Tuesday, March 13, 2012

பதினொரு நிமிடங்கள்



பதினொரு நிமிடங்கள் (லெவன் மினிட்ஸ் - Elven Minutes) - பாலோ கோய்லோ (Paulo Coelho)-வின் இன்னொரு சிறந்த புத்தகம்.

அவருடைய தி அல்கெமிஸ்ட் (The alchemist) புத்தகம் மிகச்சிறந்த ஒன்று ( நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம். ஆங்கில புத்தகம் படிக்க ஆரம்பிக்க விரும்புவர்களுக்கு என்னுடைய பரிந்துரை - தி அல்கெமிஸ்ட்).

*****

சுவராஸ்யம்

இந்த இரண்டு புத்தகங்களும் நான் ரயில் பயணத்தில் படித்தது, ஒரு சுவராஸ்யம். தி அல்கெமிஸ்ட் புத்தகத்தை திருப்பூரிலிருந்து சென்னை வரும்போது ரயிலில் படித்தேன். புத்தகத்தை கையில் எடுத்த என்னால் படித்து முடிக்காமல் மூடி வைக்க முடியவில்லை. ரயில் எங்கிருக்கிறது என்று கவனிக்கவில்லை. நான் படித்து முடித்த பின், அருகிலிருந்தவரிடம் கேட்டபோதுதான் தெரிந்தது - ரயில் சென்னை சென்ட்ரலில் அப்போதுதான் வந்துசேர்ந்தது என்று!

டில்லியிலிருந்து சென்னை வரும்போது, ஒரு நல்ல சக பயணியை சந்தித்தேன். அவருடன் புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது, அவரிடம் பாலோ கோய்லோவின் புத்தகங்கள் இருப்பது தெரிந்தது. அவரிடம் வாங்கிப் படித்ததுதான் - லெவன் மினிட்ஸ்.

*****

லெவன் மினிட்ஸ்

"Once upon a time, there was a prostitute called Maria" (ஒரு காலத்தில ஒரு விபச்சாரி இருந்தாள். அவள் பெயர் மரியா) - அந்த புத்தகத்தோட முதல் வரி.  


பிரேசிலில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் மரியா. மரியாவுக்கு காதல் மீது எப்போதும் ஒரு கற்பனை மயக்கம். கற்பனைக் கதைகளில் வரும் ஒரு காதலுக்காக காத்திருந்தாள். ஆனால் நிஜம் ஏமாற்றத்தை அளிக்கிறது.

காதலிக்கும் போது இந்த உலகமே நமக்காக நம் பக்கத்தில் இருக்கிறது. தப்பாகப் போகும்போது எல்லாமே மறைகிறது. அது எப்படி ஒரு கணத்தில் சொர்க்கத்திலிருந்து நரகத்தில் வீழ்த்துகிறது?

காதலால் ஏற்பட்ட வலியும் இழப்பும் ஒரு நம்பிக்கை இன்மையை கொடுத்தாலும், ஒரு உண்மையான காதலுக்கு அவள் ஏங்கிக் கொண்டு இருந்தாள்.

முதலாளியின் காதலைப் புறக்கணித்து விட்டு, அவள் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு, நகரத்தை (ரியோ) சுற்றிப் பார்க்க கிளம்புகிறாள். அவளுடைய முதல் சாகசம்.

அவளுடைய அழகில் மயங்கிய வெளிநாட்டுக்காரர், சுவிட்சர்லாந்து நைட் கிளப்பில் சம்பா நடனம் அழைக்கிறார். அதிக சம்பளம் அவளை கவர்கிறது.

சாதாரன வாழ்க்கையிலிருந்து விலகி கனவோடு சுவிட்சர்லாந்து சென்றவள், ஏமாற்றத்தை அடைகிறாள். கிடைக்கும் சம்பளம், தங்குவதற்கும் மற்ற செலவுகளுக்கும் சரியாகப் போய்விடுகிறது. கடைசியில் பணம் சேர்க்க விபச்சாரியாகிறாள்.

"இந்த உலகத்திற்கு பலியாகிவிட்டேன் என்று நினைக்கலாம் அல்லது இது ஒரு பெரும்புதையலைத் தேடும் சாகசம் என்றும் நினைக்கலாம். அது ஒவ்வொருவரின் வாழ்க்கை குறித்த பார்வை". மரியா, அடுத்த சாகசமாகவே கருதுகிறாள்.

புத்தகங்களைப் படித்தும், ஒவ்வொரு ஆண்களை உற்று நோக்கும் அவள், உள்ளுக்குள் ஒரு தெளிவு கொள்கிறாள். அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாய் தொலைந்து போகிறாள். 11 நிமிடங்கள் - உடலுறவு மேற்கொள்ளும் அதிகப்பட்ச நேரம், என்கிறாள் மரியா.


இரண்டு வெவ்வேறு விதமான ஆண்களைச் சந்திக்கிறாள்.

ஒருவன் உடலுறவின் போது துன்புறுத்தி சந்தோஷிப்பவன். "எல்லா இடத்திலும் துன்பமும் வலியும் சூழ்ந்திருக்கிறது. அவற்றை நாம் ஏற்றுக்கொண்டு நிம்மதி அடைகிறோம். அதிலிருக்கும் சந்தோஷத்தை புரிந்து கொள்வது எளிதல்ல" என்கிறான். மரியாவும் வலியை ஏற்றுக்கொண்டு இன்பத்தை அடையும் நிலையை (Sadism) அடைகிறாள்.

அதே சமயம் ஓவியன் ஒருவனை சந்திக்கிறாள். அவன் மீது காதல் பிறக்கிறது. " வலியும் இழப்பும் நம் வாழ்க்கையில் மறைந்து இருப்பது உன்மையே. அது அன்புக்காகவும் குடும்பத்திற்காகவும் ஏற்றுக்கொள்வது நிம்மதி கலந்த சந்தோஷம்". அவன் மரியாவை ஒரு தவறானப் பழக்கதிலிருந்து காப்பாற்றுகிறான்.

கடைசியில் விபச்சாரத் தொழிலை விட்டுவிடுகிறாள். அவளுக்கான காதல் கிடைத்துவிடுகிறது.

காதல், வலி, உடலுறவு என்று எல்லாவற்றோடும் தன் வழக்கமானத் தேடலையும் எழுதியிருக்கிறார்.                             

*****

அன்பும் காதலும் மற்றவர்களிடம் தேட வேண்டியது இல்லை. அது நம்மிடம்தான் இருக்கிறது. அதை அடைவதற்குத்தான் இன்னொருவர் தேவைப்படுகிறார்.

- பாலோ கோய்லோ