Saturday, October 13, 2012

பசி




பசி - 1

அவனுக்கு நன்றாக பசித்தது. அடையார் ஆனந்தபவனில் பரோட்டா பார்சலுக்காக காத்திருந்தான்.

நேத்து நைட் சிஃப்ட். நல்லா தூங்கிட்டு, சாய்ங்காலம் 5 மணிக்குத்தான் எழுந்திருச்சான். காலையில் ஒரு டீயும் வடையும் சாப்பிட்டது.

அடையார் ஆனந்தபவன் பரோட்டா சூப்பரா இருக்கும். பார்சலுக்கு பதிலாக, சாப்பிட்டே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் கூட வந்தது. தனியாக எப்படி உட்கார்ந்து சாப்பிடுவது.
  
அந்தப் பக்கம் பல விதமாய் ஸ்வீட்கள். குறிப்பாய் ஜிலேபி(இங்கே ஜாங்கிரி என்கிறார்கள்) பார்ப்பதற்கே அழகாய் இருந்தது. லட்டு அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்தால் கோயில் கோபுரம் போலிருந்தது
அப்பா! எவ்வளவு ஸ்வீட்ஸ். தினமும் ஒரு ஸ்வீட் சாப்பிட்டாக் கூட ஒரு மாசம் முழுக்க சாப்பிடலாம் போல் இருக்கே!

கண்டிப்பாய் ஜிலேபி வாங்கனும்.

பரோட்டா பார்சல் வந்தபின், ஜிலேபியும் வாங்கிக் கொண்டான். இரண்டு பைகளையும் பைக்கின் இரண்டு ரியர்வியூ கண்ணாடியில் மாட்டிக் கொண்டான்.

ரூமுக்குப் போய் சாப்பிடலாம். வண்டியை வேகமாக கிளப்பினான்.

கொஞ்ச தூரம்தான் போயிருப்பான். திடீர்னு எங்கிருந்தோ பறந்து வந்த பாலித்தீன் கவர் முகத்தை மூடியதில் தடுமாறி விழுந்தான்.

பைக் கீழே விழுந்ததில் பரோட்டா பார்சல் பறந்து விழுந்தது. இன்னொரு பார்சலில் இருந்த ஜிலேபிகள் நசுங்கிக் கூழாயிற்று.

******


பசி - 2

அவனுக்கு நன்றாக பசித்தது.

கொண்டு போன சாப்பிட்டில், பாதியை ஆபிஸில் இருந்தவர்களே சாபிட்டு விட்டார்கள். சாய்ங்காலம் கிளம்பும் வரை டீக்கு கூடப் போக முடியவில்லை.

ரயில் ஏறுவதற்கு முன், ஒரு கடலைப் பாக்கெட்டையும் மிக்சர் பாக்கெட்டையும் வாங்கிக்கொண்டான்.

ரயிலி ஏறி, கடலையை ரசித்து சாப்பிட்டான். ரயிலில் விற்ற சமோசாவையும் சாப்பிட்டான். வேளச்சேரியில் நின்றிருந்த பஸ்ஸில் ஏறி மிக்சர் பாக்கெட்டையும் முடித்தான். கிளம்பிய பஸ்ஸிலிருந்து ஜன்னல் வழியாக, பாலித்தீன் கவரை வெளியே பறக்க விட்டான்.


******

பசி - 3

அவனுக்கு நன்றாக பசித்தது.

பத்து ரூபாய்தான் பாக்கெட்டில். எப்பொழுதுமே இப்படித்தான், அவன் பசியோடு இருக்கும்படியாய் ஆகிறது.

மயிலாப்பூர் கோயில் அன்னதானத்தைதான் நம்பியிருந்தான். அதுவும் கிடைக்கவில்லை. கையில் காசு உள்ளவர்கள் கூட, பக்தி என்ற பெயரில் ஒரு கட்டு கட்டிவிடுகிறார்கள்.

மீனகளுக்கு எதுவும் போட வேண்டாம் எனறாலும் குளத்தில் பொரியை அள்ளிப் போடுகிறார்கள்.

சாய்ங்காலம் ஆனால் போதும் அவன் கடுப்பாகிவிடுவான். எங்கு பார்த்தாலும் பஜ்ஜி, போன்டாக் கடை. பானிப்பூரிக் கடை, மசாலாப் பொரிக்கடை, சில்லிச் சிக்கன் கடை. இவர்கள் எல்லாம் வீட்டில் போய் சாப்பிடுவார்களா, இல்லையா?

ரயிலில் ஏறி உட்கார்ந்தான். ரயில் எப்பொழுதுமே ஒரு ஹோட்டல் மாதிரிதான் இருக்கும். எல்லோரும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

எதிரில் உட்கார்ந்தவனைக் கண்டதுமே கடுப்பாகிவிட்டது. ஒவ்வொரு கடலையையாய் ரசித்து சாப்பிட்டான். இதில் வேறு, கடலைத் தொப்பையை தூக்கி எறிகிறான்.

அவன் மீது ஒரு தொப்பை விழுந்த போது, ஒரு அறை விடலாம் என்று வெறி வந்தது.

அப்போது வந்த சமோசாவையும் எதிர்த்தாள்  வாங்கி விழுங்கினான். வயிற்றெரிச்சலாய் இருந்தது

நல்லவேளை வேள்ச்சேரி ஸ்டேசன் வந்ததால், எதிர்த்தாள் தப்பினான். இல்லையென்றால், அவனுக்கு வந்த வெறிக்கு..

எதிர்த்தாள் கையில் பாலித்தின் கவரோடு பஸ் ஏறும் வரைக் கூடவே போனான்.

போய்த் தொலையட்டும்! என்று நினைத்தபடி திரும்பி எதிர்பக்கம் நடந்தான்.

சட்டென்று அவன் முன்னாடி, கொஞ்ச தூரம் தள்ளி ஒருத்தன் பைக்கோடு கீழே விழுந்தான். ஒரு பாலித்தின் பார்சல் பறந்து வந்து, அவன் காலடியில் விழுந்தது.

எடுத்துப் பார்த்தால், குருமா வாசனை. அவனுக்கு நன்றாக பசித்தது.

No comments: