Saturday, January 12, 2013

தேவை




எது தேவை? என்ற கேள்வி பலவாறு சிந்திக்க வைக்கிறது.

தேவைகளைப் பூர்த்திசெய்வதுதான் வாழ்க்கை என்றால், அது எப்பொழுது நிறைவு பெறும்? நிறைவு பெற்ற ஒரு தேவையின் சந்தோஷத்தில் பல தேவைகள் பிறக்கின்றன. தேவைகள் பெறுகிக்கொண்டே இருக்கிறது.

உண்மையாக எது தேவை என்று யோசித்தால், எதுவுமில்லை என்றே தோன்றுகிறது; இருப்பதே போதும் என்கிறது.

பற்றிக்கொள்ள எதுவுமே இல்லை என்றால், எப்படிப் படரும் வாழ்க்கைக் கொடி!

*****

சரி கேள்வியை மாற்றிக் கேட்டால்! சமுதாயத்திற்கு என்ன தேவை?

ஒரு பெரிய முள் காடாய் தெரிகிறது. முரட்டுத்தனமாய் தனி மனிதத்தேவைகள் வேரூன்றி, சின்னவைகளை நசுக்கிக் கொண்டிருக்கிறது.

வளைந்து கொடுக்கும் ஒரு கூட்டம், கொடிகளாய் பின்னிப் பிணைந்து எதையும் மாற்றமுடியாத பலமான முள் காடாய் வளர்ந்திருக்கிறது.

சொகுசாய் வாழ்ந்த ஒரு கூட்டம், ஒரு முள் கீறியவுடனே, "அந்த மரத்தை வெட்டு" என்று கூக்குரலிடுகிறார்கள். அந்த மரத்தின் மரணத்தில், நியாயம் கிடைத்ததாய் சந்தோஷம்.

வேர்களை அறுக்க முடியாதவர்கள், எல்லாவற்றையும் தீயில் கொளுத்து என்கிறார்கள்.

சிலர், இங்கு எதையும் மாற்ற முடியாது என்கிறார்கள்.

*****

தான் மட்டும் வளர்ந்து, சுற்றியுள்ளவர்களை நசுக்குபவர்கள் எல்லாமே முட்செடிதான்.

தோட்டக்காரர்களை குறைகூறுவதை விட்டுவிட்டு, தன்னை சுற்றியுள்ளவர்களுக்கும் உரமிட்டு வளர்த்தால்தான் (குறைந்தபட்சம் மற்றவர்களை வளர விட்டால்தான்) காடு செழிக்கும்

No comments: