Friday, January 25, 2013

புத்தக கண்காட்சி



இந்த வருடம் (2013), புத்தக கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் நடந்தது. நல்ல பெரிய திடல். பொறுமையாக புத்தகம் பார்ப்பது என்று முடிவு செய்ததால், மூன்று முறை ஐந்தைந்து வரிசையாக புத்தகங்களைப் பார்வையிட்டேன்.

பொஙகல் அன்று, பிரபு சார், ரங்கா சார், கமல் உடன் போயிருந்தேன். முக்கியமாய் எழுத்தாளர் ராம்கிருஷ்ணன் பேச்சைக் கேட்கவே சென்றிருந்தேன்.

பிரபு சார் அவர் பொண்ணுக்கு மால்குடி டேஸ் புத்தகங்களை வாங்கினாரஎப்பொழுதும் போல் வித்தியாமாக கணக்கு சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கியிருந்தார். ரங்கா சார்  தன் பொண்னுக்கு ஏகப்பட்ட புத்தகங்களை வாங்கினார். கமல் சே-குவாரா, லெனின், ஓஷோ புத்தகங்களைப் பார்த்துவிட்டு, இந்திரா சௌந்திரராஜன் புத்தகங்களை வாங்கினான்.

*****

ராமகிருஷ்ணன் அவர்கள் கதைகளைப் பற்றி பேசினார். கதைகள் நாடு விட்டு நாடு போன கதைகளையும், சொல்லாமல் விடப்பட்டதால் வெளிவரக் காத்திருந்த கதையையும் கூறினார். "காலியாக இருந்த நாற்காலிகளைக் காட்டி, இதில் நிறைய கதைகள் இருக்கின்றன; நம் எல்லோருக்குமே கதையின் பாத்திரமாக ஆகும் ஆவல்தான், கதைகளாகத் திரிகின்றன" என்றார்

"கதையில் எவ்வளவு கற்பனை இருக்க வேண்டும்? உணவில் எப்படி உப்பு தேவையான அளவு இருக்க வேண்டுமோ, அதுபோல் கதையில் கற்பனை தேவையான அளவு இருக்கவேண்டும்" என்றார்.

*****

மாட்டுப்பொஙகல் அன்று நானும் அம்மாவும் போயிருந்தோம். அம்மா எல்லாவற்றையும் ஆச்சர்யாமாக பார்த்துவிட்டு ஒரு புத்தகத்தை வாங்கினார்கள்; ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் புத்தகத்தை விரும்பியதால், அதையும் வாங்கினோம்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை சுபம் (நண்பர் சுப்பிரமணியன்), அவர் மனைவியோடு வந்திருந்தார். நாங்கள் சுற்றிப்பார்த்து விட்டு கலைவாணி அவர்கள் கேட்ட (வலசை, ஒன்றுக்கும் உதவாதவன், பசித்த பொழுது) புத்தகங்களை வாங்கிக்கொண்டோம்.

இறையன்பு எழுதிய பத்தாயிரம் மைல் பயணம் புத்தகத்தை சுபம் வாங்கினார். மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை புத்தகத்தை சுபம் எனக்கு வாங்கிக் கொடுத்தார்.

*****

எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் திருமகள் பதிப்பக ஸ்டாலுக்கு வந்திருந்தார். கங்கைகொண்ட சோழன் புத்தகம் வாங்கலாம் என்றால், இல்லையென்று சொல்லிவிட்டார்கள்.

எனக்குப் பிடித்த "என் கண்மனித் தாமரை" புத்தகத்தை வாங்கி, அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கினேன். அவரைப் பார்க்கவேண்டும் என்ற நெடுதாள் ஆசை நிறைவேறியது (இதற்கு இன்னொரு பதிவு எழுதவேண்டும்).


*****

ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகம் எதுவும் வாங்கவில்லையென்றாலும், அவர் பரிந்துரை செய்த புத்தகங்களை வாங்கிய திருப்தி.

வாங்கிய புத்தகங்கள் :-

வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
நாளை மற்றும் ஒரு நாளே ஜீ.நாகராஜன்
புத்தம் வீடு - ஹெப்ஸியா ஜேசுதாசன்
வாசவேஸ்வரம் கிருத்திகா
நித்யகன்னி எம்.வி.வெங்கட்ராம்
பசித்த மானுடம்  கரிச்சான்குஞ்சு
கடல்புரத்தில்  வண்ணநிலவன்
ஏழாம் உலகம் - ஜெயமோகன்
புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம்
தென்னாட்டுச் செல்வங்கள்
கி.ரா வின் நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை - குர்சரண் தாஸ்
என் கண்மனித்தாமரை - பாலகுமாரன்
முன்பே வா அன்பே வா - பாதை நண்பர்களின் புக்கிசை நாவல்

No comments: