Thursday, July 7, 2011

ஆண் பாவம்


"டேய்.. இடிக்கிறதே வேலையாப் போச்சா. நானும் பாக்கிறேன். இடிச்சிக்கிட்டே வர்றே.."

அவளுடைய சத்தம் சப்வே முழுவதும் எதிரொலித்தது.

தயா திரும்பி பார்த்தான்.

படிக்கட்டில் எல்லோரும் வேகமாய் இறங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் அவள் ஒரு பையனை லேடிஸ் பேக்கால் அடித்துக் கொண்டிருப்பது நன்றாக தெரிந்தது. அவள் கலர் கம்மியாக இருந்தாலும் அவள் ஒரு ஜீன்ஸ் போட்ட மகாலட்சுமி மாதிரி இருந்தாள். அந்த பையன் ஏதோ சொல்கிறான், ஆனால் கேட்கவில்லை.

நான்கு பேரைத் தவிர எல்லோரும் பாத்துக் கொண்டே (கண்டுகொள்ளாமல்) போய் கொண்டிருந்தார்கள். கிண்டி சப்வேயில் காலையில் யாரிடமும் டைம் கூட கேட்க முடியாது. அதாவது  பரவாயில்லை, சென்ரல் ஸ்டேசனுக்கான சப்வேயில் ஓடும் போது யார் முகத்தையும் பார்க்க முடியாது.

ஃபாஸ்ட் டிரெயினைப் பிடிப்பதற்காக தயா வேகமாக நடந்தான். ரெண்டு பேர் மேல் மோதியும் ஸாரி கூட கேட்கவில்லை.

பிளாடஃபார்மில் நின்று கொண்டிருந்த டிரெயினில் ஓடிப் போய் ஏறினான்.

கடைசி வரிசையில் குரூப்பாய் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் போடும் மொக்கை தாங்க முடியாது. அன்றைய ஹாட் டாபிக்கை சத்தம் போட்டு விவாதிப்பார்கள். கடைசி வரை இறங்கவே மாட்டார்கள்.

அவர்களுக்கு முன் வரிசையில், ஜன்னலோரமாய் ஒரு அழகான பெண் உட்கார்ந்திருந்தாள். மஞ்சள் கலர் சுடிதாரில் சூரியகாந்தி பூ மாதிரி இருந்தாள். அந்த பெண்ணை சைட் அடிப்பதற்காக, எவ்வளவு மொக்கையை வேண்டுமானாலும் கேட்கலாம்.

அவள் இருக்கும் வரிசைக்கு பக்கத்தில் நின்று கொண்டான். அந்த பெண்ணின் பக்கத்தில், ஒரு ஆண்டி.  டிபன் பாக்ஸில் இருந்து இட்லியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

"இந்த பசங்களுக்கு கூட்டத்தைக் கண்டா போதும், பொண்ணுங்களை இடிக்க வேண்டியது. அப்புறம் அவங்ககிட்ட அடி வாங்க வேண்டியது", சிரித்து கொண்டே பின்வரிசையில் ஒருத்தர் பேசியது கேட்டது.

"ஆமா உன்னை மாதிரி, தெரியாம இடிக்க, அந்த பசங்களுக்கு தெரியலை" இன்னொரு குரல்.

'மொக்கையை ஆரம்பித்து விட்டார்கள். பசங்களுக்கு வேற வேலை இல்ல பாரு.', தயா மனசுக்குள் நினைத்துக் கொண்டான். அந்த பெண்ணின் தோடு அழகாக ஆடியது.

"எத்தனை பொறுக்கிப் பசங்க வேணுமுன்னே இடிக்கிறானுங்க. அவனுங்களைக் கண்டா பயந்துட்டு பேசாம போயிடறாங்க" என்றது நக்கல் குரல்.

'கரெக்ட்டு..', அந்த பெண் உதட்டு மேல் இருந்த வேர்வையை துடைப்பது அழகாயிருந்தது. 'அவளையே பார்த்துக் கொண்டிருக்க கூடாது. அப்பப்ப வேற பக்கமும் பார்க்கனும்'. தயா, அந்த ஆண்டி கடைசி இட்லி துண்டை விழுங்குவதை பார்த்தான்.

"ஆனா ஒரு அப்பாவி கிடைச்சா போதும், அடி பிண்ணிடுவாங்க" அதே குரல் கேட்டது.

அந்த பெண்ணோட ஹேர்-பின்னில் சின்னதாய் வெள்ளை பூ டிசைன்.

"பாவம் பொண்ணுங்களும் என்னதான் பண்ணுவாங்க, சொல்லுங்க ஸார். அவங்களும் இந்த கூட்டத்தில் நசுங்கி கசங்கிதான் போக வேண்டியிருக்குது", ஒரு பாவமான குரல் கேட்டது.

பார்க் ஸ்டேசன் வந்து விட்டது. இன்னும் அஞ்சு நிமிசத்தில் சென்ட்ரல் ஸ்டேசன்ல டிரெயினை பிடிச்சா, கரெக்ட் டைமுக்கு பெரம்பூர் போயிடலாம். இறங்கி ஓட வேண்டும்.

டிரெயின் நின்றது. அந்த அழகான பெண்ணும் இறங்கியது. தயா அவள் பின் செல்லும் போது, யாரோ ஒரு லேடி குறுக்கே வந்தார்கள். அந்த லேடியை தாண்டிப் போக முடியவில்லை.

வேகமாப் போனால் டிரெயினையாவது பிடிக்கலாம். சப்வேயில் சரியான கூட்டம். பின்னால் தள்ளினார்கள். முன்னாடி அதே லேடி.

டிரெயின் இட்லி சாப்பிட்ட ஆண்டி. தயா-வைப் பார்த்துக் கத்தினாள், "டேய்.. இடிக்கிறதே வேலையாப் போச்சா. நானும் பாக்கிறேன். இடிச்சிக்கிட்டே வர்றே.."

ஆண்டி காலில் இருந்து செருப்பை கழட்டுவது தெரிந்தது.

"மேடம். நான் எதுவும் பண்ணலை", தயா பரிதாபமாக சொன்னான்.

முன்னால் போய் கொண்டிருந்த அந்த அழகான பெண், தயா-வைத் திரும்பி பார்த்தாள். 

*****

பின்குறிப்பு

1. தயாவின் வேதனை:
      அந்த அழகான பெண்கிட்ட அடி வாங்கியிருந்தா கூட பரவாயில்லை. ஒரு ஆண்டி கையில அடி வாங்கிட்டனே. என்ன கொடுமை ஸார், இது!

2. தயாவின் வேண்டுகோள்:
      லேடிஸ், ப்ளீஸ். பப்ளிக்ல யாரையாவது அடிக்கிறதுக்கு முன்னாடி அல்லது திட்டறதுக்கு முன்னாடி, ஒரு தடவ யோசிச்சு பாருங்க. அந்த பையன் தெரியாம பண்ணியிருக்கலாம். அவன் நிஜமாலும் ஒரு அப்பாவியா இருக்கலாம்.

1 comment:

rangs said...

ஆயிரம் குற்றவாளி தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது