Thursday, April 30, 2015

மனவேதனை


அர்ஜூனனுக்கு நம்பவே முடியவில்லை. என்ன நடந்தது ? திருடர்களிடம் தோற்றுவிட்டேனா!

அவன் கர்வமும் காண்டீபமும் செயலற்றுப் போயிருந்தன. இனி மக்களுக்கு எப்படித் தெரியும், அர்ஜூனன் ஒரு மாவீரன்!

வனவாசம் அறிவார்களா? இழந்த நாட்கள்தான் திரும்ப வருமா..

குருசேரத்ரப் போர் சொல்லிப் புரியவைக்க முடியுமா? எவ்வளவு வேதனை.

வெற்றியின் சந்தோஷத்தைப் பார்த்திருப்பார்கள்.. என்னோடு சேர்ந்த குதுகலித்தவர்களுக்கு கூட தெரியாது என் இழப்பின் வேதனை.

என் தோல்வியை இப்படியா நான் சந்திக்கவேண்டும். மிகப்பெரிய வெற்றிக்குப் பின் ஏற்படும் சிறு தோல்வி, ஒரு தோல்வியா?

காண்டீபத்தை இழந்துவிட்டால், என் கர்வம்? நான் யார்?

***

Sunday, February 8, 2015

ராமானுஜன்



ராமானுஜன் படத்தைப் பார்த்தபின், நம் தற்போதைய கல்விமுறை இன்னொரு ராமானுஜனை உருவாக்கும் வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

* ராமானுஜன் கல்லூரியில் கணிதம் தவிர மற்றதில் தோல்வி அடைகிறார். இன்று கணிதத்தில் மட்டும் அறிவாளியாக உள்ள ஒருவன் கல்வி தொடர்ந்து கற்க இந்த கல்விமுறை அனுமதிக்குமா?

* நம் நாட்டில் எத்தனை பேர் படித்தும், முட்டாள் இயந்திரங்களாகத்தான் இருக்கிறார்கள்.

* கல்வி சுயநலத்தையும் கோழைத்தனத்தையும் சொல்லிக் கொடுக்கிறது.

* எது சொன்னாலும் நம்பும் பகுத்தறிவு திறனற்று அல்லவா இருக்கிறோம்.

* (ஃபேஸ்புக்கில் படித்தது)  ஏழ்மையின் காரணமாக கல்வி மறுக்கப்பட்ட ஒருவனுக்கு கேன்சர் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆற்றல் இருந்திருக்கலாம்.


* ஏதோ மிகப்பெரிய தவறு நடப்பதாக தோன்றுகிறது. இந்தக் கல்வி முறை வெறும் வியாபார நோக்கத்திற்கு மட்டும்தான் என்றால், நாமெல்ல்லாம் கல்வி பெற்ற மாக்கள்


2014


கடந்த வருடத்தைப் புரட்டிப் பார்க்காமல், புதிய பதிவுகளை எழுத மனசு வரவில்லை.

வெற்றிப் பெருமிதம்

மிகப்பெரிய போர் முடிந்த மாதிரி இருந்தது. இரண்டரை வருட ப்ராஜக்ட் ரிலீஷ் ஆனபோது. என் வாழ்நாளில் தொடர்ந்து மூன்று வாரம் விடுமுறை இல்லாமல் வேலை செய்த வருடம். ( நான் நல்லா வேலை செய்வேன்னு தெரியும், ஆனால் இப்படி கடுமையா வேலை செய்வேங்கிறது வியப்புதான்!)

வெற்றிப் பெருமிதத்தோடு இருந்த நான், ஊரே புகழும்னு எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்கொண்ட இயல்பான சூழல, என்னை தன்னிரக்கத்தில் கொண்டு சேர்த்தது. சுற்றி இருந்த எல்லோரும் முன்னாடி போயிட்டாங்க, நான் மட்டும் இரண்டு வருடம் அங்கேயே இருக்கிற மாதிரி இருந்தது. கடுமையான உழைப்புக்கான பரிசு வெறும் வாய்-புகழ்ச்சிதானா?
நல்லவர்கள் துணையோடு தன்னிரக்கத்தில் இருந்து விடுபடமுடிந்தது. நான் இல்லையென்றாலும் அந்த பிராஜக்ட் நல்லாதான் முடிஞ்சிருக்கும். நான் வெறும் கருவி. ஒரு . எக்லிப்ஸ் மாதிரி.

அந்தப் பிராஜக்டால் பயன்பெறுபவர்கள் எண்ணிக்கையை நினைக்கும் போது, எனக்கு அதில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்ததே மிகப்பெரிய பரிசுதான்.

நீச்சல்

ஒரு வழியா நீச்சல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கற்றுக்கொண்ட வருடம். ஓரளவுக்கேனும் நீச்சல் அடிக்க முடிகிறது.

இமாலயப் பயணம்



இந்த வருட சாதனை. உத்தர்காண்ட் மாநிலத்தில் கேதார்காந்த் பயணம். நான்கு நாட்கள் பனிமலையில் நடைபயணம். தண்ணீர் உறையும் மைனஸ் கடும்குளிர். வெட்டவெளியில் கூடாரம். 25000 அடி கேதார்காந்த் உச்சியில் ஏறியது, என்னுடைய வாழ்க்கையில் ஒரு மைல் கல்தான்.


Thursday, October 16, 2014

சமூகவியல்


'இன்னும் எத்தனை நாட்களுக்கு கற்பனை உலகம் பற்றிய புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பாய். நிகழ்காலத்துக்கு எப்பொழுது வருவாய்', என நண்பர் கேட்டார். அதன் பற்றிய சிந்தனையின் விளைவுதான் இந்தப் பதிவு.

முதல் கேள்வி: இந்த சமூக அமைப்பு சரியானாதுதானா?

சரி என்று நிச்சயம் என்னால் சொல்லமுடியாது. எல்லோருக்கும் சரிசமமான வாய்ப்புகளையோ வசதிகளையோ, சமூகம் தருவதேயில்லை. ஏற்றத்தாழ்வுகள் இயற்கை என்றும் ஏற்றுக்கொள்வதும் முடிவதில்லை.

தமிழில் நான் படித்ததில் சில புத்தகங்கள், நமக்கு முன்பு வாழ்ந்தவர்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் புரிந்துகொள்ள முடிவதாக இருக்கிறது.

*****
தோட்டியின் மகன்

 தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதியது. தோட்டி என்று அழைக்கப்படும் மக்கள், கழிப்பிடத்தை சுத்தம் செய்பவர்கள். அதில் ஒருவனுக்கு தான் செய்யும் தொழில் அருவருப்பைக் கொடுக்கிறது. தன்னை பலபேர் மதிக்க வேண்டும் என்று எண்ணத்தில், மற்றவர்களை ஏமாற்றியும் பகைத்துக் கொண்டும் பொருளாதாரத்தில் முன்னேறுகிறான். ஆனாலும் 'உயர்குடி' மக்கள் அவனை மதிப்பதில்லை.

தன் மகனாவது நன்கு படித்து பெரிய ஆளாக ஆசைப்படுகிறான். கடைசியில் அவன் மகனும் படிப்பதை விட்டுவிட்டு, மற்ற பசங்களோடு சேர்ந்து திருடுகிறான். இன்னொரு தோட்டியாக உருவாகுகிறான்
*****
கூகை

சோ.தர்மன் அவர்கள் எழுதியது. பள்ளக்குடியைச் சேர்ந்தவர்கள் கூலி வேலை செய்பவர்கள். உயர்குடி மக்களால் ஒதுக்கப்படுபர்கள். ஆனாலும் அவர்களுக்காக மாடாய் உழைப்பவர்கள்.

ஊரை விட்டுப்போகும் பிராமனர் ஒருவர், தன் நிலத்தை பள்ளக்குடி மக்களுக்கு குத்தகைக்கு விடுகிறார். அதனால் அவர்கள் உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்கிறது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மற்ற இனம் அவர்களுக்குத் தொல்லைகள் கொடுக்கிறது. கோபத்தில் தாழந்த இனத்தைச் சேர்ந்தவன் உயர்குலத்தோனை கொன்றுவிடுகிறான். போலிஸ் மொத்தப் பள்ளக்குடி மக்களுக்கும் கொடுக்கும் தொந்தரவில், அவர்கள் வாழ்க்கை முன்பைவிட மோசமாகி விடுகிறது.
*****
ஏழாம் உலகம்

ஜெயமோகன் அவர்கள் எழுதியது. பிச்சைக்கார்களை வாங்கி, அவர்கள் வாங்கும் பிச்சையில் வாழும் ஒரு முதலாளியின் கதை. அவன் 'நான் கடவுள்' படத்தில் இருப்பது போன்ற கொடூரமான வில்லன் கிடையாது. பிறப்பாலும் வாழ்விலும் ஒதுக்கப்படும் மனிதர்கள் உருப்படிகளாய் வாங்கி, பிச்சையெடுக்கும் இன்னொரு சராசரி ஏழை. அதில் அவன் பொருளாதாரத்தில் முன்னேறுவதும் இல்லை. அவன் குடும்பமும் சந்தோசமாய் வாழ்வதுமில்லை.

இந்தக் கதைகள் எல்லாம், நம் கண்முன்னே வாழ்பவர்களைப் பற்றியதுதான்.  இவர்களையெல்லாம் நாம்தான் ஒதுக்கி வைத்துள்ளோம். நம்மால் என்னதான் செய்யமுடியும்?

*****

பின் குறிப்பு.


புத்தகங்களின் கற்பனை உலகத்தின் சமூக அமைப்பை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

Sunday, September 7, 2014

சூடோகு


சூடோகு(Sudoku) புதிர் பற்றி தெரியாதுனால், இது உங்களுக்கான பதிவு இல்லை.

கணக்குப் புதிர்கள் மீது எல்லோருக்குமே ஆர்வம் உண்டு. ஆனால் அதுக்கு ஆற அமர உக்கார்ந்து விடை கண்டுபிடிச்சால், அது தப்புன்னு சொல்லிடுவாங்க. இதனாலேயே கணக்குப் புதிர்னு சொன்னாலே பாதி பேர், ஓடிப் போயிடுவாங்க.

சூடோகு மட்டும் எளிதாக இருப்பதால, நிறைய பேருக்கு அது மேல ஆர்வம் வந்திடுச்சு. நாளிதழ்களில் வருகிற எளிய, கடினமான புதிர்களுக்கு விடை கண்டுபிடிக்கும் போது, நமக்கு ஒரு நிறைவு வருமே - நாம கூட கணித மேதை ராமனுஜம் மாதிரிதான்.

சூடோகு விடை கண்டுபிடிக்கிறதுக்கு, எனக்கு கம்ப்யூட்டர் புரொகிராம் எழுதனும் ஆர்வம் வந்திடுச்சு. பேக் டிராக்கிங் அல்காரிதம் பயன்படுத்தி ஒரு புரோகிராம் எழுதினேன். (ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு எண்ணா நிரப்ப வேண்டியது. எங்கியாவது தப்பா போச்சுன்னா, பின்னாடி இருக்கிற கட்டத்தை அழிச்சிட்டு வேற எண்ணை எழுத வேண்டியதுதான்). சரியான விடை கிடைச்சிடுச்சு.

யோச்சிச்சுப் பார்த்தால், என்னோட புரொகிராம் ரொம்ப கஷ்டப்படற மாதிரி இருந்துச்சு. அதை விட எளிதா நாம விடை கண்டுபிடிக்கிறோமே! அது எப்படி?

* ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே ஒரு எண் வருவதற்கான வாய்ப்பு மட்டும்தான் இருக்கு ( நிறைய வாய்ப்புகள் இருந்தால், நாம குழம்பி இருப்போம்)
* அந்த புதிருக்கு ஒரே ஒரு விடை மட்டும்தான் வாய்ப்பு இருக்கு. அதாவது ஒரே ஒரு 9x9=81 வரிசையான எண்கள்.

******
புதிர்-1

சூடோகு புதிருக்கு விடை கண்டுபிடிப்பது பெரிய விஷயமே இல்லை. சூடோகு புதிரை உருவாக்குவதுதான்! யோசிச்சுப் பாருங்க..
* 81 கட்டங்களில் இருந்து ஒரு சில எண்களை மட்டும் எடுத்து,  புதிரை உருவாக்கனும்.
* எடுக்கப்பட்ட எண்களில் இருந்து, ஒரே ஒரே விடை மட்டும்தான் வரனும். இன்னும் சொல்லப்போனால், உங்கள் நண்பரால அதற்கான விடையை கண்டுபிடிக்கற மாதிரி இருக்கனும்.
சுடோகு உங்களுக்கு ரொம்ப எளிதுன்னு நினைச்சீங்கன்னா, ஒரு புதிரை உருவாக்கிப் பாருங்க.

******
புதிர்-2

குறைந்த பட்சம் எவ்வளவு எண்கள் இருந்தால், ஒரே ஒரு விடை கிடைக்க கூடிய 9x9=81 சுடோகுவை உருவாக்க முடியும்?

17

2012 ல் ஒரு கணித மேதை(Gary McGuire ), 17க்கும் குறைவான எண்களில் இருந்து சுடோகுவுக்கான தீர்வு கிடைக்காதுன்னு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

16 அல்லது அதை விட குறைந்த எண்கள் மூலம், ஒரே ஒரு விடை கிடைக்க கூடிய சுடோகுவை கண்டுபிக்க நிறைய பேர் (கணித மேதைகள்) முயற்சி செய்கிறார்கள். நீங்க எப்படி?

******

Reference:-
How to Build a Brain and 34 other really interesting uses of Mathematics - Richard Elwes


Tuesday, December 31, 2013

2013


இந்த வருடம் திரும்பிப் பார்த்தால் அலுவலக வேலைதான். அதற்கிடையிலும் சின்ன சின்ன சந்தோஷங்கள்.

பாலகுமாரன்


இந்த வருடம் எனக்குப் பிடிச்ச முக்கியமான நிகழ்வு - எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களை புத்தகக் கண்காட்சியில் சந்தித்ததுதான். பிடித்த புத்தகம் 'என் கண்மனித் தாமாரை' புத்தகம் வாங்கி - அதில் அவரோட ஆட்டோகிராஃப் !


கொடைக்கானல்

உயிர் பிழைத்து திரும்பி வந்த டிரெக்கிங் - வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது. ஒரு நாள் இரவு முழுவதும் குளிரில் நடுங்கியபடி, ஒரு மரத்துக்கடியில் இருந்தது. எல்லாமே அவ்வளவுதான்கிற போது - அன்று காலையில் பார்த்த அந்த விடியல் - அழகான அற்புதமான ஒரு நிகழ்வு!

Sunday, August 25, 2013

நாகேஷ்



சர்வர் சுந்தரம் படம் பார்த்தபின் எழுதும் பதிவு இது. இது நிச்சயம் விமர்சனம் அல்ல. அவரின் நகைச்சுவையைத் தாண்டி, நான் ரசித்ததைப் பகிர்கிறேன்.

அதில் உள்ள சில காட்சிகள் மனதை உலுக்கி எடுத்தது. வறுமையை இவ்வளவு நிஜமாக 'அப்பாவித்தனமாக' நடித்திக்காட்டி இருக்கிறார், நாகேஷ்.

நண்பன் வீட்டில் பார்க்கும் விலை உயர்ந்த சட்டையை தடவிப்பார்க்கும் காட்சி, அதன் விலையை கேட்டு வியக்கும் காட்சி, கீழே விழும் ஐந்து பைசாக் காசைத் திரும்பத் திரும்ப எடுக்கும் காட்சிகள் - வறுமையை வட்டம் போட்டு காண்பிக்கும்.

முன்பெல்லாம், சார்லி சாப்ளின் படங்கள் சிரிப்பை ஊட்டும் விதமாக இருந்தன. ஆனால் இப்பொழுதெல்லாம் அதன் பின்னால் சார்லி சாப்ளின் காண்பிக்கும் வறுமைதான் தெரிகிறது.

அப்படித்தான் இருந்தது சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் அவர்களின் நடிப்பு.

அதே போல்தான், திருவிளையாடல் படத்தில் 'தருமி'யாக உலாவரும் காட்சிகள். நகைச்சுவைக் காட்சியாயினும், தருமியின் வறுமையும், பரிசில் காட்டும் ஆசையும், கடைசியில் அவரடையும் அவமானமும் - என்னைச் சிரிக்க வைப்பதில்லை. அந்தக் காட்சிகளில் அவர் 'நடிகர்' திலகத்தை மிஞ்சியதாகவே, எனக்குத் தோன்றும்.

எதிர் நீச்சல் படம் முழுக்கச், சார்ந்து வாழும் ஒரு வாலிபனின் ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்து காட்டியிருப்பார் நாகேஷ். ஒரு பைத்தியத்தைக் கூடத் திருமணம் செய்து கொள்ளத் தயார்படுத்திக் கொள்ளுவது - நிச்சயம் நல்ல நகைச்சுவை!

பொருளாதாரத்தில் முன்னேறி இருப்பவர்கள் கூட்டத்தில் தான், வறுமையில் வாடுபவன் பளிச்செனத் தெரிகிறான். அவன் படும் அவமானம் சிரிப்பூட்டும் காட்சிகளாக தெரிவது - என்ன வகை அதிசியம் என்று புரியவில்லை!

நாகேஷ் ஒரு சிறந்த நடிகர். அவருடைய இருப்பிடம் இன்றும் நிரப்பபடாமல், தமிழ் சினிமா உலகம் வறுமையில் வாடுகிறது.


Sunday, August 18, 2013

மலையில் ஒரு இரவு


கொடைக்கானல் டிரக்கிங் போனதைப் பத்தி எழுதனும்னு ஆசை. 'உயிர் பிழைச்சோம்' -ங்கிற இரண்டு வார்த்தையை எப்படி விவரிக்கிறது. கோர்வையாய் எழுதி புரிய வைக்கமுடியுமா?
சில விஷயங்களை அனுபவிக்கனும். அனுபவிச்சாக்கூட புரிஞ்சுக்கமுடியுமான்னு தெரியலை.
அதனால சில கேள்விகள், அதன் பதில்கள்.

******

என்னதான் கத்துக்கிட்டீங்க?

ஒன்னுமே இல்லை.

வீட்டுக்கு வந்தவுடன் இப்படித்தான் யோசிச்சேன். "எல்லோர் மீது அன்பா இருக்கனும். உதவியா இருக்கனும்".

எத்தனை தடவை இந்த மாதிரி யோசிச்சிருப்பேன். ஆனால், நம்ம மீது செலுத்தற அன்பை கூட உதாசினப்படுத்தினது தானே உன்மை. தேவையே இல்லாத கோபம், வெறுப்பு! எல்லாமே நமக்குதான்கிற பேராசை. இதெல்லாம் மாத்திக்கிட்டு, சுயநலமில்லாம அன்பா இருக்கமுடியுமா?

கடைசி வரைக்கும் ஒன்னுமே கத்துக்கமாட்டோம். கத்துக்கிறதுக்கு, சாவைப் பக்கத்தில பார்க்கனும்னு அவசியமே இல்லை!

*****

பயம் ?

இனிமேல வழி இல்லை, திரும்பவும் மலை மேல் ஏறனும்னு சொல்லும் போது, சாயுங்காலம் மணி 5 இருக்கும். அப்பதான் முதல் பயம் முளைச்சது.

இருட்டறதுக்குள்ள ஏறனும்னு சொன்னதும், ஏறிடலாம்னு ஒரு எண்ணம் இருந்திச்சு. எல்லோரும் 'முடியுமான்னு' கேட்கலை (யோசிச்சிருப்போம்), ஆனால் வேகமா ஏறிக்கிட்டே இருந்தோம்.

சாதரணமாவே முள்ளுக் குத்திடும்னு பயம் இருக்கும். முள்ளுச்செடின்னு தெரிஞ்சும் அதைக் கையில் பிடிச்சு ஏறவேண்டியதாயிருந்தது.

கோரைப்பு புல்லைப் பிடிச்சுக்கிட்டு செங்குத்தாக மலை ஏறும்போது, துபே சார் தடுமாறும் போதெல்லாம், எனக்கும் பயம்தான்.

கொஞ்ச நேரம் நான்தான் கடைசியா வந்தேன். "கீழே விழுந்தால், கண்டுபிடிக்ககூட முடியாதே"! அப்புறம் கிருஷ்ணாதான் கடைசியா வந்தான். எனக்குப் பின்னாடி 'கிருஷ்ணா' இருக்கான்கிறதுதான், என்னோட முழு தைரியம்.

ஆனால் அவனுக்குப் பின்னாடி யாருமே இல்லைங்கிறது, என்னோட மிகப்பெரிய பயம். அவன் அசால்ட்டா ஏறினதால், அவ்வளவா கவலைப்படலை.
கடைசியா ஒரு மரத்துக்கு கீழ் ஓய்வெடுத்தோம். இனி ஏற முடியாதுன்னு சிலர் சொன்னாலும், எனக்கு ஏறிடனும்னு ஆசை. அங்க இரவு பூரா தங்கினால், குளிர் தாங்க முடியுமா! மழையை நினைச்சாலே, பயம்தான். நல்லவேளை மழை வரலை.

எனக்குத் தெரிஞ்சு எலோருக்கும் பயம் இருந்தது. எப்பாடியாவது ஏறிடனும்கிற எண்ணத்தில்தான், முக்கால்வாசி தூரம் அன்று இரவே ஏற முடிந்தது.
பயப்படறது கோழைத்தனம் இல்லை. அதையும் மீறி ஏறினதுதான் வீரமா(Courage), நான் நினைக்கிறேன்

******

நம்பிக்கை?

காலையில் மூன்று இட்லி ஒரு வடை சாப்பிட்டது. மழைக்காலம். குளிரும் மலை, இருட்டு. மரத்துக்கடியில் நாங்க. 'விடிஞ்சா உயிரிடுப்போம்கிறது' தெரியலை. அப்பதான் நம்பிக்கை 'ஒளிக் கற்றையாக' வந்தது.

ரமேஷ் சாரோட, காரின் ஹெட்லைட் வெளிச்சம், மேலே இருந்து 'முதல் நம்பிக்கையாய்' வந்தது. அவங்க எப்படியாவது தேடி வந்தால் பரவாயில்லைன்னு இருந்தது.

அப்பப்ப செல்போனில் பேசின ரமேஷ் சார், ரங்கா சார் குரல்தான் சின்ன நம்பிக்கையாய் காதில் ஒலிச்சது.

எங்களைத் தேடி வந்தவங்களோட ( சுரூர், கிராமத்துக்காரர் ஒருவர்) விசில் சத்தமும், தூரத்தில் தெரிஞ்ச டார்ச்லைட் ஒளி வட்டம்தான், அந்த ஒட்டுமொத்த இரவுக்கான வெளிச்சமாய் இருந்தது.

