணன் அவர்கள் மகாபாரத்ததின் ஒவ்வொரு ஊர்களுக்கும் பயணப்பட்டுக் கதை எழுதினாரா? அல்லது அங்கு வாழ்ந்தே கதை எழுதினாரா?

துரியோதனனையும் சகுனியின் வேதனைகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. அஸ்வத்தாமன் இன்றும் இங்குதான் சுற்றிக் கொண்டிருக்கிறாரா.

ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் கௌரவர்களும் பாண்டவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணனின் உதவியோடு போர் புரிந்து கொண்டே இருக்கிறார்கள்.

எல்லோரும் அவரவர் நியாயப்படி வாழ்கிறார்கள். ஆனாலும் எப்பொழுதும் சண்டை போட்டுக்கொண்டு கடைசியில் சாகிறார்கள். இன்னும் மகாபாரதம் முடியவில்லை.