Thursday, February 24, 2011

பாரம்பரிய நம்பிக்கைகள்



டில்லிக்கு ரயிலில் செல்வதில் எனக்கு பிடிச்ச விஷயம் - நீண்ட நாட்களாய் படிக்காமல் வைத்திருக்கும் புத்தகத்தை படிக்கலாம்.

இந்த முறை நான் படித்த புத்தகம். ஜெய்ஷ்ரீ மிஸ்ரா வின் 'ஏன்ஷியன்ட் பிராமிஸஸ்' (Jayshree Misra’s ‘Ancient Promises’).



இந்த ஆங்கில புத்தகத்திற்கு தமிழ் தலைப்பு யோசிப்பதில்தான் சிரமம்.

*****

இந்த கதை ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பற்றியது - காதல், திருமணம் , டைவோர்ஸ், தாய்மை.

நமது கலாச்சாரத்தில் ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கையை அலசுகிறது. அந்த திருமணக் கட்டுக்குள் வாழ்வதற்கான சமரசங்களையும் மீறுவதற்கான சந்தர்ப்பத்தையும் கதையாய் சொல்லப்பட்டிருக்கிறது.

டில்லியில் பிறந்து வளரும் ஒரு கேரளப் பெண் நவீன கலாசாரத்திற்கும் கேரளப் பராம்பரிய வாழ்க்கை முறைக்கும் சமரசம் செய்ய நேரிடுகிறது. அவளுடைய முதல் சமரசம்.

அவள் பள்ளியில் சகமாணவிகளிடம் 'தென்னிந்திய குணங்களுக்கான' கிண்டலுக்கிடையிலும் அவர்களின் நட்பும் கலாச்சாரமும் இயல்பாகிறது. அதே சமயம் கேரளாவில் 'டெல்லிப் பெண்' என்று அந்நியமாகிறாள்.

பள்ளிக்கூட காதலையும், பருவ வயது அத்துமீறல்களையும் அனுபவிக்கிறாள். ஆனால் பெற்றோர்களின் குறுக்கீட்டால் கேரளாவில் பணக்கார குடும்பத்திற்கு வாழ்க்கைப்படுகிறாள்.

இங்கு திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் உறவு மட்டுமல்ல. இரு குடும்பங்களின் புது உறவு. பெரும்பாலும் பெண், ஆணின் குடும்பத்திற்கு ஏற்ப மாற வேண்டியுள்ளது. கணவனின் குடும்பம் அவளிடம் அந்நியத்தன்மையுடன் இருக்க, அவளுடைய எல்லா சம்ரசங்களும் ஒட்டாமல்- அந்நியமாய் இருக்கிறாள்.

மிகப்பெரிய சோகம் - அவளுக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு மனநிலை சரியில்லை! அவள் கணவனும் புகுந்த வீடும் 'சற்று தள்ளியே' நிற்கிறார்கள்.


(இந்த கதையில் பிடித்த விஷயம்) தன் குழந்தையை மனநிலை சரியில்லாதவர்களுக்கான 'சிறப்பு' பள்ளியில் சேர்க்க விரும்புகிறாள். தன் குடும்பத்தை மீறி ஒரு பள்ளியில் சேர்த்து, அங்கேயே வேலையும் செய்கிறாள்.

வெளிநாட்டில் இவர்கள் சாதரணமாய் நடத்தப்படுவதும், ஸ்பெஷலாக பள்ளியில் சேர்த்து வழிநடத்துவது அறிகிறாள். அதற்காக பட்டப் படிப்பை முடித்து, வெளிநாட்டில் 'ஸ்பெஷல் எடுகேஷன்'(special education) கோர்ஸில் சேரவதற்கான  முயற்சிகளை மேற்கொள்ளுகிறாள்.

இச்சூழலில் மீண்டும் தன் பள்ளிக் காதலனுடனான சந்திப்பில், ‘அத்துமீறுகிறாள்’. அவன் தரும் நம்பிக்கையில், திருமணக் கட்டுக்குள்ளிருந்து வெளியேற முயற்சிக்கிறாள். 

பாரம்பரிய நம்பிக்கையிலிருந்து அத்துமீறுகிறுவதற்கான தண்டனையை அனுபவித்து, கடைசியில் விடுபடுகிறாள்.

காதலனுடன் சேர்வதும், தன் குழந்தைக்கான போராட்டம் முடிவுக்கு வருவதும் - புதிய நம்பிக்கை.

*****


மனநிலை பாதிப்புக்குள்ளான குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே இன்னும் வைத்திருப்பது சரியா? அவர்களுக்காக பள்ளிகூடமும் படிப்பும் உண்டடென்றால் நம் நாட்டில் என்று சாதரணமாய் வழங்கப்படும்?

பொருளாதாரப் போராட்டத்தில் வாழ்பவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சுமைதானே?

விடைதெரியாத கேள்விகளில் எந்த பலனுமில்லை! நிற்க!

*****

இந்தக் கதையை படித்த பின் தோன்றிய கருத்து!

திருமணத்திற்குப் பிறகு ஆணும் எவ்வளவு சமரசம் செய்கிறான். தன்னுடைய குடும்பத்திற்கும் மனைவிக்கும் இடையில் 'அவதிப்படுவது' நிஜம்தானே!

பெரும்பாலும் மருமகளுக்காக 'தன் இயல்பை' விட்டுக்குடுத்துதானே வாழ்கிறார்கள்.

திருமணம் ஒரு பாரம்பரிய நம்பிக்கைதான். ஒரு கால் கட்டுதான். பரஸ்பர நம்பிக்கையில்தான் எல்லாமே இருக்கிறது.

'அன்பு' என்ற செல்வம் இருந்தால் நம்பிக்கைக்கும் சந்தோஷத்திற்கும் பஞ்சம் இருக்குமா?

2 comments:

மதுரை சரவணன் said...

புத்தகப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Shalini(Me The First) said...

:)
அன்பு, இந்த பாரம்பரிய நம்பிக்கைகளுக்காக இன்னும் சிலுவை சுமந்து கொண்டுதான் இருக்கிறது.