அவங்க எங்களைக் கண்டுபிடிச்சிடுவாங்க; அவங்க கொண்டு வர போர்வையைப் போர்த்துக்கிடலாம்னு, எண்ணத்தில்தான் நான் தூங்கவே செஞ்சேன்.

விடியற்காலையில், இருட்டு சுத்தமாய் வெளுத்துப் போயி, வானம் கொஞ்சமாய் சிவந்தது; நாங்க இருந்த இடத்திற்கு எதிரில் பார்க்கமுடிந்தது. 'பிழைச்சோம்' கிற முழு நம்பிக்கை.

அந்த விடியல், ஒரு அற்புதமான விடியல்.

*****

சின்னச் சின்ன சுவராஸ்யங்கள் ?

என்னை அட்டைப் பூச்சி கடிச்ச உடனே, கிருஷ்ணா ஃபோட்டோ எடுக்க ஆரம்பிச்சிட்டான் வழக்கம்போல. கூட ராமன் சாரும் சேர்ந்திட்டாரு.

கிருஷ்ணாவையும் மாமுவையும் (துபே சார்) கூட்டிக்கிட்டு வரதுக்குள்ளாற, ஐயைய்யோ.., ஃபோட்டாவா பிடிச்சுத் தள்ளிட்டாங்க.

மாமூ ஏற முடியாம ஏறும்போது கூட, நாகராஜனைத் திட்டிக்கிட்டே வரார்.

ராமன் சார்தான் நம்பர் 1. கிடு கிடுன்னு ஏறிப்போய்கிட்டே இருந்தாரு!



உண்ணி வழக்கம் போல 'பொறுப்பு'. அந்த இரவு "இன்னும் ஒரு மாசாத்தில் கல்யாணம்னு" பொறுப்புணர்ச்சியின் சிகரம்.

திலக் எப்பவுமே சீரியஸா ஜாலியா இருப்பான்.

"ஒரு பெண்ணாலா இதெல்லாம் முடியுமா?" அப்படீன்னு கேள்வி கேட்கறது மடத்தனம்னு, புரியவைக்கிறது - மாலதி.

ஜோயல் சொன்ன டிரக்கிங் கதைகள்தான், தங்கியிருந்த இரவில் சுவராஸ்யமானது. ஏங்க முன்னாடியே சொல்லலைன்னு கேட்டால், "நான் சொன்னால், எங்க கேட்கறீங்க" ன்னு சொல்றார்.

ரெஸ்க்யூ(Rescue) டீம் கொண்டு வர்ற, பிரியானில லெக் பீஸ் தனக்குத்தான்னு கிருஷ்ணா சொன்னதுதான், அந்த நேரத்து சிரிப்பு.

மாமூ நைட்டு பூரா குடை பிடிச்சுக்கிட்டே உட்கார்ந்திருக்கிறாரு.

அந்தக் குளிரிலும் கண்ணு சொக்குச்சு பாருங்க! அதுதான் தூக்கம்.

*****

ஜாலியான டிரிப்பா? அல்லது அட்வென்ச்சரா?

ஆறு மணி நேர டிரக்கிங்னு நினைச்சுக் கிளம்பும் போது நல்லாத்தான் இருந்தது. மலையில் இருந்து கீழ் இறங்கிறவரைக்கும் ஜாலிதான். அப்புறம், எதிர்பாராத அட்வென்ச்சர்தான் (பிழைச்சிட்டோம்ல).

*****

முதல் கேள்விக்கு எனக்குப் பிடித்த பதில்.

கொடைக்கானல் விட்டு கிளம்பும் போது, கடைசியா எல்லாக் குழைந்தைகளும் என் முதுகுல நல்லா அடிச்சாங்க. அப்ப ஃபீல் (feel) பண்ணியது.

Life is so Beautiful (வாழ்க்கை மிகவும் அழகானது).

