Tuesday, February 8, 2011

பாசாங்கு



ஏற்கனவே நான் எழுதி, யாருக்கும் புரியாமல் போன 'இயல்பு' பகுதியோட ரீமேக்.


பாசாங்கு - நடிப்பு. போலித்தனம். இயல்பற்ற நிலை.

பாசாங்கு ஏன் தேவைப்படுகிறது?

நம்முடைய உணர்வுகள் (Emotion) எப்பொழுதும் அதே போல் வெளிப்படுத்த முடிவதில்லை. கொஞ்சம் அதிகப்படியாகவோ அல்லது கொஞசம் குறைவாகவோ, பாசாங்கோடுதான் வெளிப்படுத்த முடிகிறது. இது இயல்பு (Nature).

நம்மைச் சுற்றியுள்ள நபர்களுக்காகவும், சில சூழ்நிலைகளுக்காகவும், நம்முடைய இயல்பான நிலையை மீறி பாசாங்காக செயல்பட வேண்டியிருக்குது.

உதாரணத்திற்கு.. 

1.நிஜமாலும் உணர முடியாத பிறருடைய சோகங்களுக்கு, பாசாங்காய் வேதனைப் படுதல்.

2. நம்மால் அனுபவிக்க முடியாத பிறருடைய சந்தோஷங்களுக்கு, போலியாய் புன்னகை செய்தல்.
3. ‘பிறர் என்ன நினைப்பார்களோ’, என்று நினைத்து செய்யும் ஒவ்வொரு செயல்களிலும்.

4. ‘நான் இப்படித்தான்’, என்று நிரூபிக்கும் பொருட்டு செய்யும் செயல்கள்.

விருப்பமில்லாதவைகளில் பாசாங்காய் இருக்க முடியாது.

விருப்பமில்லாத சூழ்நிலையிலும் சிலருடைய பாசாங்குகள் இயல்பாய் வெளிப்படுவதைக் கண்டு ஆச்சர்யப்படுகிறேன். அவர்கள் எப்பொழுதுதான் இயல்பாய் இருப்பார்கள். ஒருவேளை நான்தான், தப்பாய் பாசாங்கு என்று கற்பிதம் செய்துகொள்கிறோனோ?

சிலசமயம் சிலருடைய அதிகப்படியான பாசாங்குகள், போலியாய் படும். அப்போதெல்லாம் கவனிக்கும் போது என்னுடைய போலித்தனங்கள் 'வெட்ட வெளிச்சமாய்' தெரிகிறது.

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றியவுடன், கொஞ்சம் கொஞ்சமாய் தளும்புவது ( சிறு அலைகள் ), சுற்றியுள்ளவர்களின் போலித்தனங்கள் சலனங்களாய் எனக்குள் தளும்புகின்றன.

இல்லை. என்னுள் எந்த போலித்தனமும் இல்லை என்று எண்ணும் போதுதான் பாசாங்குகள் அதிகப்படியாய் வெளிப்படுகின்றன.

என்னை வரையறுக்கும் சமன்பாடுகள்தான், பாசாங்கு வட்டத்திற்குள் தள்ளிவிடுகின்றன.

இயல்பாக இருக்கிறேன் என்ற எண்ணத்தை உதறும்போதே, வட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிகிறது.

இயல்பற்ற நிலையை ஏற்கும்போதெல்லாம் பாசாங்குகளும் மறைகின்றன.