பத்தாவது படிக்கும்
போதுதான் முதல் முறையாக 'கட்' அடித்தேன். அது கூட மதிய உணவு வேளையில் பள்ளியை விட்டு
வெளியே போனேன். போன இடம் எங்க ஊர் பொது நூலகம்.
அங்கு உறுப்பினரான
பின், வாரம் ஒரு முறையாவது செல்லாமல் இருந்ததில்லை. விடுமுறை நாட்களில், வெள்ளிக் கிழமை
எடுத்த புத்தகங்களை, படித்து முடித்து ஞாயிற்று கிழமையே திருப்பிக் கொடுத்தது பலமுறை.
நூலகத்திலேயே
புத்தகம் படிப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. புத்தகங்கள் எடுத்து வீட்டில்
படிப்பதுதான் விருப்பம்.
என்னுடைய ஒவ்வொரு
தேடலும் அந்த நூலகத்திலிருந்தே ஆரம்பித்தது. நான் தொலைந்து போகும் போதெல்லாம், எனக்கு புகலிடம்
கொடுத்து, என்னை
திருப்பிக் கொடுத்ததும் அந்த நூலகம்தான். 'நான்’ என்று விளக்கம்
கொடுக்கும் வார்த்தைகள் எல்லாம், அங்கிருந்துதான்
எடுக்கப்பட்டது.
எங்க ஊரில் எனக்கு
பிடித்த இடமானது, அந்த நூலகம்.
*****
சென்னையில் கடல்
எவ்வளவு பிரம்மாண்டமாய் உணர்ந்தேனோ, அது போல்தான் கன்னிமரா நூலகமும் தோற்றம் அளிக்கிறது.
அந்தக் கடலில்
பிடித்த புத்தகங்களை தேடுவது எளிதல்ல. அவைகளைக் கண்டுபிடிப்பதற்கு கம்ப்யூட்டரில் தேடும்
வசதிகள் உள்ளன. அதனால் குறிப்பிட்ட அலமாரியில் தேடுவது எளிதாயிற்று.
ஆனாலும் நினைத்த
புத்தகங்களைத் தேடும் போதுதான், பல புத்தகங்கள் பிடித்தவிதமாய் கிடைக்கின்றன.
வாழ்க்கையில்
தேடியது கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்தது பிடிக்கும் இடமாய் இருக்கிறது, நூலகம்!
உங்கள் அருகில்
இருக்கும் நூலகத்தை 'மிஸ்' பண்ணாமல், ஒரு முறையேனும் தரிசித்து பாருங்கள்!
*****
பி.கு:
இபோழுது இன்டர்நெட்டில் புத்தகங்களை
ரிசர்வ் செய்யவும், எடுத்த புத்தகங்களை புதுப்பிக்கவும், கன்னிமரா நூலகம் வசதிகள் ஏற்படுத்தி
உள்ளன.