Saturday, March 23, 2013

சில நேரங்களில் சில மனிதர்கள்



ஜெயகாந்தன் அவர்களின் சில நேரங்களில் சில மனிதர்கள் புத்தகம் - நம் சமூகத்தின் சவால் என்றுதான் படித்தவுடன் தோன்றியது.

அதற்கு முன் அவருடைய சிறுகதை 'அக்னிப் பிரவேசம்' படித்துவிட்டேன் (முதலில் அந்த சிறுகதையைப் படியுங்கள்).

ஒரு கல்லூரியில் படிக்கும் பெண், மழைக்காக ஒருவருடன் காரில் செல்கிறாள். அவள் அசட்டுப்பெண் போல் இருந்ததால், அவன் அவளைக் கற்பழிக்கிறான். அந்தப் பெண்ணின் அம்மாவுக்கு தெரிந்ததும், அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி, தலையில் தண்ணீர் ஊற்றி, எல்லா அழுக்கும் போய்விட்டது என்கிறாள்.

இந்தச் சிறுகதை அக்காலத்தில் ஒரு பெரிய புரட்சியாக இருந்திருக்கிறது. பாவம், ஜெயகாந்தன் அவர்கள், ஏராளமாய் திட்டு வாங்கி இருகிறார்!

ஒருவேளை அவளுடைய அம்மா, அவள் கற்பிழந்ததை மறக்கவில்லையென்றால்? ஊர்முழுதும் தெரிந்திருக்கும். அப்புறம். அதுதான் சில நேரங்களில் சில மனிதரகள் கதை!

நல்ல நாவல்! ஜெயகாந்தன் அவர்களின் சிறந்த படைப்பு.

அந்த கதையில் எனக்குள் உண்டான சில (புரட்சிகரமான! ) எண்ணங்களுக்காக, இந்த பதிவு.

******

கற்பு

கற்பிழத்தல் என்பது சாக்கடைக்குள் விழுந்தது போல்தான். குளித்தால் உடல் நாற்றம் போய்விடும். மனம் எப்பொழுதும் சுத்தமாகத்தான் இருக்கும்! தேவையெல்லாம் மனம் மாற்றம்தான்!


திருவள்ளுவர் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை. கற்பு என்ற வார்த்தையை அகராதியில் இருந்து நீக்கி விடுவோம். அந்த வார்த்தையின் கவர்ச்சியால், கலாச்சாரம் காப்பற்றப்பட்டதோ இல்லையோ, பாவம்! சிலர் மட்டும் அவதிக்குள் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அது வெறும் மாயை என்று பெண்களும், பின் நாமும் புரிந்துகொள்ள வேண்டும்.

புரட்சி

இந்தக்கதை எனக்குப் புரிய வைத்த மிக முக்கியமான விஷயம். புத்திசாலிகளின் மிகப்பெரிய முட்டாள்தனம், இந்த சமூகத்தின் முட்டாள்தனத்தை தனியே எதிர்ப்பது.

இங்கு எல்லோரும் முட்டாள்கள் என்று முதலில் தோன்றும் பின், ஏதோ புரட்சி செய்வதாய் எண்ணிகொண்டு எல்லோரிடம் திமிராய் (அவர்கள் பார்வையில்) நடக்கவேண்டி இருக்கும். அதனால் இங்கு எதுவும் மாறப்போவதுமில்லை.

புரட்சி என்ற விஷயமே பெரும் சவால்தான். சமூகத்தில் இருந்து விலகி நின்றோ, அல்லது எதிர்த்து நின்றோ எதையும் மாற்ற முடியாது!
நிச்சயம் அது தனி மனிதனால் செய்யப்படுவதில்லை. குறைந்தப்பட்சம், அதை நம்பகூடிய சில முட்டாள்களாவது தேவை! அல்லது சில முட்டாள்தனமான செயல்களால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.

குறைந்தபட்சம் இந்தப் பதிவுகள் எழுதுவதன் மூலம்!