Sunday, August 25, 2013

நாகேஷ்



சர்வர் சுந்தரம் படம் பார்த்தபின் எழுதும் பதிவு இது. இது நிச்சயம் விமர்சனம் அல்ல. அவரின் நகைச்சுவையைத் தாண்டி, நான் ரசித்ததைப் பகிர்கிறேன்.

அதில் உள்ள சில காட்சிகள் மனதை உலுக்கி எடுத்தது. வறுமையை இவ்வளவு நிஜமாக 'அப்பாவித்தனமாக' நடித்திக்காட்டி இருக்கிறார், நாகேஷ்.

நண்பன் வீட்டில் பார்க்கும் விலை உயர்ந்த சட்டையை தடவிப்பார்க்கும் காட்சி, அதன் விலையை கேட்டு வியக்கும் காட்சி, கீழே விழும் ஐந்து பைசாக் காசைத் திரும்பத் திரும்ப எடுக்கும் காட்சிகள் - வறுமையை வட்டம் போட்டு காண்பிக்கும்.

முன்பெல்லாம், சார்லி சாப்ளின் படங்கள் சிரிப்பை ஊட்டும் விதமாக இருந்தன. ஆனால் இப்பொழுதெல்லாம் அதன் பின்னால் சார்லி சாப்ளின் காண்பிக்கும் வறுமைதான் தெரிகிறது.

அப்படித்தான் இருந்தது சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் அவர்களின் நடிப்பு.

அதே போல்தான், திருவிளையாடல் படத்தில் 'தருமி'யாக உலாவரும் காட்சிகள். நகைச்சுவைக் காட்சியாயினும், தருமியின் வறுமையும், பரிசில் காட்டும் ஆசையும், கடைசியில் அவரடையும் அவமானமும் - என்னைச் சிரிக்க வைப்பதில்லை. அந்தக் காட்சிகளில் அவர் 'நடிகர்' திலகத்தை மிஞ்சியதாகவே, எனக்குத் தோன்றும்.

எதிர் நீச்சல் படம் முழுக்கச், சார்ந்து வாழும் ஒரு வாலிபனின் ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்து காட்டியிருப்பார் நாகேஷ். ஒரு பைத்தியத்தைக் கூடத் திருமணம் செய்து கொள்ளத் தயார்படுத்திக் கொள்ளுவது - நிச்சயம் நல்ல நகைச்சுவை!

பொருளாதாரத்தில் முன்னேறி இருப்பவர்கள் கூட்டத்தில் தான், வறுமையில் வாடுபவன் பளிச்செனத் தெரிகிறான். அவன் படும் அவமானம் சிரிப்பூட்டும் காட்சிகளாக தெரிவது - என்ன வகை அதிசியம் என்று புரியவில்லை!

நாகேஷ் ஒரு சிறந்த நடிகர். அவருடைய இருப்பிடம் இன்றும் நிரப்பபடாமல், தமிழ் சினிமா உலகம் வறுமையில் வாடுகிறது.


No comments: