Saturday, June 21, 2008

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு


காணாமல் போனவரின் பெயர் சக்கரவர்த்தி. வயது 27. உயரம் 5 அடி, 2 அங்குலம். அவர் நான்கு நாட்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு சென்றவர் இன்னும் திரும்பவில்லை. அவருடைய செல்போனிற்கு தொடர்பு கொண்டும் பலனில்லை. அவர் காணாமல் போன அன்று வெளிர் பச்சை கலர் கட்டம் போட்ட சட்டையும் பச்சை கலர் பேண்ட்டும் போட்டிருந்தார்.

காணாமல் போனவரின் பெயர் கண்ணன். வயது 25. உயரம் 5 அடி 10 அங்குலம். அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு சென்றவர் இன்னும் திரும்பவில்லை. அவருடைய செல்போனிற்கு தொடர்பு கொண்டும் பலனில்லை. அவர் காணாமல் போன அன்று வெள்ளை கலர் சட்டையும் கருப்பு கலர் பேண்ட்டும் போட்டிருந்தார்; பாலிஷ் போட்ட பிரவுன் கலர் ஷு வும் போட்டிருந்தார்.

காணாமல் போனவரின் பெயர் கந்தசாமி. வயது 28. உயரம் 5 அடி 3 அங்குலம். அவர் தினமும் காலையில் 9 மணிக்கு அலுவலகத்திற்கு போகிறவர். அங்கேயே தொலைந்து போய்விடுபவர். அதே சமயம், தினமும் இரவு 12.30 மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுபவர். ஆனால் நேற்று அலுவலகத்திற்கு சென்றவர் இன்னும் திரும்பவில்லை.

காணாமல் போனவர்கள் அனைவரும் ஒரே அலுவகத்தில் வேலை பார்ப்பவர்கள். அதனால் தேவனிடம் வேண்டிக் கொண்டதிற்கிணங்க, துப்பறியும் சாம்பு அந்த அலுவலகத்தில் சேர்ந்து, துப்பு துலக்கினார்.

அவர் அளித்த பகிரங்க ரிப்போர்ட்:

கந்தசாமி - அனைவராலும் நல்லவர் என நம்பப்படுபவர். அவருடைய வேலையை கனக் கச்சிதமாக செய்துமுடிப்பவர். அலுவலகத்திற்கு வெளியே (அதாவது வீட்டில் ! ) எந்த வேலையும் இல்லாததாலும், தோழிகள் யாரும் இல்லாததாலும், பணி நேரம் - (ஆஃபிஸ் டைம் என்றே சொல்லிவிடுகிறேன்). ஆஃபிஸ் டைம் முடிந்தும் மற்ற வேலைகளையும் திறம்பட செய்ய ஆரம்பித்தார். அதனால் சந்தோஷமடைந்த மேனஜரும் அவருக்கு இன்னும் அதிக வேலைகள் கொடுக்க ஆரம்பித்தார். கந்தசாமியும் இரவு 11.30 மணிக்குள் வேலையை முடித்துவிடுவார். இப்படித்தான் தினமும் அவர் அலுவலகத்திலேயே தொலைந்து போய்விடுகிறார்.

கண்ணன் - அனைவராலும் புத்திசாலி என நம்பப்படுபவர். அவரை அலுவலக ஆந்தை என்றே சொல்லலாம். அதாவது பகலில் அலுவலகத்தில் எங்கே என்ன வேலை செய்கிறார் என்று யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆனாலும் இரவில் கண் விழித்து அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விடுபவர். இப்படியாக இவரும் அலுவலகத்திலேயே தொலைந்து போய்விடுகிறார்.

அவர்கள் இருவரும் அடிக்கடி மேனஜரிடம் நல்ல பெயர் வாங்குவதை கண்டு - அவ்வப்போது வேறு சிலரும் இரவில் வந்து தாங்களும் தங்கள் வேலைகளை செய்ய ஆரம்பித்தார்கள். அதாவது 10 மணி நேரத்தில் செய்யவேண்டியதை திறமையாக 26 மணி நேரத்தில் முடித்து விடுகிறார்கள்.

அலுவலக கலாச்சாரமும் முற்றிலும் மாறி, எல்லோரும் இரவு பகலும் பிஸியாக வேலை செய்தார்கள். ஒழுங்காக வேலையை முடிக்கும் ஒரு சிலரும் -
சரியான நேரத்தில் கிளம்புவதால் மேனஜரின் முறைப்புக்கும், மற்றவர்களின் ஏளனப் பார்வைக்கும் ஆளானார்கள்.

எல்லோரையும் கவனித்த சக்கரவர்த்தி - தன்னுடைய பெயரை பொன் எழுத்துக்களால் பொறிக்க அதிரடியாக செயல்பட்டார்.

“ பகலில் அடிக்கடி காபி குடித்தும்
ஃபோனில் அரட்டை அடித்தும்
இரவு வரை இன்டர்நெட்டில் உலாவியும்
ஒய்வறையில் படுத்து தூங்கியும்
கொஞ்ச நேரம் வேலை பார்த்தும்
ஒன்றரை நாளில் செய்யவேண்டியதை -
அலுவலகத்தில் தங்கி நான்கே நாளில் வேலையை முடித்துவிட்டார் !”

இவ்வாறு அவர்கள் மூவரையும் கண்டுபிடித்து, வீட்டிற்கு அனுப்பிவைத்தேன். ஆனாலும் அவர்கள் அடிக்கடி தொலைந்து போக வாய்ப்பிருப்பதால் பின்வரும் வழிகளை பின்பற்றலாம்.

1. அதிக நேரம் வேலை பார்ப்பதற்கு கொடுக்கப்படும் ஊக்கத் தொகையை நிறுத்திவிட்டு, இன்டர்நெட்டில் உலாவுவதற்கான பணத்தை வசூலிக்கலாம்.
2. இரவில் தேவையே இல்லாமல் தங்குபவர்களுக்கு வாடகை வசூலிக்கலாம்.
3. பிரம்மச்சாரிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.
4. ஆறு மணிக்கு மேல் தொல்(லை)க்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்களை காண்பிக்கலாம்.
5. வேலையில் சேர்வதற்காக வைக்கப்படும் எழுத்து தேர்வை - வேலையில் சேர்ந்தபின் பின்வரும் கணக்குப் புதிரை கேட்கலாம்.

“ 2 பேர் 7 நாட்களில் (ஆஃபிஸ் டைமில்) ஒரு வேலையை முடித்தால், அதே 2 பேர் தொடர்ச்சியாக (எக்ஸ்டிரா டைமில்) அந்த வேலை பார்த்தால் - எத்தனை நாட்களில்
முடிப்பார்கள் ?"


இவற்றையெல்லாம் காரணமாக சொல்லி வேலையை விட்டுவிட்டு, துப்பறியும் தொழிலுக்கே வந்துவிட்டேன்.

குறிப்பு :

இன்ஃபோஸிஸ் நாரயண மூர்த்தி என்ற பெயரில் வந்த கடிதத்தில் இருந்த கருத்தையே வேறு வடிவில் எழுதியிருக்கிறேன். மற்றபடி தேவன் அவர்களையோ சாம்பு அவர்களையோ அல்லது வேறு யாரையுமோ கிண்டல் அடிக்கும் நோக்கத்துடன் அல்ல.

No comments: